
டெல்லி நோக்கி செல்லும் விவசாயிகள் பேரணி என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. உண்மையில் இந்த புகைப்படம் எப்போது எடுக்கப்பட்டது என்று ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive
கம்யூனிஸ்ட் கட்சிக் கொடியுடன் விவசாயிகள் பிரம்மாண்ட பேரணியாக நடந்து வரும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “டுவிட்டரில் மார்க்சிஸ்ட் கட்சி/ மகாராஷ்ட்ரா: விவசாயிகள் தில்லியில் 6 மாதங்களுக்கு தங்கும் முடிவோடு வந்துள்ளனர்.
இந்திய மக்கள் அவர்களை 9 மாதாங்கள் கூட தங்கவைக்க தயாராக உள்ளனர். மோடியும்- அமித்ஷாவும் எங்கே ஒளிந்து கொள்வர்? தேசம் தெரிந்துகொள்ள விரும்புகிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பதிவு Theekkathir தமிழ் நாளிதழ் தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் நவம்பர் 29, 2020 அன்று வெளியிடப்பட்டுள்ளது.

அசல் பதிவைக் காண: Facebook I Archive
இதே படத்தைப் பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். லெனின் முருகன் ஒ என்பவர் இதே பதிவை “டுவிட்டரில் மார்க்சிஸ்ட் கட்சி / மகாராஷ்டிரா” என்பதை மட்டும் நீக்கிவிட்டு பதிவிட்டுள்ளார். வேறு பலரும் இதைப் பகிர்ந்துள்ளனர்.
உண்மை அறிவோம்:
டெல்லி நோக்கி விவசாயிகள் நடத்தி வரும் பேரணி மற்றும் போலீசார் அதைத் தடுத்து நிறுத்த முயற்சித்து வருவது தொடர்பான படங்கள் என்று சமூக ஊடகங்களில் பல படங்கள் பகிரப்பட்டு வருகின்றன. அதில் பல உண்மையானதாகவும் சில பழைய படங்களாகவும் உள்ளன.
டெல்லி நோக்கி விவசாயிகள் பிரம்மாண்ட பேரணி நடத்தியது உண்மைதான். அவர்களை டெல்லிக்குள் அனுமதிக்க மறுத்து மத்திய அரசு தடை ஏற்படுத்தியதும் உண்மைதான். இந்த தகவலில் தவறு இல்லை. அது தொடர்பான அரசியலுக்குள்ளும் நாம் செல்லவில்லை.
டெல்லியில் ஆறு மாதங்களுக்கு தங்கும் முடிவோடு விவசாயிகள் வந்துள்ளார்கள் என்று குறிப்பிட்டிருப்பதன் மூலம் தற்போது நடந்து வரும் நிகழ்வின் போது எடுக்கப்பட்டது என்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது. படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது journalworker.wordpress.com என்ற தளத்தில் 2018ம் ஆண்டு நவம்பர் மாதம் டெல்லி நோக்கி விவசாயிகள் நடத்திய பேரணியின் போது எடுக்கப்பட்ட படம் என்று குறிப்பிட்டு செய்தி வெளியாகி இருப்பது நமக்குக் கிடைத்தது.
மத்திய அரசின் விவசாயிகள் விரோத கொள்கையைக் கண்டித்து நாடு முழுவதும் 26 மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லிக்குள் நுழையும் போராட்டம் நடத்தினர் என்று குறிப்பிட்டிருந்தனர்.

அசல் பதிவைக் காண: journalworker I Archive 1 I sabrangindia.in I Archive 2 I newsclick.in I Archive 3
sabrangindia.in என்ற இணையதளம் 2018 டிசம்பர் 2ம் தேதி இதே செய்தியை வெளியிட்டிருந்தது. நமக்குக் கிடைத்த இரண்டு பதிவுகளிலும் ஒரே செய்தி, ஒரே படம் இருந்தது. படத்தில் நியூஸ் கிளிக் என்று இருந்தது. எனவே, நியூஸ் கிளிக் என்ற தளத்திலிருந்து இந்த செய்தி மற்றும் படத்தை இவர்கள் எடுத்திருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தோம். தொடர்ந்து தேடிய போது, newsclick.in என்ற தளத்தில் 2018 நவம்பர் 30ம் தேதி இந்த செய்தி வெளியாகி இருந்தது.
அதே நேரத்தில் நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட படத்தில் உள்ளது போன்ற பேனர் பிடித்தபடி ஊர்வலம் சென்ற படங்களை பிடிஐ, Reuters உள்ளிட்ட செய்தி நிறுவனங்கள் எடுத்துள்ளன. அதை நியூஸ் 18 உள்ளிட்ட ஊடகங்கள் 2018 நவம்பர் 30ம் தேதி வெளியிட்டிருப்பதும் நமக்கு கிடைத்துள்ளது.

அசல் பதிவைக் காண: news18.com I Archive
நம்முடைய ஆய்வில், டெல்லியில் ஆறு மாதங்களுக்கு தங்கும் முடிவோடு வந்துள்ள விவசாயிகள் என்று பகிரப்படும் படம் 2018ம் ஆண்டு நடந்த விவசாயிகள் பேரணியின் போது எடுக்கப்பட்டது என்பது உறுதியாகிறது. அதுவும் விவசாயிகள் பேரணி என்பதால், இந்த பதிவு உண்மையும் தவறான படமும் சேர்த்துப் பகிரப்பட்டுள்ளது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
2018ம் ஆண்டு நடந்த விவசாயிகள் பேரணி படத்தை 2020 நவம்பரில் நடந்ததாக பதிவிட்டிருப்பதை ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் தகுந்த ஆதாரங்களுடன் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:டெல்லியை முற்றுகையிட வந்த விவசாயிகள்?- பழைய புகைப்படம்!
Fact Check By: Chendur PandianResult: Partly False
