கொரோனா காலத்தில் ஹரித்வார் கும்பமேளாவுக்கு கூடிய கூட்டம் என்று சமூக ஊடகங்களில் சில படங்கள் பகிரப்பட்டு வருகின்றன. அவை உண்மையா என ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive

இந்தியாவில் கொரோனா தீவிரமாகப் பரவி வரும் நிலையில் ஹரித்வார் கும்பமேளா 2021ல் கூடிய கூட்டம் என்று சில படங்கள் பகிரப்பட்டு வருகின்றன. Senthilkumar Ksp Senthilkumar Ksp என்பவர் வெளியிட்டிருந்த பதிவில், "இந்த கும்பமேளா கும்பல் தான் இனி இந்தியா பூராவும் கொரோனா பரப்பும் செலக்டிவ் கண்டெய்னர்களோ??" என்று குறிப்பிட்டிருந்தார்.

அசல் பதிவைக் காண: Facebook I Archive

Karaiyil Irunthu என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2021 ஏப்ரல் 12 அன்று வெளியிட்டிருந்த பதிவில், "கண்டா வர சொல்லுங்க.. சிங்கிள் சோர்ஸ் பீலா மேடத்தை கையோடு கூட்டிகிட்டு வாங்க..!! கும்பமேளா" என்று குறிப்பிட்டிருந்தார். இவர்களைப் போல பலரும் இந்த படங்களைப் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

ஹரித்வாரில் 2021 கும்பமேளா தொடங்கியது உண்மைதான். அங்கு மிகப்பெரிய அளவில் கட்டுக்கடங்காத கூட்டம் கூடியிருப்பதாகச் செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. எனவே, மக்கள் கூடவே இல்லை என்று நாம் கூறவில்லை. ஹரித்வார் கும்பமேளாவையொட்டி 2021ல் கூடிய கூட்டத்தின் புகைப்படம்தானா என்று மட்டுமே ஆய்வு செய்தோம்.

முதல் படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். இப்போது அந்த படம் 2019ம் ஆண்டு அலகாபாத் (பிரயக்ராஜ்) கும்பமேளாவின் போது எடுக்கப்பட்டது என்பதற்கான பதிவுகள் நமக்குக் கிடைத்தன. இதன் மூலம், இந்த புகைப்படம் 2021 ஹரித்வார் கும்பமேளாவின் போது எடுக்கப்பட்டது இல்லை என்பது உறுதியானது.

அசல் பதிவைக் காண: ddnews.gov.in I Archive 1 I oneindia.com I Archive 2

அடுத்த படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அதுவும் 2019 பிரயக்ராஜ் கும்பமேளாவின் போது எடுக்கப்பட்ட படம் என்று தெரிந்தது. பிபிசி, தி கார்டியன் உள்ளிட்ட பல ஊடகங்கள் வெளியிட்டிருந்த செய்தியில் அந்த படத்தை பயன்படுத்தி இருந்தனர். ஏ.எஃப்.பி செய்தி நிறுவனம் இந்த புகைப்படத்தை எடுத்ததாக குறிப்பிட்டிருந்தனர்.

அசல் பதிவைக் காண: bbc.com I Archive 1 I theguardian.com I Archive 2

இதன் மூலம் 2019ம் ஆண்டு உத்தரப்பிரதேச மாநிலம் பிரயக்ராஜில் நடந்த கும்பமேளாவின் போது எடுத்த படத்தை, தற்போது 2021 ஹரித்வார் கும்பமேளாவின் போது எடுக்கப்பட்டது என்று தவறாகக் குறிப்பிட்டுப் பகிர்ந்து வருவது உறுதி செய்யப்படுகிறது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவில் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

2021 ஹரித்வார் கும்பமேளாவில் கூடிய கூட்டம் என்று பகிரப்படும் படங்கள் 2019ம் ஆண்டு நடந்த அலகாபாத் கும்பமேளாவின் போது எடுக்கப்பட்டவை என்பதை ஃபேக்ட் கிரஸண்டோ உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:ஹரித்வார் கும்பமேளா என்று பகிரப்படும் பழைய படங்கள்!

Fact Check By: Chendur Pandian

Result: False