
உத்தரப்பிரதேசத்தில் வருகிற நாடாளுமன்றத் தேர்தலையொட்டி நடைபெற்ற வேட்பாளர் தேர்வு ஆலோசனைக் கூட்டத்தில் பாஜக எம்.பி-யும் எம்.எல்.ஏ-வும் செருப்பால் அடித்துக்கொண்டனர் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
உத்தரப்பிரதேசத்தில் பா.ஜ.க நிர்வாகிகள் செருப்பால் அடித்துக்கொண்ட பழைய வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “உத்தரப்பிரதேசத்தில் வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பாஜக வேட்பாளர்கள் தேர்வுசெய்யும் ஆலோசனைக் கூட்டத்தில் தகராறு ஏற்பட்டு பாஜக எம்பி & எம்எல்ஏ செருப்பால் அடித்துக்கொண்ட வீடியோ சமூகவலைத்தளங்களில் பரவி வருகிறது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோ 2023 அக்டோபர் 25ம் தேதி ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டிருந்தது.

உண்மைப் பதிவைக் காண: twitter.com I Archive
உண்மை அறிவோம்:
ராஜஸ்தான், மத்திய பிரதேச சட்டமன்ற தேர்தலில் வேட்பாளர் பட்டியல் வெளியிடுவதில் காங்கிரஸ் கட்சிக்குள் மோதல் என்று பாரதிய ஜனதா கட்சி ஆதரவாளர்கள் சார்பிலும், பாரதிய ஜனதா கட்சிக்குள் மோதல் என்று காங்கிரஸ் கட்சி ஆதரவாளர்கள் சார்பிலும் இந்த வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டது. ஆனால், இது தவறான தகவல் என்று ஏற்கனவே, ஃபேக்ட் கிரஸண்டோ தமிழில் கட்டுரை வெளியிட்டிருந்தோம்.
தற்போது அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் வேட்பாளரைத் தேர்வு செய்வது தொடர்பாக உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சார்ந்த பாஜக நிர்வாகிகள் செருப்பால் அடித்துக்கொண்டனர் என்று சமூக ஊடகங்களில் சிலர் பகிர்ந்து வருகின்றனர். சம்பவம் நிகழ்ந்தது உத்தரப்பிரதேசத்தில்தான். அதே நேரத்தில் இது பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகள் கூட்டத்தில் நடந்ததா அல்லது வேறு நிகழ்வில் நடந்ததா என்று அறிய ஆய்வு செய்தோம்.
இது தொடர்பாக வெளியான செய்திகளைத் தேடி எடுத்தோம். இந்த செய்தி 2019ம் ஆண்டு மார்ச் மாதத்தில் வெளியாகி இருந்தது. 2019 நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. சாந்த் கபீர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில் இந்த சம்பவம் நடந்ததாக இந்தியா டுடே வெளியிட்டிருந்த செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது. மாவட்ட செயல் திட்டக் குழுக் கூட்டத்தின் போது இந்த சம்பவம் நடந்ததாகவும் அப்போது கலெக்டர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் அங்கு இருந்ததாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதன் மூலம் இந்த சம்பவம் பாஜக வேட்பாளர் தேர்வின் போத நடந்தது இல்லை, அரசு கூட்டத்தில் நடந்தது என்பது உறுதியானது.

உண்மைப் பதிவைக் காண: indiatoday.in I Archive
இருவரும் எதற்காக மோதிக் கொண்டனர் என்று பார்த்த போது, சாலை திட்டம் தொடக்க விழா கல்வெட்டில் பெயர் இடம் பெறாதது தொடர்பாக எம்.பி-க்கும் எம்.எல்.ஏ-வுக்கும் இடையே வாக்குவாதம் எழுந்ததாகவும் அதைத் தொடர்ந்து செருப்படி சம்பவம் நடந்ததாகவும் வேறு சில செய்திகளில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதன் மூலம் உத்தரப்பிரதேச பாஜக எம்.பி, எம்.எல்.ஏ-க்கள் செருப்பால் அடித்துக்கொண்ட சம்பவம் உண்மை என்பதும் ஆனால் வேட்பாளர் தேர்வின் போது இது நடக்கவில்லை என்பதும் உறுதியாகிறது. அரசு நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் இந்த சம்பவம் நடந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக வேட்பாளரைத் தேர்வு செய்வதில் சண்டை நடந்தது என்று பரவும் தகவல் உண்மையுடன் தவறான தகவலும் கலந்தது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
ராஜஸ்தானில் வேட்பாளர் தேர்வில் முறைகேடு நடந்ததால் பாஜக நிர்வாகிகள் ஒருவரை ஒருவர் அடித்துக்கொண்டனர் என்று பரவும் வீடியோ 2019ல் உ.பி-யில் எடுக்கப்பட்டது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:நாடாளுமன்றத் தேர்தல்: பா.ஜ.க வேட்பாளர் தேர்வில் மோதல் என்று பரவும் பழைய வீடியோ!
Written By: Chendur PandianResult: Misleading
