சால்வை போட வந்தவரிடம் நிதி கொண்டு வந்தியா என்று சீமான் கேட்பது போன்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

சால்வை போட வந்த நபரிடம் பத்து பைசாவுக்கு பிரயோஜனம் இல்லாத விஷயம் என்று சீமான் கூறிய வீடியோ பகிரப்பட்டுள்ளது. ஆனால் அதில் "நிதி கொண்டு வந்தியா?" என்று கேட்பது போன்று எடிட் செய்யப்பட்டுள்ளது. நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோ ஃபேஸ்புக்கில் டிசம்பர் 17, 2023 அன்று பதிவிடப்பட்டிருந்தது.

உண்மை அறிவோம்:

சால்வை போட வந்தவரைத் தடுத்து, பத்து பைசாவுக்கு பிரயோஜனம் இல்லாத விஷயம் என்று நாம் தமிழர் கட்சியின் சீமான் கூறிய வீடியோ சமூக ஊடகங்களில் வைரல் ஆனது. இந்த நிலையில் சால்வை போட வந்தவரிடம் நிதி கொண்டு வந்தியா என்று சீமான் கேட்பது போன்று ஆடியோ எடிட் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் நிதி அளிக்காத கோபத்தில் சால்வை அணிவிப்பதை ஏற்காமல் சீமான் செல்வது போன்று வீடியோ மாற்றப்பட்டிருந்தது.

சால்வை போடுவதை சீமான் விமர்சித்த வீடியோ வைரல் ஆன போது அதை பார்த்திருந்தோம். அதில் நிதி கொண்டு வந்தியா என்று அவர் கேட்டதாக நினைவு இல்லை. எனவே, இந்த வீடியோவில் ஆடியோவை மட்டும் எடிட் செய்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் ஆய்வு செய்தோம்.

முதலில் வெளியான வீடியோவை தேடி எடுத்தோம். NewsTamil 24X7 என்ற ஊடகத்தின் யூடியூப் பக்கத்தில் இந்த வீடியோ பதிவிடப்பட்டிருந்தது. சீமான் நடந்து வருவதில் இருந்து நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோ பகுதி வரை அதில் தெளிவாக இருந்தது. அதில் வெள்ளை சட்டை அணிந்த நபர் சீமானுக்கு வணக்கம் சொல்கிறார். அருகில் உள்ள நபரை சீமான் பார்த்தபடி யார் என்று கேட்பது போல உள்ளது. அதற்கு வெள்ளை சட்டை அணிந்த நபர் தம்பி என்று கூறுவது கேட்கிறது. நிதி கொண்டு வந்தாயா என்று சீமான் கேட்கவில்லை.

சீமான் ஆதரவு யூடியூப் பக்கங்களிலும் கூட இந்த வீடியோ வெளியிடப்பட்டிருந்தது. கட்சி தொடங்கியதில் இருந்து சால்வை அணியும் பழக்கம் கட்சியில் இல்லை என்பது போன்று விளக்கம் அளித்திருந்தனர். அந்த வீடியோக்களிலும் நிதி கொண்டு வந்தியா என்று சீமான் கேட்பது போல இல்லை.

அதே நேரத்தில் "நிதி கொண்டாந்தியா" என்று சீமான் கேட்பது உண்மையில் அவர் குரல் போல உள்ளது. இப்படி எங்காவது சீமான் கேட்டுள்ளாரா என்று தேடிப் பார்த்தோம்.

நிதி கொண்டு வந்தியா என்று கேட்டு ஒருவரிடம் இருந்து நிதி வாங்கும் வீடியோ ஒன்று ஃபேஸ்புக்கில் நமக்கு கிடைத்தது. அதில் இருந்த ஆடியோவை எடுத்து ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவில் சேர்த்திருக்கலாம் என்று தெரிகிறது.

இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

சால்வை போட வந்தவரிடம் நிதி கேட்ட சீமான் என்று பரவும் வீடியோவில் ஆடியோ மட்டும் எடிட் செய்து மாற்றப்பட்டுள்ளது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:சால்வை போட வந்தவரிடம் நிதி கேட்ட சீமான் என்று பரவும் வீடியோ உண்மையா?

Written By: Chendur Pandian

Result: Altered