நிகழ்ச்சி ஒன்றில் கலசம் அல்லது குடத்திலிருந்து தண்ணீரோ அல்லது வேறு எதையோ கொட்டுவது போல் பிரதமர் நரேந்திர மோடி நடித்தார் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அந்த வீடியோ உண்மையா என்று ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: twitter.com I Archive

பிரதமர் மோடி சிறிய கலசம் அல்லது குடத்தை கவிழ்ப்பது போலவும் அதில் இருந்து எதுவும் வராதது போலவும் வீடியோ ட்விட்டரில் பகிரப்பட்டுள்ளது. அதே போல் நெற்றியில் எதையோ பூசுவது போல நடிப்பதாகக் காண்பிக்கப்பட்டுள்ளது. பின்னணியில் அனைவரும் சிரிப்பது போல ஆடியோ உள்ளது. நிலைத் தகவலில், "இப்பதான் புரியுது" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை எக்ஸ் தளத்தில் (ட்விட்டர்) பிப்ரவரி 8, 2024 அன்று பதிவிட்டிருந்தனர்.

உண்மை அறிவோம்:

இந்த வீடியோ உண்மையா, எதுவும் இல்லாமல் சிறிய குடத்தை கவிழ்த்தது ஏன் என்று அறிய ஆய்வு செய்தோம்.

இந்த வீடியோவை புகைப்படங்களாக மாற்றி கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, கடந்த 2023 அக்டோபர் மாதம் நடந்த மேரி மாத்தி மேரா தேஷ் அம்ரித் காலாஷ் யாத்திரையில் இருந்து இந்த வீடியோ எடுக்கப்பட்டிருப்பது தெரிந்தது. பிரதமர் நரெந்திர மோடியின் யூடியூப் பக்கத்தில் அக்டோபர் 31, 2023 அன்று வீடியோ பதிவிடப்பட்டிருந்தது. பிரதமர் மோடி தன்னுடைய நெற்றியில் டீகா (teeka) பூசினார் என்று தலைப்பிடப்பட்டிருந்தது. அது என்ன டீகா என்று தேடியபோது சரியான பதில் கிடைக்கவில்லை. பொட்டு என்ற அளவில் சில தகவல் கிடைத்தது. எனவே, இது என்ன நிகழ்வு என்று தேடிப் பார்த்தோம்.

இந்தியாவின் பல பகுதிகளிலிருந்து கொண்டுவரப்பட்ட மணல் மேரி மாத்தி மேரா தேஷ் யாத்திரை மூலம் சேகரிக்கப்பட்டது. அந்த மண் டெல்லியில் கடமை பாதையில் வைக்கப்பட்டுள்ளது. மணலை கொட்டி அதிலிருந்து மணலை எடுத்து திலகம் வைத்தார் மோடி என்று செய்திகள் கிடைத்தன.

அந்த வீடியோவை பார்க்கும் போது, குடத்தை கவிழ்த்ததும் அதிலிருந்து மணல் கொட்டுகிறது. அந்த மணலை எடுத்து அவர் நெற்றியில் வைக்கிறார். இதன் மூலம் பிரதமர் மோடி வெறும் குடத்தை கவிழ்த்துப் போட்டோ, வீடியோவுக்கு போஸ் கொடுக்கவில்லை என்பது உறுதியாகிறது. குங்குமம் அல்லது வேறு நிறத்தில் நெற்றியில் பொட்டு வைத்தால் அது நன்றாகத் தெரியும். மணல் என்பதால் அது சரியாகத் தெரியவில்லை.

நாடு முழுவதும் இருந்து கொண்டுவரப்பட்ட மண்ணை டெல்லி கவுரவ பாதையில் வைக்கும் நிகழ்வில் பெரிய தொட்டியில் நரேந்திர மோடி, மணலை கொட்டும் வீடியோவை எடுத்து எடிட் செய்து, வெறும் குடத்தை கவிழ்ப்பது போல அவர் நாடகமாடினார் என்பது போல தவறான தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டிருப்பது இதன் மூலம் உறுதியாகிறது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோ எடிட் செய்யப்பட்டது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

வெறும் குடத்தை கவிழ்த்து போஸ்கொடுத்த நரேந்திர மோடி என்று பரவும் வீடியோ எடிட் செய்யப்பட்டது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:‘வெறும் கலசத்தை கவிழ்ப்பது போல் நடித்த மோடி’ என்று பரவும் வீடியோ உண்மையா?

Written By: Chendur Pandian

Result: Altered