
டெல்லி மெட்ரோ ரயில் மேம்பாலம் அமைக்கும் போது தூண் சரிந்து விழுந்து விபத்து என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
சாலையில் பாலத்தின் தூண் சரிந்து கார்கள் நசுங்கிப் போயிருக்கும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “டெல்லியில் கோர சம்பவம். மெட்ரோ ரயில் பாலம் அமைக்கும் பணியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கல் தூண் இடிந்து விழுந்தது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த வீடியோவை Akbarsha என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2023 பிப்ரவரி 22ம் தேதி பதிவிட்டுள்ளார். இவரைப் போல பலரும் இந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
டெல்லி மெட்ரோ ரயில் கட்டுமானத்தின் போது தூண்கள் சரிந்து விழுந்து விபத்துக்கள் ஏற்படுவது தொடர்கதையாக உள்ளது. சமீபத்தில் ஹைதர்பூர் பாட்லியில் மெட்ரோ பில்லர் அமைக்க பயன்படுத்தப்பட்ட ஷட்டர் விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த நிலையில், மெட்ரோ தூண் விழுந்தது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வரவே, அது பற்றி ஆய்வு செய்தோம்.
வீடியோ காட்சியைப் புகைப்படங்களாக மாற்றி கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, சில ஆண்டுகளுக்கு முன்பு உத்தரப்பிரதேசத்தின் வாரணாசியில் “மேம்பாலம் அமைக்கும் போது தூண் விழுந்து 18 பேர் உயிரிழந்தனர்” என்று குறிப்பிட்டு இந்த வீடியோவில் உள்ள காட்சிகளை சில ஊடகங்கள் புகைப்படங்களாக வெளியிட்டிருப்பதைக் காண முடிந்தது.

உண்மைப் பதிவைக் காண: thenewsminute.com I Archive
நாம் கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றிய அதே படத்தை நியூஸ் மினிட் என்ற இணைய ஊடகம் பயன்படுத்திக் கடந்த 2021 பிப்ரவரி 25ம் தேதி செய்தி வெளியிட்டிருப்பது தெரிந்தது. அதில் ஹைதராபாத்தில் மேம்பால விபத்து என்று தவறான வீடியோவை பரப்பிய நபரை போலீசார் கைது செய்தனர் என்று குறிப்பிட்டிருந்தனர். 2018ம் ஆண்டு வாரணாசியில் நடந்த பால விபத்து வீடியோவை ஹைதராபாத்தில் நடந்தது என்று வதந்தி பரப்பியதால் அந்த நபர் கைது செய்யப்பட்டார் என்று குறிப்பிட்டிருந்தனர்.
இதன் அடிப்படையில் வாரணாசி, மேம்பால விபத்து என சில கீ வார்த்தைகளை டைப் செய்து யூடியூபில் தேடினோம். அப்போது, நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோ காட்சிகள் 2018ம் ஆண்டு யூடியூபில் பதிவேற்றம் செய்யப்பட்டிருப்பது தெரிந்தது. வாரணாசியில் மேம்பாலம் அமைக்கும் போது தூண் சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது என்றும், அதில் 18 பேர் உயிரிழந்தனர் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
கார்கள் மீது விழுந்து கிடக்கும் தூணும், நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவில் உள்ள தூண், வாகனங்கள் என அனைத்தும் ஒன்றாக இருந்தது. இதன் மூலம் 2018ல் வாரணாசியில் நடந்த விபத்தை டெல்லி மெட்ரோ விபத்து என்று தவறாகப் பகிர்ந்திருப்பது உறுதியாகிறது.
முடிவு:
டெல்லி மெட்ரோ ரயில் கட்டுமானப் பணியின் போது தூண் விழுந்தது என்று பரவும் வீடியோ 2018ம் ஆண்டு உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் நடந்த மேம்பால விபத்தின் போது எடுக்கப்பட்டது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:டெல்லி மெட்ரோ ரயில் தூண் விழுந்தது என்று பரவும் வீடியோ உண்மையா?
Fact Check By: Chendur PandianResult: False
