
‘’கீழடியில் வாழ்ந்த மக்கள் வாஸ்து சாஸ்திரம், மத வழிபாடுகொண்டவர்களாக இருந்துள்ளனர்,’’ என்று அமர்நாத் ராமகிருஷ்ணன் பேசியதாக ஒரு தகவல் வைரலாக பரவி வருவதைக் காண நேரிட்டது. இதன் நம்பத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
Facebook Link | Archived Link |
Kumaran R Geddin என்பவர் இந்த ஃபேஸ்புக் பதிவை கடந்த செப்டம்பர் 23ம் தேதி வெளியிட்டுள்ளார். இதில், கீழடி அகழ்வாராய்ச்சியின் கண்காணிப்பாளராக பதவி வகித்த அமர்நாத் ராமகிருஷ்ணன் கூறியதாகச் சில தகவல்களை குறிப்பிட்டுள்ளனர். குறிப்பாக, கீழடியில் வாஸ்து சாஸ்திர முறைப்படி கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளதாகவும், அங்கு வசித்த மக்கள் வழிபாட்டு முறைகளை பின்பற்றினர் எனவும் அமர்நாத் ராமகிருஷ்ணன் தெரிவித்ததாகக் குறிப்பிட்டுள்ளனர். இதனை பலரும் உண்மை என நம்பி வைரலாக பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
கீழடியில் அகழ்வாராய்ச்சிப் பணிகளை முதலில் தொடங்கியவர் அமர்நாத் ராமகிருஷ்ணன். இவர் தமிழர்களுக்கு ஆதரவாகச் செயல்படுவதால் இடம் மாற்றம் செய்யப்பட்டார் என, விமர்சிக்கப்படுகிறது.
அவரை தொடர்ந்து அடுத்தக்கட்ட ஆய்வுப் பணிகள் நடைபெற்று முடிந்து, தற்போது அதன் விவரத்தை, தமிழக அரசு சார்பாக வெளியிட்டுள்ளனர். அதேசமயம், கீழடியில் இயேசு கிறிஸ்து சிலை கண்டெடுக்கப்பட்டதாக, புத்தர் சிலை கண்டெடுக்கப்பட்டதாக, லிங்கம் கண்டெடுக்கப்பட்டதாக ஆளாளுக்கு வதந்தி பகிர்ந்து வருகின்றனர்.
இதன் ஒருபகுதியாகவே, அமர்நாத் ராமகிருஷ்ணன் பற்றி மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவை வெளியிட்டுள்ளனர். உண்மையில் அவர் அவ்வாறு எந்த இடத்திலும் பேசவில்லை. அவர் சமீபத்தில் ஊடகங்களுக்கு அளித்த பேட்டி விவரத்தை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
அவர் இதுவரை ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், மேலும் விரிவான ஆய்வு கீழடியில் நடத்தப்பட வேண்டும் என்றே வலியுறுத்தியுள்ளார். எந்த இடத்திலும் கீழடியில் வசித்த மக்கள் வாஸ்து சாஸ்திரம் நிபுணத்துவம் கொண்டவர்கள், அவர்கள் மத வழிபாடுகளை பின்பற்றினார்கள், இன்னும் பல சிலைகள் உள்ளே இருந்து கிடைக்கும் என்று பேசவில்லை. அப்படி அவர் பேசியிருந்தால், அது வைரலாக ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டிருக்கும்.
காரணம், கீழடி பற்றி பேசப்படும் முக்கியமான விசயங்களில் ஒன்று, அங்கு எந்த மத வழிபாடு அல்லது கடவுள் சிலைகள் கண்டெடுக்கப்படவில்லை என்பதுதான். உண்மை இப்படியிருக்க, அமர்நாத் ராமகிருஷ்ணன் பெயரை பயன்படுத்தி சிலர் தங்களது சுயலாபத்திற்காக, வதந்தி பரப்பி வருகிறார்கள். இதுதவிர அமர்நாத் ராமகிருஷ்ணன் அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் இப்படியான தகவலை வெளியிடவில்லை.
முடிவு:
இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட ஃபேஸ்புக் தகவல் தவறு என நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை உறுதிப்படுத்தாமல் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:கீழடி மக்கள் வாஸ்து முறையை பின்பற்றியுள்ளனர்: அமர்நாத் ராமகிருஷ்ணன் பெயரில் பரவும் வதந்தி
Fact Check By: Pankaj IyerResult: False
