செவிலியரை இஸ்லாமியர் காலில் விழ வைத்த ஆந்திர எம்.எல்.ஏ?

Coronavirus அரசியல் | Politics இந்தியா | India சமூக ஊடகம் | Social

ஆந்திராவில் டெல்லியில் நடந்த இஸ்லாமிய மாநாட்டுக்கு சென்று வந்தவர் காலில் செவிலியர் ஒருவரை எம்.எல்.ஏ விழ வைத்ததாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Facebook LinkArchived Link

இஸ்லாமியர் ஒருவர் காலை செவிலியர் ஒருவர் தொடுவது போன்ற படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்ட மருத்துவக் கல்லூரியில் பணியாற்றும் செவிலியர் இவர். இவரை கர்னூல் தொகுதி எம்எல்ஏ மிரட்டி அந்த மாவட்ட தலைமை முஸ்லிம் ஹாஜியின் காலில் விழவைத்திருக்கிறார்.

காரணம் அந்த செவிலியர் தனது சக பணியாளரிடம் சொன்ன உண்மை தான். டெல்லி மர்கஸூக்கு சென்று வந்த தப்லீக் ஜமாஅத் அமைப்பை சேர்ந்தவர்கள் தாமாக முன் வந்து பொறுப்புணர்வோடு சமூக விலகலை கடைப்பிடித்து தங்களை அவர்களே தனிமைபடுத்திக் கொண்டிருந்தால் இன்று அனைவருக்கும் கொரோனா பரவும் அபாயகரமான சூழ்நிலை வந்திருக்காது என்று சொன்னதற்காகத்தான்.. இப்படி கொடுமை படுத்தப்பட்டிருக்கிறார் …

இந்த கொடுமையை செய்த எம்எல்ஏ மீதோ, முஸ்லிம் ஹாஜி மீதோ இதுவரை அந்த மாநில அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை… அரசு பணியாளரை மாவட்ட தலைமை ஹாஜி பெரியவரா ?? ஆந்திரா அரசு கொராானேவுக்கு போராடும் மருத்துவ பணியாளரை கைவிட்டது ஏன் ?” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்த பதிவை Aloor Vinayak Gopi என்பவர் 2020 ஏப்ரல் 25 அன்று வெளியிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

மேற்கண்ட படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது தெலுங்கில் வெளியான ஒரு செய்தி கிடைத்தது. அதில் கர்னூல் எம்.எல்.ஏ ஹஃபீஸ் கான் செவிலியர் ஒருவரை காலில் விழ வைத்ததாக சமூக ஊடகங்களில் தகவல் பரவுகிறது.

அதே நேரத்தில் அந்த இஸ்லாமியர் காலில் ரத்தம் ஒழுகும் வீடியோ ஒன்றும் வெளியாகி உள்ளது என்று குறிப்பிட்டிருந்தனர். எனவே, காலில் அடிபட்டவருக்கு அந்த செவிலியர் சிகிச்சை அளித்திருக்கலாம், அதை மதப் பிரச்னையாக மாற்றி பதிவிட்டிருக்கலாம் என்று தோன்றியது.

tolivelugu.comArchived Link

கர்னூல் எம்.எல்.ஏ, ஹஃபீஸ் கான், செவிலியர் உள்ளிட்ட கீ வார்த்தைகளை டைப் செய்து கூகுளில் தேடினோம். அப்போது அவருடைய ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட பதிவு மற்றும் நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ மராத்தி உள்ளிட்டவற்றில் வெளியான ஃபேக்ட் செக் கட்டுரைகள் நமக்கு கிடைத்தன.

கர்னூல் எம்.எல்.ஏ ஹஃபீஸ் கான் தன்னுடைய பதிவில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட படத்தை தவறானது என்று குறிப்பிட்டு வீடியோ வெளியிட்டிருந்தார். அதில், “காலில் காயம் காரணமாக ரத்தம் வழிந்த நிலையில், சர்க்கரை நோய் பாதிப்பு உள்ள அந்த நோயாளிக்கு சிகிச்சை அளிக்கும்போது அந்த புகைப்படம் எடுக்கப்பட்டது” என்று கூறினார்.

Facebook LinkArchived Link

மேலும் அந்த வீடியோவில் சிகிச்சை அளித்த செவிலியரின் பேட்டியும் இருந்தது. அவர், “அன்று இரவு பணியின்போது நோயாளிக்கு காலில் காயம் ஏற்பட்டு மிக அதிக அளவில் ரத்தம் வெளியேறியது. உடன் பணியில் இருந்த நான் அவருக்கு ரத்தப் போக்கைக் கட்டுப்படுத்த முதல் உதவி சிகிச்சை அளித்தேன்” என்றார்.

Facebook LinkArchived Link

தொடர்ந்து தேடியபோது கர்னூல் மாவட்ட போலீஸ் வெளியிட்ட பதிவு நமக்கு கிடைத்தது. அதில், “மூத்த குடிமகன் ஒருவருக்கு குவாரன்டைன் நேரத்தில் காலில் அடிபட்டது. அவருக்கு செவிலியர் முதல் உதவி சிகிச்சை அளிக்கிறார். இதை வைத்துக் கொண்டு சிலர் பொய்யான செய்தியைப் பரப்பி வருகின்றனர். இதுபோன்ற பொய்யான செய்திகளை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்” என்று கூறியிருந்தனர்.

நம்முடைய ஆய்வில்,

நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட படத்தில் உள்ள நபரின் காலில் காயம் காரணமாக ரத்தம் வெளியேறும் வீடியோ கிடைத்துள்ளது.

செவிலியரை காலில் விழவைத்ததாக பரவும் தகவல் தவறானது என்று கர்னூல் எம்.எல்.ஏ பேட்டி அளித்திருப்பது தெரியவந்துள்ளது.

காலில் அடிபட்டவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்ததாக செவிலியர் அளித்த பேட்டி கிடைத்துள்ளது.

காலில் அடிப்பட்ட ஒருவருக்கு செவிலியர் சிகிச்சை அளிக்கும் படத்தை வைத்து வதந்தி பரவி வருகிறது என்று கர்னூல் போலீஸ் வெளியிட்ட பதிவு நமக்கு கிடைத்துள்ளது.

இந்த ஆதாரங்கள் அடிப்படையில், டெல்லி மாநாட்டுக்கு சென்று வந்தவர்கள் பற்றிய விவரத்தை வெளியிட்டதற்காக இஸ்லாமிய ஹாஜி காலில் செவிலியர் விழு வைக்கப்பட்டார் என்று பகிரப்படும் பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:செவிலியரை இஸ்லாமியர் காலில் விழ வைத்த ஆந்திர எம்.எல்.ஏ?

Fact Check By: Chendur Pandian 

Result: False

1 thought on “செவிலியரை இஸ்லாமியர் காலில் விழ வைத்த ஆந்திர எம்.எல்.ஏ?

Comments are closed.