
‘’மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நித்யானந்தா தலைமையில் ஆசிரமங்கள் அமைக்கப்படும்…!,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதுபற்றி உண்மை கண்டறியும் சோதனை நடத்தினோம். அதன் விவரம் இதோ…
தகவலின் விவரம்:

மக்கள் உரிமை குரல் என்ற ஃபேஸ்புக் குழு இந்த பதிவை, ஏப்ரல் 8ம் தேதி வெளியிட்டுள்ளது. நித்யானந்தாவும், எச்.ராஜாவும் நிற்பது போன்ற புகைப்படத்தை பகிர்ந்து, அதன் மேலே, ‘’வெளியானது 2019 நாடாளுமன்ற தேர்தலின் பாஜக தேர்தல் அறிக்கை.. மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நித்யானந்தா தலைமையில் ஆசிரமங்கள் அமைக்கப்படும்,’’ என்று எழுதியுள்ளனர். இது பார்ப்பதற்கு வேடிக்கையான பதிவு போல தோன்றினாலும், இதனை பலரும் உண்மையாக நினைத்து பகிர்ந்து வருகிறார்கள்.
உண்மை அறிவோம்:
இந்தியா முழுவதும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டு, கடந்த ஏப்ரல் 11ம் தேதி தொடங்கி, 7 கட்டங்களாக வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது. இதுபற்றி விரிவாகப் படிக்க, இங்கே கிளிக் செய்யவும்.
இந்நிலையில், கடந்த ஏப்ரல் 8ம் தேதியன்று, பாஜக தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. சங்கல்ப் பத்திரா என்ற பெயரில் வெளியிடப்பட்ட இந்த தேர்தல் அறிக்கையை, பலரும் சமூக ஊடகங்களில் கேலி, கிண்டல் செய்து வந்தார்கள். பார்ப்பதற்கு, அச்சு அசலாக, பாஜக.,வின் உண்மை தேர்தல் அறிக்கை போலவே, கேலி செய்து தயாரிக்கப்பட்ட மீம்களை பலரும் பகிர்ந்ததால், சமூக ஊடகங்களில் சர்ச்சை ஏற்பட்டது. ஆதார படம் கீழே தரப்பட்டுள்ளது.

இந்நிலையில்தான், நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட ஃபேஸ்புக் பதிவு, ஏப்ரல் 8ம் தேதி வெளியிடப்பட்டுள்ளது.
அதேசமயம், பாலியல் புகாருக்கு ஆளாகி, பலவித சர்ச்சைகளை சந்தித்து வருபவர் நித்யானந்தா. இவர் தலைமையில், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, ஆசிரமங்கள் அமைக்கப்படும் எனக் கூறி, இந்த மீம்ஸை தயாரித்துள்ளனர். இப்படி எந்த ஒரு அரசியல் கட்சியும் தேர்தல் வாக்குறுதி அளிக்க வாய்ப்பே இல்லை.
இது வேடிக்கையாக பகிரப்பட்டதாகக் கூறப்பட்டாலும், உண்மையில், மிகவும் விஷமத்தனமான கருத்தாக உள்ளது. பாஜக.,வின் முழு தேர்தல் அறிக்கையை இங்கே கிளிக் செய்து படித்துப் பார்த்தால், உண்மை விவரம் புரியும்.
எச்.ராஜாவுடன், நித்யானந்தா இருப்பதால், உடனே பாஜக.,விற்கும், நித்யானந்தாவிற்கும் நேரடி தொடர்பு உள்ளதாக, அர்த்தப்படுத்தி இந்த மீமை தயாரித்து, பகிர்ந்துள்ளனர். எனவே, இது தவறான தகவல் என உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின்படி, மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறான ஒன்று என, நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் யாரும் இத்தகைய தவறான செய்தி, புகைப்பட மற்றும் வீடியோ பதிவுகளை மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:நித்யானந்தா தலைமையில் ஆசிரமங்கள் அமைக்கப்படும் என்று பாஜக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டதா?
Fact Check By: Parthiban SResult: False
