
‘’கள்ள ஓட்டுப் போடுவதற்காகக் கையை வெட்டிக் கொண்ட பகுஜன் சமாஜ் தொண்டர்,’’ என்ற தலைப்பில் ஒரு வைரல் செய்தியை ஃபேஸ்புக்கில் காண நேரிட்டது. அந்த செய்தியின் உண்மைத்தன்மையை ஆய்வு செய்ய தீர்மானித்தோம். அதில் கிடைத்த விவரங்களை இங்கே தொகுத்து அளித்துள்ளோம்.
செய்தியின் விவரம்:
கள்ள ஓட்டு போட மையை கத்தியால் சுரண்டியபோது விரலை வெட்டிக்கொண்ட பகுஜன் சமாஜ் தொண்டர்.
ஏப்ரல் 19ம் தேதி இந்த பதிவு வெளியிடப்பட்டுள்ளது. இது உண்மையா, பொய்யா எனத் தெரியாமல் பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
இந்தியா முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டு, அதற்கான வாக்குப் பதிவு, பல்வேறு கட்டங்களாக நடத்தப்பட்டு வருகிறது. இதில், உத்தரப் பிரதேச மாநிலத்தில், 7 கட்டங்களாக, மக்களவைத் தேர்தல் வாக்குப் பதிவு நடத்தப்படுகிறது. கடந்த ஏப்ரல் 18ம் தேதியன்று புலாந்த்சாஹர் உள்ளிட்ட 8 மக்களவை தொகுதிகளுக்கு, வாக்குப் பதிவு நடைபெற்றது.
இந்நிலையில், புலாந்த்சாஹர் தொகுதிக்கு உள்பட்ட சிகார்பூர் பகுதியை சேர்ந்த அப்துல்லாபூர் ஹூலாசன் கிராமத்தில் வசிக்கும் பவண் குமார் என்பவர், கையை அறுத்துக் கொண்டு, புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளார். ஆம். தீவிர பகுஜன் சமாஜ் கட்சி ஆதரவாளரான பவண் குமார், 25 வயது நிரம்பியவர். இவர், முதல்முறையாக, பகுஜன் சமாஜ் கட்சியின் யானை சின்னத்திற்கு ஓட்டுப் போட வேண்டும் என்ற ஆர்வத்தில், வாக்குச் சாவடி சென்றுள்ளார். ஆனால், தவறுதலாக, பாஜக.,வின் தாமரை சின்னத்தில் ஓட்டுப் போட்டவிட்டாராம். இதனால், கடும் விரக்தி அடைந்த பவண் குமார், வீட்டுக்கு வந்ததும், கத்தியால் தனது கையை அறுத்துக் கொண்டுவிட்டாராம். இத்தகவல், பல்வேறு ஊடகங்களிலும் செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோ ஆதாரத்துடன் வெளியிடப்பட்டுள்ளது. ஆதார படம் கீழே தரப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, Scroll.in வெளியிட்ட விரிவான செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.
உண்மையான வீடியோ ஆதாரம் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
உண்மை இப்படியிருக்க, இதே செய்தியைத்தான் கள்ள ஓட்டுப் போடுவதற்காகக் கையை அறுத்துக் கொண்ட பகுஜன் சமாஜ் கட்சித் தொண்டர் என்ற தலைப்பில், நம் டிவி நியூஸ் கார்டாக வெளியிட்டுள்ளது. இதன் உண்மைத்தன்மை பற்றி, நம்டிவி வெளியிட்ட நியூஸ் கார்டின் கீழேயே பலர் கமெண்ட்டில், கேள்வி எழுப்பியுள்ளனர்.

ஆனால், அதற்கு நம் டிவி எந்த விளக்கமும் அளிக்கவில்லை. அவர்களாகவே, செய்தியின் கோணத்தை மாற்றியமைத்துள்ளனர். ஊடகங்கள் அனைத்தும் ஒரு மாதிரி செய்தி வெளியிட, நம் டிவி மட்டும் வித்தியாசம் காட்டுகிறேன் பேர்வழி, என இவ்வாறு சர்ச்சை கிளப்பும் வகையில் செய்தி வெளியிட்டிருக்கிறது.
சரி, இப்படி ஏதேனும் சம்பவம் நிகழ்ந்தும், ஊடகங்கள் தவறாகச் செய்தி வெளியிட்டுவிட்டதா என கூகுள் உள்பட பல்வேறு வழிகளிலும் உண்மையை தேடிப் பார்த்தோம். எங்கும் இவர்கள் சொல்லியது போன்ற செய்தி தட்டுப்படவில்லை.

இதுவரை கிடைத்த ஆதாரங்களின்படி பார்த்தால், இப்படி ஒரு சம்பவம் நடக்கவே இல்லை. அவ்வாறு நடந்திருந்தால், ஏதேனும் ஒரு ஊடகத்திலாவது இதுபற்றி செய்தி வெளியிடப்பட்டிருக்கும். ஆனால், அப்படி நடக்கவே இல்லை. கள்ள ஓட்டுப் போடுவதற்காக, தனது கை மையை அழிக்க முயன்று, ஆள்காட்டி விரலை அறுத்துக் கொள்ளவில்லை; பாஜகவுக்கு ஓட்டுப் போட்டதால்தான் அதிருப்தி அடைந்து, கை விரலை அறுத்துக் கொண்டார் என சந்தேகமின்றி தெளிவாகிறது.
எனவே, ஊடகம் என்ற பெயரில் தவறான செய்தியை இவர்களாகவே, சுய அரசியல் நோக்கத்திற்காக, சித்தரித்து வெளியிட்டுள்ளனர் என உறுதியாகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின்படி, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட பதிவு தவறாக சித்தரிக்கப்பட்ட ஒன்று என உறுதி செய்யப்படுகிறது. எனவே, இத்தகைய தவறான செய்தி, புகைப்படம், வீடியோ போன்றவற்றை உறுதிப்படுத்தாமல், நமது வாசகர்கள் யாரும் மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். அப்படி நீங்கள் பகிர்ந்தது பற்றி யாரேனும் புகார் அளித்தால் உரிய சட்ட நடவடிக்கையை நீங்கள் சந்திக்க நேரிடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

Title:கள்ள ஓட்டு போடுவதற்காக கையை வெட்டிக் கொண்ட பகுஜன் சமாஜ் கட்சித் தொண்டர்?
Fact Check By: Parthiban SResult: False
