திருக்குறளை பாடத்திட்டத்தில் சேர்க்கும்படி அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு உத்தரவு?

அரசியல் சார்ந்தவை | Political சமூகம்

‘’திருக்குறளை அனைத்து மாநிலங்களிலும் பள்ளிகளில் பாடத்திட்டமாக கட்டாயம் சேர்க்க மத்திய அரசு உத்தரவு,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் செய்தியை காண நேரிட்டது. இதன் உண்மைத்தன்மையை பரிசோதிக்க தீர்மானித்தோம்.

தகவலின் விவரம்:

Archived Link

நாச்சியார் தமிழச்சி என்ற ஃபேஸ்புக் ஐடி ஏப்ரல் 11ம் தேதி வெளியிட்டுள்ள இந்த பதிவை, உண்மை என நம்பி பலரும் ஷேர் செய்து வருகின்றனர். வேலைக்காரன் சினிமா படக் காட்சியை பகிர்ந்து, அதன் மேலே, ‘’அனைத்து மாநிலங்களிலும் பள்ளிகளில் திருக்குறளை பாடத்திட்டத்தில் கட்டாயம் சேர்க்க மத்திய அரசு உத்தரவு – செய்தி, ஆனாப் பாருங்க, இதுவரை தமிழகத்தை ஆண்ட கட்சிகள் தமிழ்நாட்டில் தமிழக பள்ளிக்கூடங்களில் கூட தமிழக தமிழ்மொழியை கட்டாயம் ஆக்கவில்லை. இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் மட்டும்தான் அந்த மாநில மொழியையே படிக்காமல் (தமிழ்) ஒருவனால் கல்வியை முடிக்க முடியும், இந்த திராவிட கட்சிகள்தான் தமிழ்மொழியை காப்பது போலவும், பாஜக அழிக்க நினைப்பதாகவும் சொல்லுவார்கள், அதையும் இந்த சிந்தனையற்ற கூட்டம் நம்பும்,’’ என எழுதியுள்ளனர்.

உண்மை அறிவோம்:
மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் கூறியுள்ளதுபோல, மத்திய அரசு, திருக்குறள் தொடர்பாக, ஏதேனும் உத்தரவு வெளியிட்டுள்ளதா, என கூகுளில் நீண்ட நேரம் தேடிப் பார்த்தோம். அப்போது, நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்ட செய்தி ஒன்றின் ஆதாரம் கிடைத்தது.

மேற்கண்ட செய்தியை திறந்து பார்த்தபோது, மத்திய அரசு அவ்வாறு எந்த உத்தரவும் இடவில்லை என்றும், தமிழக அரசுதான் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கும் திருக்குறளை நன்னெறி போதனை பாடமாக சேர்க்கும்படி உத்தரவிட்டுள்ளது என்றும் தெரியவந்தது. இந்த உத்தரவு சிபிஎஸ்இ பள்ளிகளை தவிர, தமிழகத்தில் இயங்கும் அனைத்து பள்ளிகளுக்கும் பொருந்தும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. இதன்படி, 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையுள்ள அனைவருக்கும் ஆண்டுக்கு, 15 அதிகாரம் என்ற முறையில், மொத்தம் 105 அதிகாரங்கள் சொல்லித் தரப்படும் என்றும் தமிழக அரசின் உத்தரவில் கூறப்பட்டுள்ளது. இந்த உத்தரவு மார்ச் 23ம் தேதியன்று வெளியிடப்பட்டுள்ளது. இதனை விரிவாகப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

எனவே, மேற்கண்ட உத்தரவை வெளியிட்ட தமிழக அரசுதான் என்றும், மத்திய அரசு இப்படி எந்த உத்தரவையும் வெளியிடவில்லை என்றும் தெளிவாகிறது. இதுதவிர, திருக்குறள் தொடர்பாக ஏதேனும் செய்தியில் மத்திய அரசு தொடர்புபட்டுள்ளதா என்ற கோணத்தில் மீண்டும் ஆய்வை தொடர்ந்தோம்.

அப்போது, திருக்குறளுக்கு, தேசிய நூல் அந்தஸ்து தரும்படி, தமிழக அரசு, மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளதாக, செய்தி விவரம் ஒன்று கிடைத்தது. விரிவாகப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.  

இதே கோரிக்கையை பல்வேறு தமிழ் அமைப்புகளும் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளன. எனினும், இதுவரை மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது. இதுபற்றி விகடன் வெளியிட்ட செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

இதுவரை கிடைத்த ஆதாரங்களின்படி, பார்க்கும்போது, கடந்த 2014ம் ஆண்டு நாடு முழுவதும் பள்ளிகளில் திருவள்ளுவர் தினம் கொண்டாடப்படும் என்று மனித வள மேம்பாட்டுத் துறை
அமைச்சர் ஸ்மிருதி இரானி அறிவித்திருந்தார். அதுதவிர, வடமாநில பள்ளிகளில் திருக்குறள் கற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும் என்று மட்டுமே
அவர் கூறியிருந்தார். ஆனால், கட்டாயமாக சொல்லித் தர நடவடிக்கை எடுக்கப்படும் என, அவர் எங்கேயும் கூறவில்லை. மேலும், இதுபற்றி மத்திய அரசு, ஆணை எதுவும்
வெளியிடவில்லை. எனவே, திருக்குறளை பள்ளிகளில் கட்டாயப் பாடமாக சொல்லித் தருவது தொடர்பாக,
மத்திய அரசு எந்த உத்தரவையும் அனைத்து மாநிலங்களுக்கும் பிறப்பிக்கவில்லை என தெளிவாகிறது.
உண்மையில், தமிழக அரசுதான், அத்தகைய உத்தரவை, தமிழக பள்ளிகளுக்கு பிறப்பித்துள்ளது.

எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட ஃபேஸ்புக் பதிவில் கூறப்பட்டுள்ள தகவல் தவறான ஒன்று என உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:
உரிய ஆதாரங்களின்படி, மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறான தகவல் என நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் யாரும் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம், வீடியோ போன்றவற்றை மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். அப்படி நீங்கள் பகிர்ந்தது பற்றி யாரேனும் புகார் அளித்தால் உரிய சட்ட நடவடிக்கையை நீங்கள் சந்திக்க நேரிடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

Avatar

Title:திருக்குறளை பாடத்திட்டத்தில் சேர்க்கும்படி அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு உத்தரவு?

Fact Check By: Parthiban S 

Result: False