
சீன அதிபருடனான சந்திப்புக்கு வாரணாசியை மத்திய அரசு முன்வைத்தது என்றும் ஆனால் சீனாவோ, மாமல்லபுரத்தை முன் வைத்தது என்றும் ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

Facebook Link | Archived Link |
நியூஸ் 18 தமிழ் நாடு வெளியிட்டது போன்ற செய்தியின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர். அதில், “வாரணாசியைத் தேர்வு செய்த மத்திய அரசு… மாமல்லபுரத்தை முன் வைத்த சீனா…!” என்று இருந்தது.
நிலைத் தகவலில், “மத மத உணர்வுகளை தூண்டி ஆதாயம் அடைய முடியாத தமிழகத்தைப் பற்றி பிஜேபி அரசாங்கம் ஒரு நாளும் யோசிக்க போவது கிடையாது. அதனால் தான் சொல்கிறோம் #GoBackModi” என்று பதிவிட்டிருந்தனர்.
இந்த பதிவை அரசியல் நையாண்டி Political Satire என்ற ஃபேஸ்புக் பக்கம் 2019 அக்டோபர் 11ம் தேதி வெளியிட்டுள்ளது. பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
சீன அதிபர் ஷி ஜின்பிங் மாமல்லபுரம் வந்து சென்றது சமூக ஊடகங்களில் ஒரு புயலையே ஏற்படுத்திவிட்டது. அது தொடர்பாக ஏராளமான செய்திகள், வதந்திகள் கலந்துகட்டி பரப்பப்பட்டது. இதில் எது உண்மை, எது வதந்தி என்று தெரியாமல் பலரும் குழம்பிப்போனதுதான் உண்மை. பிரதமர் மோடியை படம் பிடித்த படப்பிடிப்பு குழுவினர், பாதுகாப்பு பணியாளர்கள் என்று தொடர்ந்து அது தொடர்பான வதந்திகள் பற்றிய கட்டுரையை ஒவ்வொன்றாக நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் பிரிவு வெளியிட்டு வருகிறது.
சீன அதிபர் மாமல்லபுரம் வருகைக்கு முன்பு வரை, மாமல்லபுரத்தைத் தேர்வு செய்தது சீனா என்றும் மறுக்க முடியாமல் மத்திய அரசு ஒப்புக்கொண்டது என்றும் செய்திகள் வெளியாகிக்கொண்டே இருந்தன. ஆனால், இதற்கு எந்த ஒரு ஆதாரமும் வழங்கப்படவில்லை. அனுமானத்தில் அடிப்படையிலேயே செய்திகள் வெளியாகி வந்தன.

Maalai Malar | Archived Link |
ஆனால், சீன அதிபர் வருகைக்குப் பிறகு பத்திரிகையாளிடம் பேசிய இந்திய வெளியுறவுத் துறை அதிகாரிகள் மாமல்லபுரத்தை தேர்வு செய்தது மோடிதான் என்று அறிவித்தனர். இதனால், பல முன்னணி ஊடகங்களும் தங்களின் முந்தைய செய்திகளை நீக்கிவிட்டன. ஆனால், சாமானியர்கள் மட்டும் இந்த தவறான செய்தியை தொடர்ந்து பரப்பி வருகின்றனர்.
டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழில், “மோடி இல்லை… மாமல்லபுரத்தை தேர்வு செய்த சீனா” என்று செய்தி வெளியாகி இருந்தது. ஆனால், மத்திய வெளியுறவுத் துறையின் விளக்கத்துக்குப் பிறகு அந்த செய்தி நீக்கப்பட்டு இருந்தது. ஆனால், டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்ட செய்தியின் புகைப்பட காட்சியைப் பயன்படுத்தி பலரும் சமூக ஊடகங்களில் அதை பரப்பி வருகின்றனர்.

Times Of India | Archived Link 1 | Facebook Link | Archived Link 2 |
அதேபோல், “வாரணாசியைத் தேர்வு செய்த மத்திய அரசு… மாமல்லபுரத்தை முன் வைத்த சீனா…!” என்ற செய்தியை நியூஸ் 18 தமிழ்நாடு வெளியிட்டது உண்மையா என்று தேடினோம். நியூஸ் 18 தமிழ்நாடு-வின் இணையம் மற்றும் ஃபேஸ்புக் பக்கத்தில் தேடினோம். ஆனால், அதுபோல எந்த ஒரு செய்தியும் நமக்கு கிடைக்கவில்லை. டைம்ஸ் ஆஃப் இந்தியாவைப் போல இவர்களும் நீக்கியிருக்கலாம் என்று தெரிகிறது.

மாமல்லபுரத்தை பிரதமர் மோடிதான் தேர்வு செய்தார் என்பதை நிரூபிப்பதற்கான ஆதாரம் கிடைக்கிறதா என்று தேடினோம். அப்போது, பல ஊடகங்களிலும் அது தொடர்பான செய்தி வெளியாகி இருந்தது நமக்கு கிடைத்தது. தி ஹிந்து வெளியிட்ட செய்தியில், “மாமல்லபுரத்தை சீனாதான் தேர்வு செய்தது என்று ஊடகங்களில் செய்தி வெளியானது தொடர்பாக இந்திய வெளியுறவுத் துறை உயர் அதிகாரியிடம் கேட்கப்பட்டதாகவும், அதற்கு அவர், மாமல்லபுரத்தை பிரதமர் மோடிதான் சுயமாகத் தேர்வு செய்தார்” என்று கூறியதாகவும் குறிப்பிட்டு இருந்தனர்.
The Hindu | Archived Link 1 |
India Today | Archived Link 2 |
இந்தியா டுடேவும் இது தொடர்பான செய்தியை வெளியிட்டு இருந்தது. மாமல்லபுரத்தை தேர்வு செய்தது குறித்து மத்திய அரசின் உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டதாகவும், அதற்கு அவர், “சென்னை – சீனாவுக்கு இடையே நீண்ட வரலாற்றுத் தொடர்பு உள்ளதால் பிரதமர் மோடிதான் மாமல்லபுரத்தை தேர்வு செய்தார்” என்று கூறியதாகவும் தெரிவித்துள்ளனர்.
Dinamalar | Archived Link 1 |
News 18 Tamil Nadu | Archived Link 2 |
தமிழில், தினமலர், நியூஸ் 18 தமிழ்நாடு என பல முன்னணி ஊடகங்களும் மாமல்லபுரத்தை தேர்வு செய்த மோடி என்று செய்தி வெளியிட்டது கிடைத்தது.
நம்முடைய ஆய்வில்,
மாமல்லபுரத்தைத் தேர்வு செய்த சீனா என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டது தெரியவந்துள்ளது.
மாமல்லபுத்தை தேர்வு செய்தது மோடிதான் என்று இந்திய வெளியுறவுத் துறை உறுதி செய்த செய்தி கிடைத்துள்ளது.
வெளியுறவுத் துறை அதிகாரிகள் கூறிய பிறகு சீனாதான் தேர்வு செய்தது என்ற பழைய செய்திகள் நீக்கப்பட்டதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
நியூஸ் 19 தமிழ்நாடு இணைய பக்கத்தில் குறிப்பிட்ட செய்தி இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆதாரங்கள் அடிப்படையில், இந்தியாவில் பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் சந்திப்பு இடத்தை சீனாவே தேர்வு செய்தது என்ற தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:மாமல்லபுரத்தை முன்வைத்த சீனா! – ஃபேஸ்புக் பதிவு உண்மையா?
Fact Check By: Chendur PandianResult: False
