சபரிமலை யாத்திரிகர்கள் போல ஐயப்பன் மாலை போட்டு கிறிஸ்தவர்கள் ஏமாற்றுகிறார்கள் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Facebook LinkArchived Link

ஐயப்ப பக்தர்கள் முழங்கால் படியிட்டு வழிபாடு நடத்தும் புகைப்படம் மற்றும் அவர்களுடன் பாதிரியார் ஒருவர் பேசும் படங்கள் பகிரப்பட்டுள்ளன. நிலைத் தகவலில், "இவர்கள் எல்லாம் சபரிமலை யாத்திரை செல்லும் பக்தர்கள் என்று நீங்கள் நினைத்தால் அது உங்கள் தவறு. இதுகள் எல்லாம் #அய்யயோலியா கூட்டத்தை சேர்ந்த வேஷதாரிகள்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பதிவை Niranjhankumar Kumar என்பவர் 2020 ஜூலை 26ம் தேதி பதிவிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

தமிழ்நாட்டில் இந்து மதத்தை அப்படியே கிறிஸ்தவர்கள் காப்பி அடிக்கிறார்கள் என்று தொடர்ந்து பல பதிவுகள் வெளியிடப்பட்டு வருகின்றன. இயேசுவின் சீடர்களில் ஒருவரான சந்தியாகப்பர் குதிரையில் அமர்ந்திருக்கும் சிலையை அழகர் போல இயேசுவை மாற்றி வைத்துள்ளார்கள் என்று பரப்பப்பட்டது. நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் பிரிவில் அது தொடர்பாக கட்டுரை வெளியிட்டிருந்தோம்.

தற்போது, ஐயப்ப பக்தர்கள் போல காட்சி அளிக்கும் இவர்கள் உண்மையில் ஐயப்ப பக்தர்கள் இல்லை, "அயயயோலியா (அல்லேலூயா என்பதை அப்படி கிண்டலாகச் சொல்கிறார்கள்) கூட்டத்தைச் சேர்ந்த வேஷதாரிகள் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த புகைப்படம் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.

படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடியபோது இது கேரள மாநிலம் ஆர்த்துங்கல் புனித அந்திரேயா (ஆண்ட்ரூ) தேவாலயம் என்பது தெரிந்தது. scroll.in என்ற இணைய ஊடகம் 2018ம் ஆண்டு நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட இரண்டு படங்களுடன் செய்தி வெளியிட்டிருந்தது. அதில், "சபரிமலை பக்தர்கள் ஆர்த்துங்கல் பேரலாயத்தில் பிரார்த்தனை செய்கின்றனர்" எனக் குறிப்பிடப்பட்டு இருந்தது.

scroll.inArchived Link 1
indiatimes.comArchived Link 2

2018ம் ஆண்டு கேரள மாநில பா.ஜ.க நிர்வாகி ஒருவர் புனித அந்திரேயா ஆலயம் முன்பு சிவதலமாக இருந்தது. அதனால்தான் இந்துக்கள் அந்த கோவிலுக்கு வந்து முன்பு சிவலிங்கம் இருந்த இடத்தில் பிரார்த்தனை செய்தார்கள், என்று ட்விட்டரில் பதிவிட்டதன் அடிப்படையில் இந்த செய்தி வெளியாகி இருந்தது. சபரிமலைக்கு சென்று திரும்பும் பக்தர்கள் ஆலப்புழா மாவட்டத்தில் கடலோரத்தில் அமைந்திருக்கும் ஆர்த்துங்கல் புனித பேதுரு பேராலயத்துக்கு வந்து செபாஸ்டியன் (செபஸ்தியார்) என்ற புனிதரிடம் பிரார்த்தனை செய்து, அங்குள்ள குளத்தில் மூழ்கி எழுந்து சபரிமலைக்கு போட்ட மாலையை கழற்றுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள் என்ற செய்தி கிடைத்தது.

onmanorama.comArchived Link 1
thehindubusinessline.comArchived Link 2
outlookindia.comArchived Link 3

தொடர்ந்து தேடியபோது, அந்த கோவில் குளத்தில் பக்தர்கள் கழட்டி விடும் மாலைகளுடன் பாதிரியார் காட்சியளிக்கும் புகைப்படத்துடன் கூடிய செய்தி கிடைத்தது. சபரி மலைக்கு போட்ட மாலைகள் கழற்றப்படும் தகவல் மற்றும் பா.ஜ.க பிரமுகரின் பதிவின் மூலம் அங்கு சபரி மலைக்கு சென்று திரும்பும் பக்தர்கள் அந்த கிறிஸ்தவ ஆலயத்தில் வழிபாடு நடத்துவது உண்மை என்பது உறுதியாகிறது.

தொடர்ந்து சபரிமலை பக்தர்கள் புனித ஆண்ட்ரூ பேராலயத்துக்கு வருகிறார்கள் என்பது தொடர்பான மலையாளம், ஆங்கிலத்தில் வெளியான பல செய்திகள் நமக்கு கிடைத்தன.

அதில், புனித செபாஸ்டியனை மக்கள் ஐயப்பனின் சகோதரராக கருதுகின்றனர். எப்படி வாவர் (வாபர்) மசூதிக்கு செல்வதை ஒரு வழக்கமாக வைத்திருக்கிறார்களோ, அதைப் போல இங்கு வந்து தங்கள் சபரிமலை பயணத்தை முடிப்பதையும் பல பக்தர்கள் வழக்கமாக வைத்துள்ளனர் என அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

1994ல் வெளியான செய்தி ஒன்று கிடைத்தது. அதில், பல நூற்றாண்டுக்கு முன்பு ஆலயம் கட்டப்பட்ட போது இங்கிருந்த புன்னியலட்சனுக்கும் (புனித பாதிரியார்) ஐயப்பனுக்கும் நட்பு ஏற்பட்டதாம். இருவரும் சகோதரர்களாக பழகினர். அப்போது தான் காட்டுக்கு சென்று தியானம் செய்யப்போவதாக கூறியுள்ளார். அப்போது புன்னியலட்சன், இங்கிருந்து வரும் பக்தர்களை தண்டிக்கக் கூடாது என்று அவர் ஐயப்பனுக்கு கோரிக்கை விடுத்தாராம். இதை ஒரு நிபந்தனையுடன் ஐயப்பன் ஏற்றுக்கொண்டாராம்.

அதாவது, சரியாக விரதம் இருந்து சபரிமலை வராத பக்தர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும் என்பதுதான் அந்த நிபந்தனை. இதனால்தான் பக்தர்கள் இங்கு வந்து புனித செபாஸ்டியனிடம் பிரார்த்தனை செய்துவிட்டு, குளத்தில் மூழ்கி தங்கள் மாலையை கழற்றுவதைப் பழக்கமாக வைத்துள்ளனர்" எனக் குறிப்பிட்டிருந்தனர். வீடியோ ஒன்றில், தேவாலயத்தின் உள்ளே ஐயப்ப தரிசனத்துக்காக போடப்பட்ட மாலை தொங்கவிடப்பட்டிருப்பதை காண முடிந்தது.

Youtube Link

ஒவ்வொருவருக்கும் ஒருவித நம்பிக்கை உள்ளது. அந்த நம்பிக்கையின் படி ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக் கணக்கான ஐயப்ப பக்தர்கள் ஆர்த்துங்கல் புனித அந்திரேயா ஆலயத்துக்கு வந்து வழிபடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். படத்தில் உள்ளவர்கள் ஐயப்ப பக்தர்கள்தான் என்று 2018ம் ஆண்டு வெளியான செய்தி உறுதி செய்கிறது.

ஐயப்பனை தரிசித்துவந்து இந்த கோவிலுக்கு வந்து மாலையை கழற்றுவதை ஆயிரக் கணக்கான ஐயப்ப பக்தர்கள் வழக்கமாக வைத்திருப்பது உறுதியாகி உள்ளது. இதன் அடிப்படையில், இந்துக்களை ஏமாற்ற கிறிஸ்தவர்கள் ஐயப்ப மாலை அணிகிறார்கள் என்று பகிரப்படும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049044263) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:சபரிமலை ஐயப்பன் மாலை போட்டு ஏமாற்றும் கிறிஸ்தவர்கள்? முழு விவரம் இதோ!

Fact Check By: Chendur Pandian

Result: Misleading