
ஃபேஸ்புக்கில் நவோதயா பள்ளி என்று கூறி, ஒரு பள்ளிக்கூடத்தின் வீடியோ பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். உண்மை உங்கள் பார்வைக்கு:
தகவலின் விவரம்:

Facebook link I Archived Link 1 I Archived Link 2
தனியார் பள்ளி போன்று பிரம்மாண்டமாக, அழகாக, நேர்த்தியாக இருக்கும் பள்ளிக் கூடத்தின் வீடியோ காட்டப்படுகிறது. அந்த வீடியோவில் அது எந்த பள்ளிக்கூடம், எங்கு உள்ளது என்று எந்த ஒரு விவரத்தையும் காட்டவில்லை. பின்னணியில் பேசுபவர் டெல்லியில் உள்ள அரசு பள்ளி என்று கூறுகிறர். ஆனால், நிலைத் தகவலில், “மத்திய அரசால் இலவசமாக நடத்தப்படும் நவோதயா பள்ளி” என்று குறிப்பிட்டுள்ளனர். மேலும் நவோதயா பள்ளியை வர விடாமல் தி.மு.க தடுத்துவிட்டது என்று குற்றம்சாட்டியிருந்தனர்.
இந்த பதிவை, Janakiraman Jayachandran என்பவர் 2019 ஜூன் 7ம் தேதி வெளியிட்டுள்ளார். இது உண்மை என்று நம்பி பலரும் இதைப் பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
நவோதயா பள்ளிகள் என்பது மத்திய அரசால் நடத்தப்படும் பள்ளிக்கூடம். ஆனால், இதற்கான இடம், கட்டிடம் உள்ளிட்டவற்றை மாநில அரசுதான் ஏற்படுத்தித் தர வேண்டும். இந்த பள்ளிகளில் 10ம் வகுப்பு வரை இந்தி கட்டாயம் என்பதாலும் 11, 12ம் வகுப்புகளில் ஆங்கிலம் அல்லது இந்தியில் மட்டுமே வகுப்புகள் நடத்தப்படும், தமிழ் விருப்ப பாடமாக மட்டுமே இருக்கும் என்பதாலும் தமிழகத்தில் இந்த பள்ளிகள் அமைக்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.
ராஜிவ் காந்தி பிரதமராக இருந்தபோது, 1986ம் ஆண்டு இந்த பள்ளிகள் அறிமுகம் செய்யப்பட்டன. அப்போது தமிழகத்தில் அ.தி.மு.க ஆட்சிதான் இருந்தது. எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு 1989ல் தான் தி.மு.க ஆட்சிக்கு வந்தது. அதுவும் இரண்டே ஆண்டுகளில் அந்த ஆட்சியும் கலைக்கப்பட்டது. அதன் பிறகு, அ.தி.மு.க, தி.மு.க மாறிமாறி ஆட்சிக்கு வந்தன. இதனால், இரண்டு கழகங்களின் ஆட்சிக் காலத்திலும் இந்த பள்ளிகள் தமிழகத்தில் வரவில்லை என்பதுதான் உண்மை.

இந்த வீடியோவில் இது டெல்லி அரசு பள்ளி என்று குறிப்பிட்டுள்ளனர். ஆனால், பதிவிட்டவரோ இது நவோதயா பள்ளி என்று குறிப்பிட்டுள்ளார். எனவே, எது உண்மை என்று கண்டறியும் ஆய்வை மேற்கொண்டோம். சில மாதங்களுக்கு முன்பு ஆம் ஆத்மி சார்பில் டெல்லியில் செயல்படும் மாடல் பள்ளிக் கூடம் என்று ஒரு வீடியோ வெளியிடப்பட்டு இருந்தது. அதைப் போலவே இந்த வீடியோவும் இருந்ததாலும் டெல்லி அரசு பள்ளி என்று வீடியோவில் சொல்வதாலும், யூடியூபில் இதன் ஒரிஜினல் வீடியோ உள்ளதா என்று ஆய்வு செய்தோம்.
நம்முடைய தேடலில் அந்த வீடியோ கிடைத்தது. அந்த வீடியோவை எடுத்து எடிட் செய்து இவர்கள் வெளியிட்டது உறுதியானது.
ஆம் ஆத்மி கட்சி வெளியிட்ட வீடியோ உண்மையில் டெல்லியில் உள்ள அரசு பள்ளிதானா என்று ஆய்வு மேற்கொண்டோம். அந்த வீடியோவின் 5.22வது நிமிடத்தில் பள்ளி முதல்வர் அறையில் இருந்த ஒரு அறிவிப்பு பலகை காட்டப்படுகிறது. அதில், “எஸ்.பி.வி வெஸ்ட் விநோத் நகர், டெல்லி – 92” என்று இருந்தது. அதன் கீழ், “ஸ்கூல் ஐடி 1002005” என்று இருந்தது.

இது அரசு பள்ளியா என்று நாம் கூகுளில் தேடினோம். அப்போது, அது டெல்லி அரசு பள்ளிதான் என்பதற்கான ஆதாரம் கிடைத்தது. இந்த பள்ளியை அரசு பள்ளி கல்வித் துறை நிர்வகிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த பள்ளியில் எடுக்கப்பட்ட வேறு வீடியோ இருக்கிறதா என்று பள்ளியின் பெயரை டைப் செய்து யூடியூபில் தேடினோம். அப்போது டெல்லி மாநில கல்வித்துறை அமைச்சர் மணிஷ் சிசோடியா பங்கேற்ற நிகழ்ச்சியின் வீடியோ நமக்கு கிடைத்தது. அதில் உள்ள வகுப்பறைகளும், மேற்கண்ட வீடியோவில் இருந்த வகுப்பறைகளும் ஒரே மாதிரியாக இருப்பதை காண முடிந்தது. வீடியோவின் 4.42வது நிமிடம் உள்பட பல இடங்களில் இதைக் காண முடியும்.
நாம் மேற்கொண்ட ஆய்வில்,
நவோதயா பள்ளிகள் 1986ம் ஆண்டு ராஜிவ் காந்தி பிரதமராக இருக்கும்போது அறிமுகம் செய்யப்பட்டது தெரிந்தது.
1986ம் ஆண்டு நவோதயா பள்ளிகளை இந்தியாவில் அறிமுகம் செய்தபோது தமிழகத்தில் அ.தி.மு.க தான் ஆட்சிப் பொறுப்பிலிருந்துள்ளது.
அதன் பிறகு, தி.மு.க, அ.தி.மு.க கட்சிகள் மாறி மாறி தமிழகத்தை ஆட்சி செய்து வந்துள்ளன. அதனால் நவோதயா பள்ளிகளை வரவிடாமல் செய்ததற்கு இரண்டு கட்சிகளுமேதான் காரணமாக இருக்க முடியும். தி.மு.க தான் காரணம் என்பதற்கு சரியான ஆதாரம் இல்லை.
வீடியோவில் இருப்பது டெல்லி அரசு பள்ளி என்று ஏஏபி என்ற யூடியூப் பக்கத்தில் வெளியான வீடியோ நமக்கு கிடைத்துள்ளது.
வீடியோவில் பள்ளிக்கூட முதல்வர் அறையில் இருந்த அறிவிப்புப் பலகையில் பள்ளியின் பெயர் தெளிவாகத் தெரிகிறது.
பள்ளியின் பெயர், எண் அடிப்படையில் ஆய்வு நடந்தபோது அது அரசு பள்ளிதான் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு பொய்யானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:ஃபேஸ்புக்கில் பரவும் நவோதயா பள்ளிக்கூட வீடியோ – உண்மையா?
Fact Check By: Praveen KumarResult: False
