1000 பக்கங்களுக்கு மேல் உள்ள தேசிய கல்விக் கொள்கை வரைவை முழுமையாகப் படிக்காமல் எப்படி கருத்து கூற முடியும் என்று இயக்குநர் ஷங்கர் கூறியதாகவும் ஆனால், 9ம் வகுப்பைக் கூட தாண்டாத சூர்யா உள்ளிட்டவர்கள் கருத்து சொல்லி வருவதாகவும் ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இந்த தகவலின் உண்மைத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Shankar 2.png

Facebook Link I Archived Link

இயக்குநர் ஷங்கர் படம் பகிரப்பட்டுள்ளது. படத்தின் மேல் பகுதியில், "சுமார் 1000 பக்கங்களுக்கு மேல் இருக்கும் தேசிய கல்விக் கொள்கை மாதிரி அறிக்கை குறித்து முழுமையாகப் படித்துப் பார்க்காமல், எதுவுமே தெரியாமல், எப்படி கருத்து சொல்ல முடியும்? இயக்குனர் சங்கர் கேள்வி" என்று உள்ளது.

படத்தின் கீழ் பகுதியில், "கேட்டுதா ஒன்பதாம் வகுப்பு தாண்டாத *** சூர்யா, சைமன், கமல்ஹாசன் வகையறா, முதல்ல முழுமையா படிச்சிப்பாருங்க... தமிழக ஊழல் ஊடகங்களை பார்த்து நுனிப்புல் மேயாதீங்கடா" என்று உள்ளது.

இந்த பதிவை, Ponni Ravi என்பவர் 2019 ஜூலை 23ம் தேதி வெளியிட்டுள்ளார். இதைப் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

கல்வியில் சீர்திருத்தம் கொண்டுவரும் நோக்கில் 'தேசிய கல்விக் கொள்கை 2019' வரைவை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. ஆங்கிலத்தில் மொத்தம் 484 பக்கங்கள் (அட்டை முதல் அட்டை வரை...) இந்த வரைவு அறிக்கை உள்ளது. இதுதவிர, வரைவு அறிக்கையின் சாராம்சத்தைத் தொகுத்து தமிழ், இந்தி, தெலுங்கு, ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் வரைவு அறிக்கை தொகுப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது தமிழில் 51 பக்கங்களுக்கு உள்ளது. இந்த வரைவு பற்றி மக்களின் கருத்துக்கள் கேட்கப்பட்டுள்ளன.

நடிகர் சூர்யா இந்த புதிய வரைவு தேசிய கல்விக் கொள்கை பற்றி பேசியதற்கு பா.ஜ.க-வினர் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மத்திய அரசே எதிர்ப்பு இருந்தால் தெரிவிக்கும்படி கூறியுள்ள நிலையில், கருத்துச் சொன்னதே தவறு என்ற வகையில் நடிகர் சூர்யா உள்ளிட்டவர்களைப் பற்றி சமூக ஊடகங்களில் பல தவறான தகவல்கள் பரவி வருகின்றன.

அந்த வகையில், இயக்குநர் ஷங்கர் மற்றும் சூர்யா உள்ளிட்டவர்களை ஒப்பிட்டது போன்று இந்த பதிவு பகிரப்பட்டுள்ளது. இந்த பதிவில் உள்ளபடி இயக்குநர் ஷங்கர் கூறினாரா என்று ஆய்வு செய்தோம்.

அப்போது, எனக்கு இந்த விஷயம் பற்றித் தெரியாது என்று ஷங்கர் கூறியதாக செய்திகள் பல நமக்குக் கிடைத்தன. அந்த செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

வீடியோ உள்ளதா என்று ஆய்வு செய்தோம். அப்போது திரை பிரபலங்களின் கருத்துக்கள் என்று புதிய தலைமுறை வெளியிட்ட வீடியோ கிடைத்தது. அதில் இயக்குநர் ஷங்கர் பேசிய பகுதியை ஆய்வு செய்தோம்.

Archived Link

அப்போது, நடிகர் சூர்யா பேசிய புதிய தேசிய கல்விக் கொள்கை பற்றி அவரிடம் நிருபர்கள் கேள்வி எழுப்புகின்றனர். கல்வி பிரச்னையை மையமாக வைத்து இயக்கியவர் நீங்கள்... இந்த விவகாரத்தில் உங்கள் கருத்து என்ன என்று கேட்கின்றனர். ஆனால், எனக்குத் தெரியாது என்று மட்டுமே ஷங்கர் பதில் அளித்தார்.

அந்த பேட்டி உரையாடல் வருமாறு:

“நிருபர்: நடிகர் சூர்யா புதிய கல்விக் கொள்கை தொடர்பாக பேசியிருக்கிறார்... அதைப் பற்றி பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்"

ஷங்கர்: அது பத்தி எனக்குத் தெரியாது...

நிருபர்: நீங்க கல்வியை மையப்படுத்தி படம் எடுத்திருக்கீங்க... அவருக்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள்.

ஷங்கர்: நான் படிக்கவில்லை அதுபத்தி... நான் பார்க்கவில்லை...

நிருபர்: ஜனநாயக ரீதியாக தன்னுடைய கருத்தைத் தெரிவித்திருக்கிறார்...

ஷங்கர்: நான் பார்க்கவில்லை... இயக்குனர் சங்க தேர்தலில் போட்டியிட்ட அனைவருக்கும் வெற்றிபெற என்னுடைய வாழ்த்துக்கள்" என்று கூறிவிட்டு அங்கிருந்து வெளியேறினார்.

Archived Link

புதிய கல்விக் கொள்கை தொடர்பாக வேறு யாருக்காவது பேட்டி அளித்துள்ளாரா அல்லது அவருடைய அதிகாரப்பூர்வ ட்விட்டர்ஃபேஸ்புகில் கருத்து தெரிவித்துள்ளாரா என்று பார்த்தோம். ஆனால், எதிலும் அவர் தேசிய கல்விக் கொள்கை வரைவு பற்றி கருத்து கூறவில்லை.

அடுத்து நடிகர் சூர்யா 9ம் வகுப்பு தாண்டாதவர் என்று குறிப்பிட்டிருந்தனர். இது உண்மையா என்று ஆய்வு செய்தோம். பத்மா சேஷாத்ரி பால பவன் மற்றும் செயின்ட் பீட்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல் நிலைப் பள்ளியில் தன்னுடைய பள்ளிப் படிப்பை முடித்துள்ளார். பி.காம் படிப்பை சென்னை லயோலா கல்லூரியில் படித்திருக்கிறார் என்று சில செய்திகள் கிடைத்தன.

நம்முடைய ஆய்வில்,

1000 பக்கம் கொண்ட தேசிய கல்விக் கொள்கை வரைவைப் படிக்கவில்லை என்று இயக்குநர் ஷங்கர் பேட்டி அளித்ததாக எந்த ஒரு செய்தியும் கிடைக்கவில்லை.

நடிகர் சூர்யா விவகாரம் தொடர்பாக எனக்கு எதுவும் தெரியாது, படிக்கவில்லை, பார்க்கவில்லை என்று ஷங்கர் அளித்த பேட்டி வீடியோ கிடைத்துள்ளது.

தேசிய கல்விக் கொள்கை பற்றி ஷங்கர் தன்னுடைய ட்விட்டர், ஃபேஸ்புக் பக்கத்தில் கருத்து எதையும் தெரிவிக்கவில்லை.

நடிகர் சூர்யாவின் கல்வித் தகுதி தொடர்பான அவர் அளித்த பேட்டி கிடைத்துள்ளது.

இந்த ஆதாரங்கள் அடிப்படையில் இயக்குநர் ஷங்கர் கூறியதாக வெளியான தகவல் மற்றும் நடிகர் சூர்யா கல்வி தொடர்பான மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு பொய்யானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:கல்விக் கொள்கை வரைவை முழுவதும் படிக்காமல் எப்படி கருத்து சொல்வது என்று ஷங்கர் சொன்னாரா?

Fact Check By: Chendur Pandian

Result: False