“எட்டு வழி சாலை திட்டத்துக்கு மத்திய அரசு சார்பில் ஆதரவாக வாதாடிய பி.வில்சன்!” – பரபரப்பை ஏற்படுத்திய ஃபேஸ்புக் பதிவு

அரசியல் | Politics சமூக ஊடகம் | Social

தி.மு.க சார்பில் மாநிலங்கள் அவை உறுப்பினர் பதவிக்கு அறிவிக்கப்பட்ட பி.வில்சன் சென்னை – சேலம் எட்டு வழி பசுமை சாலைத் திட்டத்திற்கு ஆதரவாக மத்திய அரசு வழக்கறிஞராக ஆஜரானவர் என்று ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

DMK WILSON 2.png

Facebook Link I Archived Link

Mr பழுவேட்டரையர் @mrpaluvets என்ற பெயரில் ட்விட்டரில் வெளியான பதிவின் படம் பகிரப்பட்டுள்ளது “8 வழிச்சாலை திட்டத்தை ரத்து செய்யக்கூடாது. செயல்படுத்த அனுமதிக்க வேண்டும் என்று தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் கடுமையாக வாதிட்ட தி.மு.க தலைமை நிலைய வழக்கறிஞர் வில்சனை ராஜ்யசபா எம்.பி-காக தமிழின துரோகி திமுக தேர்ந்தெடுத்திருக்கிறது” என்று அதில் உள்ளது.

இந்த பதிவை, Mr பழுவேட்டரையர் என்பவர் 2019 ஜூலை 2ம் தேதி தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதைப் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

சென்னை உயர் நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர்களுள் ஒருவர் பி.வில்சன். கருணாநிதியை மெரினாவில் அடக்கம் செய்ய வேண்டும் என்ற வழக்கை மட்டுமல்ல… தமிழக அமைச்சர் மீதான குட்கா புகார் உள்ளிட்ட வழக்குகளில் எல்லாம் தி.மு.க-வினர் சார்பில் வில்சன்தான் ஆஜராகி வாதாடி வருகிறார்.

இவர் மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியிலிருந்தபோது சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு வழக்கறிஞராக பணியாற்றினார். தற்போது, இவர் தி.மு.க சார்பில் நாடாளுமன்ற மாநிலங்கள் அவைக்குப் போட்டியிடும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இந்தநிலையில், பி.வில்சன் மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் வழக்கறிஞராக இருந்து, எட்டு வழிச் சாலைத் திட்டத்துக்கு ஆதரவாக வாதாடினார் என்று ஒரு செய்தியை வெளியிட்டுள்ளனர்.

இது உண்மையா என்று எட்டு வழிச் சாலை வழக்கின் தீர்ப்பை ஆய்வு செய்தோம். அதில், மத்திய அரசு தரப்பில் அடிஷனல் சொலிசிட்டர் ஜெனரல் ஆஃப் இந்தியா ஜி.ராஜகோபாலன், அசிஸ்டன்ட் சொலிசிட்டர் ஜெனரல் ஆஃப் இந்தியா ஜி.கார்த்திகேயன், தமிழக அரசு சார்பில் அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண், அரசு ப்ளீடர் ஜெயபிரகாஷ் நாராயணன், சிறப்பு அரசு ப்ளீடர் சி.திருமாறன், சிறப்பு அரசு வழக்கறிஞர் ஹேமா, அரசு வழக்கறிஞர் கிருதிக்கா கமல், சீனியர் பேனல் கவுன்சில் வெங்கடசுவாமி பாபு ஆகியோர் பெயர் குறிப்பிடப்பட்டு இருந்தது. முந்தைய ஆட்சிக் காலத்தில்  அடிஷனல் சொலிசிட்டர் ஜெனரல் ஆஃப் இந்தியாவாக இருந்த பி.வில்சன் பெயர் எந்த இடத்திலும் இல்லை. தீர்ப்பைப் பார்க்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

பி.வில்சன் வழக்கறிஞர் தொழில் பின்னணியைப் பற்றி ஆய்வு செய்தோம். அப்போது, அவர் அடிஷனல் சொலிசிட்டர் ஜெனரல் ஆஃப் இந்தியாவாக 2012 ஆகஸ்ட் முதல் 2014 மே வரை பதவி வகித்துள்ளார். அதற்கு முன்பு தமிழக அரசின் அடிஷனல் அட்வகேட் ஜெனரல் (ஏஏஜி) ஆக 2008 ஆகஸ்ட் முதல் 2011 மே வரை இருந்துள்ளார். தற்போது அவர் மத்திய அரசு வழக்கறிஞராக இல்லை என்பதும் தெரிந்தது. இது தொடர்பான செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

எட்டு வழி சாலைத் திட்டத்திற்கு ஆதரவாக பி.வில்சன் ஆஜரானாரா என்று கூகுளில் தேடினோம். அப்போது, 2019 ஏப்ரல் 11ம் தேதி வெளியான செய்தி ஒன்று கிடைத்தது. அதில், பா.ம.க இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாசுக்கு தி.மு.க நோட்டீஸ் அனுப்பியதாகக் கூறப்பட்டு இருந்தது.

அந்த செய்தியில், “சென்னை – சேலம் எட்டு வழி பசுமை திட்டச் சாலை வழக்கில், திட்டத்திற்கு ஆதரவாக திமுக சார்பில் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆஜரானதாக, உண்மைக்கு மாறான தகவலை அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ளார். இது பத்திரிகை மற்றும் ஊடகங்களில் கடந்த 9ம் தேதி வெளியாகியுள்ளது. இந்த பொய்யான அறிக்கை மூத்த வக்கீல் பி.வில்சன் நற்பெயருக்கும், தி.மு.க.வின் நற்பெயருக்கும் களங்கம் விளைவிக்கின்ற வகையில் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ளார். 

சென்னை-சேலம் 8 வழிச்சாலை வழக்கில் திமுக தலைமைக் கழக மூத்த வக்கீல் பி.வில்சன் எந்த தரப்பினருக்கும் ஆஜராகவில்லை என்பதை சரிவர தெரிந்துகொள்ளாமல் அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். எனவே, இந்த தவறான அவதூறு பரப்பும் தகவலை 48 மணி நேரத்திற்குள் அன்புமணி ராமதாஸ் திரும்ப பெறவேண்டும். தவறான தகவலைத் தெரிவித்ததற்கு அவர் மன்னிப்பு கோர வேண்டும். மன்னிப்பு கோராத பட்சத்தில் அவர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்று இருந்தது. அந்த செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

Archived Link

இந்த பதிவுக்கு வந்திருந்த கமெண்ட்டை ஆய்வு செய்தோம். அப்போது, ஒருவர் நெடுஞ்சாலைகள் துறை சார்பில் ஆஜரானவரின் பெயர் ரிச்சர்ட்சன் வில்சன்… ஆனால், இவர் பி.வில்சன். இருவரும் வேறு நபர்கள் என்று குறிப்பிட்டிருந்தார். மற்றொருவரோ நமக்கு கிடைத்த தினகரன் நாளிதழ் செய்தியை பகிர்ந்திருந்தார். இருப்பினும், பதிவை வெளியிட்டவர் தன்னுடைய கருத்தை மாற்றிக்கொள்ளவில்லை.

DMK WILSON 3.png

நாம் மேற்கொண்ட ஆய்வில்,

1) சென்னை – சேலம் எட்டு வழிச் சாலை தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்த வழக்கில் மத்திய அரசு சார்பில் வாதாடிய வழக்கறிஞர்கள் பெயர் கிடைத்துள்ளது.

2) மத்திய அரசு வழக்கறிஞர் பணியை 2014ம் ஆண்டே வில்சன் ராஜினாமா செய்துவிட்ட செய்தி கிடைத்துள்ளது.

3) எட்டு வழி சாலை திட்டம் தொடர்பாக மத்திய அரசு தரப்பில் பி.வில்சன் வாதாடினார் என்று அன்புமணி அறிக்கை வெளியிட்டதும், தவறான தகவலை வெளியிட்டதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அன்பு மணிக்கு கோர்ட் நோட்டீஸ் அனுப்பப்பட்ட செய்தியும் கிடைத்துள்ளது.

இந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு பொய்யானது விஷமத்தனமானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:“எட்டு வழி சாலை திட்டத்துக்கு மத்திய அரசு சார்பில் ஆதரவாக வாதாடிய பி.வில்சன்!” – பரபரப்பை ஏற்படுத்திய ஃபேஸ்புக் பதிவு

Fact Check By: Chendur Pandian 

Result: False