‘’பாஜக ஏழை விவசாயி ஹேமமாலினி,’’ என்ற பெயரில், ஃபேஸ்புக் பதிவு ஒன்றை காண நேரிட்டது. இந்த பதிவை இதுவரை 17,000 பேர் ஷேர் செய்துள்ளனர். இன்னமும் வைரல் ஆகி வருகிறது. இந்த பதிவின் உண்மைத்தன்மையை ஆய்வு செய்ய தீர்மானித்தோம். அதில் கிடைத்த விவரங்களை இங்கே தொகுத்து அளித்துள்ளோம்.

தகவலின் விவரம்:
பாஜக ஏழை விவசாயி ஹேமமாலினி....!

Archive Link

இந்த பதிவில், ஹேமமாலினி ஹெலிகாப்டரில் அமர்ந்திருப்பது போலவும், கோதுமை கதிர்களை அறுப்பது போலவும் இரண்டு புகைப்படங்களை இணைத்து பதிவிட்டுள்ளனர். மேலும், ‘’இவுங்கதான் பாஜகவின் ஏழை விவசாயி வேட்பாளர், களையெடுக்க ஹெலிகாப்டர்லதான் வருவாங்க பரம ஏழை,’’ என்றும் எழுதியுள்ளனர்.

உண்மை அறிவோம்:
பாலிவுட் நடிகையாக இருந்து, பின்னர் அரசியலில் கால் பதித்தவர் ஹேமமாலினி. பத்ம ஸ்ரீ விருது பெற்ற இவர், தற்போது மக்களவை பாஜக உறுப்பினராக செயல்பட்டு வருகிறார். தற்போது பாஜக சார்பாக, நாடாளுமன்ற தேர்தலில், மதுரா தொகுதி வேட்பாளராக அவர் அறிவிக்கப்பட்டுள்ளார். இதற்கான பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் ஹேமமாலினி பொதுமக்களை ஈர்ப்பதற்காக, ஆங்காங்கே டிராக்டர் ஓட்டியும், வாக்கு சேகரித்து வருகிறார்.

சமீபத்தில்கூட டிராக்டர் ஓட்டிய வீடியோ ஒன்றை வெளியிட்டதற்காக, அவர் கடும் விமர்சனத்திற்கு ஆளானார். இதுபற்றி நியூஸ்18 வெளியிட்ட செய்தி ஆதாரம் இங்கே இணைக்கப்பட்டுள்ளது.

இந்த டிராக்டர் சர்ச்சை போலவே, ஹேமமாலினி ஹெலிகாப்டரில் சென்று விவசாயம் எதுவும் செய்து, வாக்கு சேகரித்தாரா என்ற சந்தேகம் எழுந்தது. இதன்பேரில், கூகுளில் டைப் செய்து ஆதாரம் தேடினோம். அப்போது, ஹேமமாலினி கதிர் அறுப்பது போன்ற புகைப்படங்கள் கிடைத்தன. ஆனால், அவை நாம் தேடிய புகைப்படங்கள் இல்லை. இருந்தாலும், இந்த புகைப்படங்கள் சமீபத்தில், மதுரா தொகுதியில், ஹேமமாலினி வாக்கு சேகரிப்பு செய்தபோது எடுத்தவை ஆகும். அதில், அவர் கட்டியிருக்கும் புடவையும், நாம் தேடும் புகைப்படத்தில் இருக்கும் புடவை நிறமும் மாறுபடுகிறது.

இதன்படி, மேற்கண்ட வீடியோ, அவர் மதுரா தொகுதியில், கடந்த ஏப்ரல் 1ம் தேதி தேர்தல் பிரசாரம் தொடங்கியபோது, எடுக்கப்பட்டதாகும். அதில், ஒரு கோதுமை வயலில் சென்று, அறுவடை செய்பவராக சில நிமிடங்கள் பணிபுரிந்து, பொதுமக்களின் கவனம் ஈர்த்தார். இதுபற்றிய செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

ஆனால், நாம் விசாரணைக்கு எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் எப்போது எடுக்கப்பட்டன, அவை உண்மையானவையா என்ற சந்தேகம் எழுந்தது. இதையடுத்து, கூகுள் சென்று, ரிவர்ஸ் இமேஜ் தேடல் செய்தோம். அப்போது, இதில் ஒரு புகைப்படம், அதாவது ஹேமமாலினி ஹெலிகாப்டரில் அமர்ந்திருப்பது போன்ற புகைப்படம் கிடைத்தது. அது உண்மையான ஒன்றுதான். ஆனால், அந்த புகைப்படம் 2015 அக்டோபர் 29ல், பீகார் தலைநகர் பாட்னா சென்றபோது எடுத்தது என்று தெரியவந்தது. ஆதார புகைப்படம் கீழே தரப்பட்டுள்ளது. இதுபற்றிய செய்தி ஆதாரம் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

இதன்படி, நாம் ஆய்வு செய்யும் பதிவில் உள்ள 2 புகைப்படங்களில், ஒன்று 2015ம் ஆண்டு எடுக்கப்பட்டது என்றும், தற்போது எடுக்கப்பட்டது இல்லை எனவும் உறுதியாகிறது. இதேபோல, இந்த 2 புகைப்படங்களும் திடீரென பார்க்க ஒன்றாக தோன்றினாலும், ஹேமமாலினி அணிந்திருக்கும் புடவையின் அடிப்படையில், அவை இரண்டும் வெவ்வேறு புகைப்படங்கள் என தெளிவாக தெரியவருகிறது. அதாவது, இந்த 2 புகைப்படங்களிலும் ஹேமமாலினி அணிந்திருக்கும் வளையல், புடவையின் பார்டர் நிறம் மாறுபடுகிறது. ஆதார படம் கீழே தரப்பட்டுள்ளது. எனவே, இவை ஒரேநாளில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இல்லை. 2 வெவ்வெறு புகைப்படங்களை இணைத்து, ஒன்றாக சித்தரித்துள்ளனர்.

இதற்கு அடுத்தப்படியாக, ஹேமமாலினி பச்சை நிற புடவையில், கதிர் அறுப்பது போன்ற புகைப்படம் எப்போது எடுக்கப்பட்டது என தேட முடிவு செய்தோம். பலவிதங்களில் முயற்சி செய்தும், அந்த புகைப்படத்தின் ஆதாரம் கிடைக்கவே இல்லை.

ஹேமமாலினியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர், ஃபேஸ்புக் பக்கங்களில் தேடிப்பார்க்க முயற்சித்தோம். அதன்படி, நீண்ட தேடுதலுக்குப் பின், #HemamaliniBJP ஃபேஸ்புக் பக்கத்தில் இதேபோன்ற பச்சை நிற புடவை அணிந்து, அவர் நிற்கும் புகைப்படம் கிடைத்தது. ஆனால், இந்த ஃபேஸ்புக் பக்கம், 2016ம் ஆண்டுக்குப் பின், எந்த பதிவும் வெளியிடவில்லை.

எப்படி இருந்தாலும், ஹேமமாலினி அறுவடை செய்வது போன்ற புகைப்படம் கிடைக்கவே இல்லை. இதையடுத்து, ஃபேஸ்புக்கிலேயே வேறு யாரேனும் இத்தகைய புகைப்படத்தை பதிவிட்டுள்ளனரா, என தேட தொடங்கினோம். அப்போது, ஹேமமாலினியின் பெயரை இந்தியில் டைப் செய்து தேடியபோது, அவரது பெயரிலேயே செயல்படும் ஒரு பக்கத்தின் முகவரி கிடைத்தது. அங்கே, பாஜக மற்றும் ஹேமமாலினி சார்ந்த அரசியல் செயல்பாடுகள் அனைத்தும் தினசரி பதிவிடப்பட்டு வருவதாக தெரியவந்தது. அதில் உள்ள புகைப்படங்களை தேடினோம்.

இதன்போது, நாம் தேடிய 2வது புகைப்படத்தின் உண்மை ஆதாரமும் கிடைத்தது. இதன்படி, இந்த புகைப்படம், 2014ம் ஆண்டு ஏப்ரல் 10ம் தேதி, அப்போதைய நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தை ஒட்டி, மதுரா பகுதியில், ஹேமமாலினி செய்த வாக்கு சேகரிப்பின்போது, எடுக்கப்பட்டதாகும். அப்போது, விவசாயிகளை சந்தித்து ஆதரவு திரட்டியுள்ளார். ஆதார புகைப்படங்கள் கீழே தரப்பட்டுள்ளன.

இதுவரை நமக்கு கிடைத்த ஆதாரங்களின்படி, நமக்கு தெரியவந்த உண்மையின் விவரம்:
1) ஹேமமாலினி ஹெலிகாப்டரில் சென்று, எங்கேயும் அறுவடை செய்து ஓட்டு கேட்கவில்லை.
2) அவர் ஹெலிகாப்டரில் இருக்கும் புகைப்படம், 2015ம் ஆண்டு எடுக்கப்பட்டதாகும். அதேபோல, அறுவடை செய்வது போன்ற புகைப்படம் 2014ம் ஆண்டு எடுக்கப்பட்டதாகும்.
3) வெவ்வேறு கால கட்டத்தில் எடுத்த புகைப்படங்களை ஒன்றாக சேர்த்து, ஹேமமாலினிக்கு எதிரான பிரசாரத்திற்கு பயன்படுத்தியுள்ளனர்.

முடிவு:
உரிய ஆதாரங்களின்படி, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட பதிவு தவறான ஒன்று என உறுதி செய்யப்படுகிறது. எனவே, இத்தகைய தவறான, போலி புகைப்படங்கள், வீடியோ, செய்திகள் போன்றவற்றை நமது வாசகர்கள் யாரும் பகிர வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறோம். அப்படி நீங்கள் பகிர்ந்தது பற்றி யாரேனும் புகார் அளித்தால், உரிய சட்டப்பூர்வமான நடவடிக்கைக்கு நீங்கள் ஆளாக நேரிடும் என்பதை மறந்துவிடாதீர்கள்.

Avatar

Title:பாஜக ஏழை விவசாயி ஹேமமாலினி!

Fact Check By: Parthiban S

Result: False