
மாநாடு ஒன்றில், இஸ்ரேல் பிரதமர் வரும்போது அரங்கிலிருந்த அனைவரும் நிற்கின்றனர். ஆனால், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மட்டும் அமர்ந்திருந்ததாக ஒரு பதிவு ஃபேஸ்புக்கில் வைரல் ஆகி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

மாநாட்டு அரங்கமே எழுந்து நிற்கும் படம் பகிரப்பட்டுள்ளது. அதில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மட்டும் அமர்ந்திருக்கும் காட்சி வட்டமிட்டுக் காட்டப்பட்டுள்ளது. தொலைவில் ஒருவர் நடந்து வருகிறார். அவருக்காக மாநாட்டு அரங்கமே எழுந்து நிற்பது போல் உள்ளது. ஆனால், அவர் யார் என்று தெரியவில்லை. படத்தின் மீது, “இஸ்ரேல் பிரதமர் வருகை தருகிறார்… ஒருவரைத் தவிர ஒட்டுமொத்த அரங்கமே எழுந்து நிற்கிறது. அவர்தான் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்” என்று குறிப்பிட்டுள்ளனர்.
இந்த பதிவை, Kalkudah Live என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் 2019, ஜூன் 15ம் தேதி வெளியிட்டுள்ளனர். இது உண்மை என்று நம்பி பலரும் இதைப் பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
பாகிஸ்தான் பிரதமர் அமர்ந்திருக்கிறார். இஸ்ரேல் பிரதமர் நடந்து வருகிறார் என்று குறிப்பிட்டுள்ளனர். எந்த மாநாடு, எப்போது நடந்தது என்று வேறு எந்த தகவலும் இந்த பதிவில் இல்லை. இதனால், படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம்.

அப்போது ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்.சி.ஓ) மாநாட்டில் வரவேற்பு மரியாதை முறையை மீறிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் என்று சில செய்திகள் கிடைத்தன. அனைவரும் எழுந்து நிற்கும்போது அவை அடக்கமின்றி அமர்ந்திருந்த இம்ரான் கான் என்று மாலை மலர் வெளியிட்ட செய்தியும் நமக்கு கிடைத்தது. இந்த செய்தி சரியா என்ற விவாதத்துக்குள் நாம் செல்லவில்லை.
ஆனால் அந்த செய்தியில், கிர்கிஸ்தான் நாட்டில் தலைநகரான பிஷ்கெக்கில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு நடந்தது. அப்போது, அந்த அமைப்பில் உள்ள தலைவர்கள் மாநாட்டு அரங்குக்கு வந்தனர். அவர்கள் வரும்போது, ஒட்டுமொத்த அரங்கமும் எழுந்து நின்றது. அனைத்து நாட்டுத் தலைவர்களும் வந்து சேரும் வரை அரங்கில் இருந்த அனைவரும் அமர்ந்திருந்தனர். ஆனால், அவை அடக்கமின்றி இம்ரான்கான் மட்டும் அமர்ந்திருந்தார் என்று செய்தியில் குறிப்பிட்டிருந்தனர். இம்ரான் கானைக் கண்டித்து சமூக ஊடகங்களில் பதிவுகள் பகிரப்பட்டு வந்ததது என்றும் அதில் குறிப்பிட்டிருந்தனர்.
மேலும், இப்படி இம்ரான் கான் அமர்ந்திருந்ததை அவருடைய கட்சியான பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாப் தன்னுடைய அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்திலும் வெளியிட்டுள்ளது என்று குறிப்பிட்டிருந்தனர். இதனால், கட்சியின் ட்விட்டர் பக்கத்தில் அந்த வீடியோவை தேடிக் கண்டுபிடித்தோம்.
அதில், இந்திய பிரதமர் மோடி, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் உள்ளிட்ட தலைவர்கள் வருகை தருகின்றனர். மோடி உள்ளிட்ட தலைவர்கள் அவரவர் நாற்காலிக்கு அருகே வந்ததும் நின்று, மற்ற தலைவர்கள் வருகைக்காக காத்திருந்தனர். ஆனால், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் வந்ததும் தன்னுடைய நாற்காலியில் அமர்ந்துகொண்டு முகத்தைத் திருப்பிக்கொண்டார். பிறகு எழுந்திருக்கிறார்… யாரும் வரவில்லை. அதனால் அமர்ந்து கொள்கிறார். அந்த நேரம் ரஷ்ய அதிபர் புதின் வருகை தருகிறார். இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹூ வந்தது போல இல்லை.

இதனால், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் இஸ்ரேல் உள்ளதா என்று ஆய்வு மேற்கொண்டோம். சீனா, ரஷ்யா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், உஸ்பெகிஸ்தான், தஜகிஸ்தான், இந்தியா, பாகிஸ்தான் ஆகிய எட்டு நாடுகள்தான் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் உறுப்பினராக உள்ள நாடுகள். இதுதவிர, ஆப்கானிஸ்தான், ஈரான், மங்கோலியா, பெலாரஸ் ஆகிய நாடுகள் பார்வையாளர்கள் அந்தஸ்தில் உள்ளன. இந்த அமைப்பில் இஸ்ரேல் இல்லை. இதனால், இஸ்ரேல் பிரதமர் இதில் பங்கேற்க வாய்ப்பில்லை.

ஆனால், இந்த அமைப்பில் இணைய இஸ்ரேல் விருப்பம் தெரிவித்துள்ளது என்ற செய்தியும் நமக்கு கிடைத்துள்ளது. அதனால், சிறப்பு அழைப்பாளர் பிரிவில் இஸ்ரேல் பிரதமர் பங்கேற்றாரா என்று ஆய்வு மேற்கொண்டோம்.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் அதிகாரப்பூர்வ இணைய தளத்துக்குச் சென்று பார்த்தோம். அதில் வெளியான பத்திரிகை செய்தியில் யார் யார் எல்லாம் கலந்து கொண்டார்கள் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. அதில், இஸ்ரேல் பிரதமர் பெயர் இல்லை. அந்த செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

இதன் மூலம் இந்த மாநாட்டில் இஸ்ரேல் பிரதமர் பங்கேற்றார் என்பதும், அவர் வரும்போது இம்ரான் கான் அமர்ந்திருந்தார் என்பதும் தவறான தகவல் என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:“இஸ்ரேல் பிரதமர் வருகையை புறக்கணித்த பாகிஸ்தான் பிரதமர்!” – பெருமை பேசும் ஃபேஸ்புக் பதிவு உண்மையா?
Fact Check By: Praveen KumarResult: False
