
‘’ரத்தத்தை கொதிக்க வைக்கின்ற புகைப்படம்,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் புகைப்பட பதிவை கண்டோம். அதனை பலரும் இந்தியாவில் நடந்த சம்பவம் எனக் கூறி வைரலாக பகிர்ந்து வருவதால் இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:

Facebook Claim Link | Archived Link |
இதே பதிவை மற்றொரு ஃபேஸ்புக் ஐடியிலும் பகிர்ந்திருந்ததைக் கண்டோம்.

Facebook Claim Link | Archived Link |
இதனை ஷேர் செய்யும் பலரும் இந்தியா எனக் குறிப்பிட அதனை சிலர் மறுத்து கமெண்ட் பகிர்ந்ததையும் காண நேரிட்டது.

இதேபோல, இந்திய போலீசாரை கண்டித்தும் சிலர் கமெண்ட் பதிவிட்டிருந்தனர்.

உண்மை அறிவோம்:
இவர்கள் குறிப்பிடுவது போல இப்படி ஒரு சம்பவம் இந்தியாவில் நிகழ்ந்ததா என்ற சந்தேகத்தில் மேற்கண்ட புகைப்படத்தை கூகுளில் பதிவேற்றி ரிவர்ஸ் இமேஜ் முறையில் தகவல் தேடினோம். அப்போது இந்த புகைப்படம் பங்களாதேஷில் எடுக்கப்பட்டது என்றும், கடந்த சில ஆண்டுகளாகவே இணையத்தில் பகிரப்படுகிறது என்றும் தெரியவந்தது.

இதே புகைப்படத்தை ட்விட்டர் பயனாளர் ஒருவர் சமீபத்தில் மறுபகிர்வு செய்திருந்ததையும் கண்டோம். அதன்மூலமாக, மற்றவர்களும் இதனை இந்திய அரசியலுடன் தொடர்புபடுத்தி பகிர்ந்திருக்கலாம் என்று தெரிகிறது.

இருந்தாலும், இதுதொடர்பான செய்தியை கண்டறிய நீண்ட நேரம் தகவல் தேடினோம். வெவ்வேறு கீவேர்ட் பயன்படுத்தி தேடியும் செய்தி எதுவும் கண்ணில் சிக்கவில்லை. இதையடுத்து, புகைப்படத்தில் இருப்பவர்கள் இந்திய போலீசாரா என ஆய்வு மேற்கொண்டோம். இந்திய பெண் போலீசாரின் சீருடை வேறு, இதில் இருக்கும் போலீசாரின் சீருடை வேறு என தெரியவந்தது.

இந்தியா முழுக்க பெண் போலீசார், காக்கி நிற சீருடையைத்தான் அணிகிறார்கள். இதில் வருவது போல ஊதா நிறத்தில் சீருடை அணிவதில்லை. கலவரங்களில் கூட பெண் போலீசார் காக்கி நிற சீருடையில்தான் இந்தியா முழுக்க கடமையாற்றுகிறார்கள்.

இதைத்தொடர்ந்து, குறிப்பிட்ட புகைப்படத்தில் இருப்பவர்கள் ஒருவேளை பங்களாதேஷ் போலீசாராக இருப்பார்களோ என ஆதாரம் தேடினோம். அப்போது இதனை உறுதிப்படுத்தக்கூடிய புகைப்படங்கள் நிறைய கிடைத்தன.
அதில் ஒன்றை எடுத்து நாம் ஆய்வு செய்யும் புகைப்படத்தில் உள்ள பெண் போலீசின் சீருடையுடன் ஒப்பிட்டோம். சரியாக பொருந்தியது.

இதுதவிர, வங்கதேசத்தில் பெண்கள் போலீசாக பணிபுரிகிறார்களா என விவரம் தேடினோம். அதில், 1986ம் ஆண்டு முதல் வங்கதேச அரசு பெண்களை காவலர் பணியிடம் தொடங்கி, உயர் பதவிகள் வரை பணி நியமனம் செய்து வருவதாக தகவல் கிடைத்தது. அவர்களுக்கென தரப்படும் சீருடை மற்றும் அதில் உள்ள லோகோ, ஹெல்மெட் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் இது வங்கதேசத்தில் எடுத்த புகைப்படம்தான் தெளிவாகிறது.
நமக்கு கிடைத்த ட்விட்டர் பதிவுகள், ரிவர்ஸ் இமேஜ் தேடல் முடிவுகள் மற்றும் இந்தியா மற்றும் பங்களாதேஷ் பெண் போலீஸ் சீருடை நிறம் ஆகிய தரவுகளின் அடிப்படையில், மேற்கண்ட புகைப்படம் பற்றிய தகவல் தவறு என உறுதி செய்கிறோம்.
முடிவு:
எனவே, வங்கதேசத்தில் நிகழ்ந்த சம்பவத்தை இந்திய அரசியலுடன் தொடர்புபடுத்தி பகிர்ந்துள்ளனர் என்று உரிய ஆதாரங்களுடன் நிரூபித்துள்ளோம். நமது வாசகர்கள் இத்தகைய குழப்பமான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோவை பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:இந்த பெண்ணை தகாத முறையில் இழுத்துச் செல்பவர்கள் இந்திய போலீசாரா?
Fact Check By: Pankaj IyerResult: False
