
காஷ்மீரில் மாணவிகள் போராட்டம் நடத்தும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. 370வது சட்டப் பிரிவு நீக்கத்தைத் தொடர்ந்து மாணவ, மாணவிகள், பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக இந்த வீடியோ பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

Facebook Link I Archived Link 1 I Archived Link 2
காஷ்மீரில் நடக்கும் பல்வேறு நிகழ்வுகளின் தொகுப்பாக இந்த வீடியோ உள்ளது. பள்ளி மாணவிகள் போராட்டம், மாணவர்களின் வன்முறை, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் காவலர்களுடன் வாக்குவாதம் என்று பல நிகழ்வுகள் இதில் உள்ளன. புல்வாமா மேல்நிலைப் பள்ளி மாணவிகளின் போராட்டம் என்று வீடியோவில் குறிப்பிட்டுள்ளனர். ஆனால், எப்போது இந்த போராட்டம் நடந்தது என்று குறிப்பிடவில்லை.
வீடியோவில் Rising Kashmir என்று இருந்தது. மேலும் KJV (Kashmir Jhelum Valley) என்று ஒரு லோகோவும் இருந்தது. அது அந்த வீடியோவை வெளியிட்ட ஊடகத்தின் பெயராக இருக்கலாம் என்று தோன்றியது. 2.05 நிமிடங்கள் இந்த வீடியோ ஓடுகிறது.
நிலைத் தகவலில், “தேன்கூட்டில் கைவைத்த பிஜேபி. காஷ்மீரில் போராட்டம் வெடித்தது” என்று குறிப்பிட்டுள்ளனர். அதாவது, காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து, இரண்டு மாநிலங்களாக பிரிவு நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் வெடித்துள்ளது என்ற வகையில் பதிவிட்டுள்ளனர்.
முக வை முகைதீன் என்ற ஃபேஸ்புக் ஐ.டி-யில் இருந்து 2019 ஆகஸ்ட் 7ம் தேதி ஒரு வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
உண்மை அறிவோம்:
காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுவதாக 2019 ஆகஸ்ட் 5ம் தேதி மத்திய அரசு அறிவித்தது. காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பு இருந்தே காஷ்மீரில் ஊரடங்கு உத்தரவு நீடித்து வருகிறது. நீண்ட நாட்களுக்குத் தொலைத்தொடர்பு துண்டிக்கப்பட்டு இருந்தது. பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு இருந்தன. தற்போது அங்கு பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டுவிட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால் மாணவர்கள் வரவில்லை என்றும் கூறப்படுகிறது. அந்த மாநிலத்தில் நடக்கும் நிகழ்வுகள் பெரிய அளவில் வெளியே தெரியவில்லை.
இந்த நிலையில், மத்திய அரசின் நடவடிக்கையைத் தொடர்ந்து காஷ்மீரில் வன்முறை வெடித்துள்ளதாக இந்த வீடியோவை பகிர்ந்துள்ளனர். வீடியோவின் தொடக்கத்தில் காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் உள்ள ஒரு உயர் நிலைப் பள்ளி மாணவிகள் போராட்டம் என்று குறிப்பிட்டுள்ளனர். இது காஷ்மீரில் நடந்த போராட்டம் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், இது எப்போது நடந்தது? 370வது சட்டப் பிரிவு நீக்கம் காரணமாக இவை அனைத்தும் நடந்ததா என்று ஆய்வு மேற்கொண்டோம்.

வீடியோவின் பகுதிகளை புகைப்படங்களாக மாற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது இந்த வீடியோ ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் இருந்து யூடியூப், சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவது தெரிந்தது. நமக்குக் கிடைத்த ஆய்வு முடிவுகளை பார்த்துக் கொண்டிருந்தபோது, 2017ம் ஆண்டு வெளியான ஒரு வீடியோ கிடைத்தது.
மாணவர்கள் போராட்டத்தால் அதிர்ந்த காஷ்மீர் என்று தலைப்பிட்டு வீடியோவை வெளியிட்டிருந்தனர். 2017 ஏப்ரல் 17ம் தேதி இந்த வீடியோ Rising Kashmir என்ற யூடியூப் ஐடியில் இருந்து பதிவேற்றம் செய்யப்பட்டு இருந்தது. ஆனால், எதற்காக இந்த போராட்டம் நடந்தது என்று எதையும் குறிப்பிடவில்லை.
2018ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் காஷ்மீரில் ஏன் போராட்டம் நடந்தது என்று தேடினோம். நம்முடைய தேடலில், காஷ்மீரில் பயங்கரவாதிகள் 11 பேர் வெவ்வேறு இடங்களில் சுட்டுக்கொல்லப்பட்டதைக் கண்டித்து போராட்டம் நடத்தியதாக செய்திகள் கிடைத்தன. இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்ட செய்தி மற்றும் புகைப்படத்தைக் காண இங்கே கிளிக் செய்யுங்கள்.
தொடர்ந்து தேடியபோது இந்த வீடியோ பற்றிய சில உண்மை கண்டறியும் ஆய்வுகள் வந்திருப்பது தெரிந்தது. அவற்றிலும் கூட Rising Kashmir 2017ம் ஆண்டு வெளியிட்ட வீடியோவைத்தான் ஆதாரமாகக் காட்டி இருந்தனர்.
நம்முடைய தேடலில், காஷ்மீரில் போராட்டம் வெடித்தது என்று நிலைத்தகவலுடன் பகிரப்பட்ட வீடியோ 2017ம் ஆண்டு எடுக்கப்பட்டது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பழைய வீடியோவை இப்போது நடந்தது போல பகிர்ந்துள்ளனர். இதன் மூலம் இது தவறான தகவல் என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:ஃபேஸ்புக்கில் பரவும் காஷ்மீர் மாணவிகள் போராட்டம் வீடியோ உண்மையா?
Fact Check By: Chendur PandianResult: False
