
லஞ்சம் வாங்கிய அதிகாரி ஒருவரை மீடியாக்கள் முன்னிலையில் குழியில் தள்ளி வட கொரிய அதிபர் தண்டனை அளித்தார் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

Facebook Link I Archived Link 1 I Archived link 2
12 விநாடிகள் ஓடக்கூடிய வீடியோ ஒன்றைப் பதிவிட்டுள்ளனர். அதில், வட கொரிய அதிபர் மற்றும் தென் கொரிய அதிபர்கள் ஒன்றாக நடக்கின்றனர். திடீரென்று தரையில் அமைக்கப்பட்ட கண்ணி திறக்கிறது, அதில் தென் கொரிய அதிபர் விழுவது போல உள்ளது. சற்று நேரத்தில் வட கொரிய அதிபர் மட்டும் தனியாக நடந்து வருகிறார்.
வீடியோவின் மேல் மற்றும் கீழ்ப் பகுதியில், “லஞ்சம் வாங்கிய அதிகாரியை மீடியா முன்னிலையில் மரண தண்டனை வழங்கிய வட கொரியா அதிபர்… தலைவா கொஞ்சம் தமிழ்நாடு வரையும் வந்துட்டு போக முடியுமா” என்று எழுதியுள்ளனர்.
இந்த வீடியோவை சுபா ஆனந்தி என்பவர் 2019 ஜூன் 18ம் தேதி வெளியிட்டுள்ளார். 35 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அதை ஷேர் செய்துள்ளனர்.
உண்மை அறிவோம்:
ஏவுகணை சோதனை, அணு ஏவுகணை சோதனை, அணு ஆயுத சோதனை என்று தொடர்ந்து பரபரப்பை கிளப்பி வந்தவர் வட கொரிய அதிபர் கிம் ஜாங். தொடர்ந்து அவரைப் பற்றிய செய்திகள், வீடியோக்கள் ஊடகங்களில் வந்ததால் அவரை பற்றி மக்கள் ஓரளவு தெரிந்து வைத்துள்ளனர். ஆனால், தென் கொரிய அதிபர் ஷி ஜின்பிங் பற்றி பெரும்பாலானவர்களுக்குத் தெரியாது.
கடந்த ஆண்டு வட கொரிய அதிபரும் தென் கொரிய அதிபரும் சந்தித்துப் பேசியது மிகப்பெரிய விஷயமா பார்க்கப்பட்டது. அந்த வீடியோவை எடுத்து எடிட் செய்தது போல இருந்தது.
வீடியோ எடிட் செய்யப்பட்டது போல இருந்தது. தென் கொரிய அதிபர் எல்லையைக் கடந்து வட கொரியாவில் கால் வைக்கும்போது திடீரென்று கதவு திறந்து அதன் உள்ளே தென் கொரிய அதிபர் விழுவது போல கிராஃபிக்ஸ் செய்துள்ளனர். உண்மையான வீடியோவைத் தேடினோம். எல்லையைத் தாண்டிய வட கொரிய அதிபர் என்று டைப் செய்து தேடியபோது நமக்கு உண்மை வீடியோக்கள் கிடைத்தன.

ABC News யூடியூப் பக்கத்தில் வெளியிட்டிருந்த வீடியோவின் 1.43வது நிமிடத்தில் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட ஃபேஸ்புக் வீடியோ காட்சிகள் தொடங்கின. அதில், தென் கொரிய அதிபரின் கையைப் பிடித்து கிம் ஜாங் வட கொரிய எல்லைக்குள் நுழைவார். சில விநாடிகள் அங்கிருந்தபடி இருவரும் பேசுகின்றனர். பின்னர் மீண்டும் இருவரும் தென் கொரிய எல்லைக்குள் நுழைந்து அங்கு புகைப்படம் மற்றும் வீடியோவுக்கு போஸ் கொடுக்கின்றனர்.
இந்த வீடியோவை எடுத்து எடிட் செய்து வெளியிட்டிருப்பது உறுதியாகி உள்ளது. வீடியோவில் இருப்பது தென் கொரிய அதிபர் என்பதை மறைத்து, ஊழல் செய்த அதிகாரியை தண்டித்த வட கொரிய அதிபர் என்று வீடியோ வெளியிட்டுள்ளனர். வீடியோவில் இருப்பவர் தென் கொரிய அதிபர் என்று தெரியாததால் பலரும் இது உண்மை என்று நம்பி ஷேர் செய்துள்ளது உறுதியாகி உள்ளது.
இந்த ஆதாரங்கள் அடிப்படையில், ஊழல் செய்த அதிகாரியை மீடியாக்கள் முன்னிலையில் வட கொரிய அதிபர் தண்டித்ததாக கூறப்படும் வீடியோ தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:லஞ்சம் வாங்கிய அதிகாரியை தண்டித்த வட கொரிய அதிபர்!- ஃபேஸ்புக் வீடியோ உண்மையா?
Fact Check By: Chendur PandianResult: False

அடபாவிகளா? இப்படி உண்மை செய்தியை திசை திருப்பும் முயற்சி தவறல்லவா?