
பிரதமர் மோடியை மிக மோசமாக விமர்சித்து வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் ட்வீட் செய்ததாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
அமெரிக்கா வடகொரியாவை மிரட்டியிருந்தால் இந்நேரம் உலக வரைபடத்திலிருந்து அமெரிக்காவையே அகற்றியிருப்பேன் என்று மோடியை மிக மோசமாக விமர்சித்து வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் ட்வீட் வெளியிட்டதாகவும் அதற்கு மோடி “நான் உங்களின் நண்பன், தயவு செய்து இந்த ட்வீட்டை அழித்திடுங்கள்” என்று வேண்டிக்கொண்டது போலவும் ஒரு ஸ்கிரீன்ஷாட் ஒன்றை பகிர்ந்துள்ளனர்.
நிலைத் தகவலில் “அடேய் சங்கிப்பயலே உன் வீராப்பெல்லாம் எங்ககிட்டதானா?” என்று கேட்டுள்ளனர். இந்த பதிவை Khamri Mohideen என்பவர் 2020 ஏப்ரல் 8ம் தேதி வெளியிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
அமெரிக்காவுக்கு கொரோனாவை கட்டுப்படுத்த உதவும் மலேரியாவுக்கான மருந்தை அனுப்பாவிட்டால் இந்தியாவுக்கு பதிலடி கொடுக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறினார். அமெரிக்க அதிபர் மிரட்டினார் என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. ஆனால், அமெரிக்க அதிபர் மிரட்டல் எல்லாம் விடுக்கவில்லை, ஆனால் மனிதாபிமான அடிப்படையில் ஏற்றுமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டது என்று பா.ஜ.க ஆதரவாளர்கள் கூறிவருகின்றனர்.
இந்த நிலையில் மோடி மிரட்டலுக்கு பயந்தது போலவும், மோடியை வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் விமர்சித்தது போலவும் ஸ்கிரீன்ஷாட்டை பகிர்ந்துள்ளனர். மேலும், கிம் ஜாங் உன்னிடமும் மோடி கெஞ்சுவது போல இந்த பதிவை உருவாக்கியுள்ளனர்.
வட கொரியா ராணுவ கட்டுப்பாடு கொண்ட நாடு. அங்கு இணையதளம் உள்ளிட்ட சேவைகளுக்கு மிகக் கடும் கட்டுப்பாடு உள்ளது. மேலும், கிம் ஜாங் உன் ட்விட்டரில் உள்ளாரா என்பதே மிகவும் கேள்விக்குரிய விசயம்.
எனவே, இந்த படத்தில் உள்ளது போன்று கிம் ஜாங் உன்னுக்கு அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கம் ஏதும் உள்ளதா என்று பார்த்தோம். ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவில் உள்ள @kimoffl என்ற முகவரியில் ட்விட்டர் கணக்கு உள்ளதா என்று பார்த்தோம். அப்படி எதுவும் இல்லை என்பது தெரியவந்தது.
வேறு முகவரியில் கிம் ஜாங் உன் பெயரில் ட்விட்டர் கணக்கு உள்ளதா என்று தேடிப் பார்த்தோம். கிம் ஜாங் உன் பெயரில் பல அங்கீகரிக்கப்படாத ட்விட்டர் பக்கங்கள் இருந்தன. அதில் ஒன்று போலியான அக்கவுண்ட் என்று வெளிப்படையாகவே குறிப்பிட்டிருந்தது. ஒன்றில் பதிவிட்டு பல வருடங்கள் ஆகின்றது.
ரியல் கிம் ஜாங் உன் என்ற முகவரி கொண்ட பக்கத்தில் கிம் ஜாங் உன்னை கிண்டல் செய்யும் வகையில் பதிவுகள் இடப்பட்டு வருவதைக் காண முடிந்தது. கடைசியாக வெளியான பதிவில், “சீனாவின் அனைத்து அழகான பெண்ணையும் கடத்திக்கொண்டு வந்து சீனாவுக்கு பாடம் கற்றுக்கொடுக்க திட்டமிட்டு வருகிறேன். கோவிட்19”, என்று உள்ளது.
தொடர்ந்து தேடியபோது பிபிசி வெளியிட்ட செய்தி நமக்கு கிடைத்தது. அதில், கிம் ஜாங் உன்னுக்கு சமூக ஊடக பக்கங்கள் இல்லை என்று குறிப்பிட்டிருந்தனர். மேலும், வட கொரியாவில் ட்விட்டருக்கு தடை உள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தனர்.
வட கொரியாவின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்துக்குச் சென்று பார்த்தோம். எதிலும் சமூக ஊடக தொடர்பு தொடர்பாக எந்த தகவலும் இல்லை. வட கொரியாவின் அதிகாரப்பூர்வ செய்தி ஊடக பக்கத்துக்குச் சென்று பார்த்தோம். மோடியை கிம் ஜாங் உன் விமர்சித்தது தொடர்பாக எந்த ஒரு செய்தியும் இல்லை. இதன் அடிப்படையில், மோடியை வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் மிக மோசமாக விமர்சித்து ட்வீட் செய்தார் என்று பகிரப்படும் பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.
