‘’பர்மா கட்சியை பார்த்து சின்னம், பெயரை திருடிய திமுக,’’ என்ற பெயரில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Facebook Claim LinkArchived Link

இந்த பதிவில், கடந்த 2019ம் ஆண்டில் வெளியான மற்றொரு ஃபேஸ்புக் பதிவின் ஸ்கிரின்ஷாட்டை இணைத்துள்ளனர். அந்த அசல் பதிவையும் கீழே இணைத்துள்ளோம்.

Facebook Claim Link Archived Link

இந்த ஃபேஸ்புக் பதிவில், பர்மா திராவிட முன்னேற்றக் கழகம் வெளியிட்ட அடையாள இதழ் பற்றிய புகைப்படத்தை பகிர்ந்துள்ளனர். அதன் மேலே, ‘’என்டா இது, கட்சி பேரு, சின்னம், எல்லாம் பர்மாவில் இருந்து ஆட்டைய போட்டு இருக்கானுங்க.. திமுகன்னாலே திருட்டுதான்,’’ என்று எழுத்துப் பிழையுடன் எழுதியுள்ளனர்.

உண்மை அறிவோம்:
மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் கூறியுள்ள தகவல் அடிப்படை ஆதாரமற்றதாகும். ஏனெனில், அதனை உற்றுப் பார்த்தாலே, திமுகவின் பர்மா கிளை இது என்றும், அது 1950ல் தொடங்கப்பட்டது என்றும் தெளிவாக தெரியும்.

இன்னமும் விளக்கம் புரியவில்லை என்றால், வரலாற்றை சற்று புரட்டி பார்ப்போம். திமுக தொடங்கப்பட்டது 1949ம் ஆண்டு, செப்டம்பர் 17ம் தேதி ஆகும்.

இதுபற்றி திமுகவின் அதிகாரப்பூர்வ இணையதளத்திலேயே விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அக்கட்சி எப்போது, எங்கே, எப்படி தொடங்கப்பட்டது என்ற விவரம் அறிய இங்கே கிளிக் செய்யவும். தொடக்க காலத்தில் தமிழ் உணர்வாளர்களின் இயக்கமாக பார்க்கப்பட்ட திமுகவை உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள் வரவேற்றனர். தங்கள் நாடுகளில் திமுக.,விற்கு கிளைகளை தொடங்கிக் கொண்டனர்.

இதனை பின்பற்றியே பர்மாவில் (மியான்மர்) 1950ம் ஆண்டில், திமுகவின் கிளையை தொடங்கியுள்ளனர். அதற்கும், இதே பெயர், சின்னம்தான். கட்சிக்குப் பெயருக்கு முன்னால் மட்டும் பர்மா என சேர்த்துள்ளனர். ஆனால், இதனை தவறாகப் புரிந்துகொண்டு, பர்மா திமுகவில் இருந்துதான் பெயர், சின்னம் போன்றவற்றை திமுக திருடிக் கொண்டுவிட்டதாக, சிலர் வதந்தி பரப்பியுள்ளனர்.

இந்த தகவல் முதலில் ட்விட்டர் மூலமாக 2019 டிசம்பர் மாதத்தில் பரவ, அதற்கு திமுக ஆதரவாளர்கள் தகுந்த பதிலடியும் கொடுத்துள்ளனர். அதன் விவரத்தை கீழே இணைத்துள்ளோம்.

Twitter LinkArchived Link

சாதாரணமாகவே, ஒவ்வொரு அரசியல் கட்சியும் தொடங்கப்பட்ட ஆண்டு, அதன் வரலாறு பற்றிய அடிப்படை விசயங்களை தெரிந்துகொண்டால் இதுபோன்ற குழப்பம் வராது.

இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் நமக்கு தெரியவந்த உண்மையின் விவரம்,

திமுக 1949ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. அதற்கு உலகம் முழுவதும் பல கிளைகள் உள்ளன. அதில் ஒன்றுதான் பர்மா திமுகவும். அந்த கிளை 1950ம் ஆண்டில் தொடங்கப்பட்டதாகும். எந்தெந்த நாடுகளில் கிளை ஆரம்பிக்கிறார்களோ, அந்த நாட்டின் பெயரையும் உடன் சேர்த்துக் கொள்வது திமுக உள்பட பல்வேறு கட்சிகளின் வழக்கமாகும். அப்படித்தான் இந்த பர்மா திமுகவும் அந்நாட்டில் வாழ்ந்த தமிழர்களால் தொடங்கப்பட்டிருக்கிறது. பின்னாளில் பர்மாவில் இருந்து தமிழர்கள் அடித்து துரத்தப்பட்டது தனிக்கதை.

முடிவு:
உரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வு செய்த ஃபேஸ்புக் பதிவில், தவறான தகவல் உள்ளதாக நிரூபித்துள்ளோம். நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை காண நேரிட்டால், +91 9049044263 என்ற வாட்ஸ்ஆப் எண்ணிற்கு அனுப்பி வைக்கும்படி கேடடுக் கொள்கிறோம்.

Avatar

Title:திமுகவின் பர்மா கிளை பற்றி பகிரப்படும் தவறான தகவல்!

Fact Check By: Pankaj Iyer

Result: False