
‘’ஒடிசாவில் பானி புயல் தாக்கியதற்கு காரணமான தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உடனே பதவி விலக வேண்டும்,’’ என்று மு.க.ஸ்டாலின் கூறியதைப் போன்ற ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். அதில் கிடைத்த விவரம் இங்கே தொகுத்து தரப்பட்டுள்ளது.
வதந்தியின் விவரம்:
…ஒடிசாவில் பானி புயல் தாக்குதல் காரணமாண தமிழக முதல்வர் எடிபாடி பழனிசாமி உடனே பதவி விலக வேண்டும்…

மே 5ம் தேதியன்று இந்த பதிவை தர்மபுரி சின்னவன் எனும் நான் என்பவர் பகிர்ந்துள்ளார். இதில், மு.க.ஸ்டாலின் புகைப்படத்தையும், ஒரு நாளிதழின் போஸ்டரையும் இணைத்து வெளியிட்டுள்ளனர்.
உண்மை அறிவோம்:
குறிப்பிட்ட ஃபேஸ்புக் பதிவை உற்று பார்த்தாலே ஒரு விசயம் எளிதில் புரியும். அதாவது, இதனை பகிர்ந்தவர் எடப்பாடி பழனிசாமி என்று கூட எழுதாமல், எடிபாடி பழனிசாமி என எழுதியுள்ளார். அடுத்தப்படியாக, மு.க.ஸ்டாலின் புகைப்படத்தையும், தமிழ் நாளிதழ் ஒன்றின் போஸ்டரையும் இணைத்து பகிர்ந்துள்ளார். அந்த போஸ்டரில், ‘’ஒடிசாவில் பானி புயல் கோர தாண்டவம் பல்லாயிரம் வீடுகள் சேதம்,’’ என மேலே ஒரு செய்தியும்; ‘’எடப்பாடி சதி: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு,’’ என கீழே ஒரு செய்தியும் உள்ளன. இது வெவ்வேறு செய்திகள் என்பதால், குறிப்பிட்ட நாளிதழின் வெளியீட்டுப் பிரிவு, அவற்றுக்கு தனித்தனி வண்ணத்தில் அடையாளமிட்டு, வேறுபடுத்திக் காட்டியுள்ளனர். இந்த அடிப்படை உண்மை கூட புரியாமல் எடுத்த எடுப்பிலேயே, மு.க.ஸ்டாலினை கிண்டல் செய்கிறேன் என இந்த பதிவை தவறாகச் சித்தரித்து வெளியிட்டுள்ளனர்.

இது தவிர, ஒடிசாவில் ஏற்பட்ட புயல் சேதத்திற்கு யாராவது தமிழக முதல்வரை பதவி விலகச் சொல்வார்களா?, அதுவும் எதிர்க்கட்சித் தலைவராக உள்ள ஒருவர் இப்படி சிறுபிள்ளைத்தனமாக அறிக்கை வெளியிடுவாரா என்ற முன்யோசனை கூட இல்லாமல், இப்பதிவை பகிர்ந்துள்ளனர்.
மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு பார்ப்பதற்கு, கிண்டல் செய்வது போல இருந்தாலும், இதனை வெளியிட்ட நபரின் பின்னணி காரணமாக, இது விஷமத்தனமாக வேண்டுமென்றே பகிரப்பட்ட தகவல் என தெரியவருகிறது.
இந்த பதிவை வெளியிட்ட நபர் வெளிப்படையாகவே, தன்னை ஒரு பாமக நிர்வாகி என அடையாளப்படுத்தியுள்ளார். எனவே, அரசியல் நோக்கத்துடன் ஸ்டாலின் பற்றி இவ்வாறு தவறான முறையில் வதந்தி பரப்பியுள்ளார் என உறுதி செய்யப்படுகிறது.

இதுவரை கிடைத்த ஆதாரங்களின்படி, இந்த பதிவு சுய அரசியல் லாபத்தின் அடிப்படையில் தவறாகச் சித்தரிக்கப்பட்ட ஒன்று என உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில், நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட ஃபேஸ்புக் பதிவு ஒரு தவறான தகவல் என நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் யாரும் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோ போன்றவற்றை சமூக ஊடகங்களில் மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். அவ்வாறு நீங்கள் பகிர்ந்து, இதுபற்றி பாதிக்கப்பட்ட நபர் யாரேனும் புகார் அளித்தால், உரிய சட்ட நடவடிக்கையை சந்திக்க நேரிடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

Title:ஒடிசாவை பானி புயல் தாக்கியதற்கு எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும்: மு.க.ஸ்டாலின் கூறியது உண்மையா?
Fact Check By: Parthiban SResult: False
