
அம்மா அனுப்பும் பணத்தில் மோடி உல்லாச வாழ்வு வாழ்வதாகக் கூறி, ஒரு ஃபேஸ்புக் பதிவு வைரலாகி வருகிறது. இதன்பேரில், உண்மை கண்டறியும் சோதனை நடத்தினோம். அதில் கிடைத்த விவரங்களை இங்கே தொகுத்துள்ளோம்.
தகவலின் விவரம்:
தரமான வடை ஜி ???
இந்த பதிவை ஏப்ரல் 24ம் தேதியன்று, அரசியல் உண்மைகள் 2.0 என்ற ஃபேஸ்புக் ஐடி வெளியிட்டுள்ளது. இதில், நியூஸ் 7 தொலைக்காட்சி பெயரில் வெளியான நியூஸ் கார்டை வைத்து, அதன் கீழே பதிவரின் சொந்த கருத்தையும் இணைத்து வெளியிட்டுள்ளனர். அதாவது, ‘’நான் முதல்வராக இருந்தபோதும் சரி, பிரதமராக இருந்த போதும் சரி, என்னுடைய தனிப்பட்ட செலவுகளுக்கு அரசாங்க பணத்தை செலவழிப்பது இல்லை; எனக்கு என் அம்மாதான் பணம் அனுப்புவார். இப்பவும் அனுப்புகிறார். அவர் என்னிடமிருந்து எப்போதும் எதிர்பார்க்கமாட்டார்,’’ என்று மோடி சொன்னதாக, நியூஸ்7 வெளியிட்ட நியூஸ் கார்டில் கூறப்பட்டுள்ளது.
அதற்குக் கீழே, வடிவேலுவின் நகைச்சுவை காட்சி ஒன்றை இவர்களாகவே இணைத்து, ‘’அப்போ நீ சாப்புடுற 4 லட்சம் ரூபா காளான், உடுத்துற 10 லட்சம் ரூபா கோட். எல்லாம் உங்க அம்மா சம்பாதிச்சு அனுப்புன பணம் அப்படித்தானே..!,’’ என்றும் எழுதியுள்ளனர். இதனை பலரும் அரசியல் காரணங்களுக்காக, வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
கடந்த ஏப்ரல் 24ம் தேதியன்று, பிரதமர் நரேந்திர மோடி, பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாருக்கு, பிரத்யேக பேட்டி ஒன்றை அளித்தார். சுமார் 1 மணிநேரம் ஓடும் அந்த பேட்டியில் பல சுவாரசியமாக கேள்விகளுக்கு, பிரதமர் மோடி பதில் அளித்தார். இதன் முழு வீடியோவை, அவரது அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த பேட்டியில், தனது சிறு வயது வாழ்க்கை, அம்மாவுடன் உள்ள பாசமான உறவு உள்ளிட்ட பல்வேறு விசயங்களை மோடி பேசியிருந்தார். இதே நாளில்தான், நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட ஃபேஸ்புக் பதிவும் வெளியாகியுள்ளது. அதாவது, மோடியின் பேட்டி வெளியான சில நிமிடங்களிலேயே, இந்த மீமை தயாரித்து, சுடச் சுட வெளியிட்டுள்ளனர்.
இதன்பேரில், நியூஸ்7 வெளியிட்ட நியூஸ் கார்டு உண்மைதானா என முதலில் தேடிப் பார்த்தோம். இதன்படி, நியூஸ் 7 வெளியிட்ட உண்மைச் செய்தி விவரம் கிடைத்தது.

இதன்மூலமாக, நாம் ஆய்வு செய்யும் மீமில் உள்ள நியூஸ் கார்டு உண்மைதான் என தெரியவருகிறது.
Archived Link
ஆனால், நியூஸ் 7 வெளியிட்ட செய்தியில் தவறான தகவலும் உள்ளது. ஆம். எனது குடும்பத்தினரின் செலவுக்கு அரசாங்கப் பணத்தை செலவிடுவதில்லை என்றுதான் மோடி சொன்னாரே தவிர, எனது தனிப்பட்ட செலவுகளுக்கு என, எங்கேயும் விளக்கமாகக் கூறவில்லை. இதுபற்றி என்டிடிவி வெளியிட்ட செய்தியை முழுதாக படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

என்டிடிவி இணையதளத்தில் உள்ள செய்தியுடன், நியூஸ்7 செய்தியை ஒப்பிடுகையில், குழப்பம்தான் மிஞ்சுகிறது. இதுதவிர, மோடி 4 லட்சம் ரூபாய்க்கு காளான் சாப்பிடுகிறார், 10 லட்சம் ரூபாய்க்கு கோட் போடுகிறார், என்பது எல்லாம் இந்த பதிவை வெளியிட்டவரின் தனிப்பட்ட கருத்தாகும். ஆனால், அதில் ஒன்றுகூட உண்மையில்லை. ஆம். மோடி அப்படி எதுவும் செய்யவில்லை. இதுபற்றி நாம் ஏற்கனவே விரிவான உண்மை கண்டறியும் சோதனை நடத்தி அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளோம். இந்த 4 லட்சம் ரூபாய் காளான், 10 லட்சம் ரூபாய் கோட் போன்றவை எல்லாம் ஊகத்தின் அடிப்படையில் பரப்பப்படும் வதந்திகளே என்று நாம் விரிவாக வெளியிட்ட செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
இதுவரை நமக்கு கிடைத்த ஆதாரங்களின்டி பார்க்கும்போது, குறிப்பிட்ட ஃபேஸ்புக் பதிவில் கூறப்பட்டுள்ள தகவல் தவறானது என முடிவு செய்யப்படுகிறது. மோடி பற்றி நியூஸ்7 வெளியிட்ட நியூஸ் கார்டில் உள்ள அனைத்து தகவல்களும் சரி எனக் கூற முடியாது. அத்துடன், இந்த பதிவை பகிர்ந்த நபர் மோடி பற்றி வதந்தி பரப்பும் நோக்கில் செயல்பட்டுள்ளார் எனவும் தெளிவாகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில், நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட ஃபேஸ்புக் பதிவு தவறான ஒன்று என நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் யாரும் இத்தகைய நம்பகத்தன்மை இல்லாத செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோ போன்றவற்றை சமூக ஊடகங்களில் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். அவ்வாறு நீங்கள் பகிர்ந்தது பற்றி சம்பந்தப்பட்டவர்கள் புகார் அளித்தால் உரிய சட்ட நடவடிக்கையை நீங்கள் சந்திக்க நேரிடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

Title:அம்மா அனுப்பும் பணத்தில் மோடி உல்லாச வாழ்வு வாழ்கிறாரா?
Fact Check By: Parthiban SResult: False
