
மாஸ்க் இன்றி, சமூக இடைவெளி இன்றி கூடிய மிகப்பெரிய கூட்டம் என்று சமூக ஊடகங்களில் ஒரு வீடியோ வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

சாலையில் இளைஞர்கள் திரண்டு நிற்கும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. இது எங்கே, எப்போது எடுக்கப்பட்டது என்ற விவரம் அந்த வீடியோவில் இல்லை. நிலைத் தகவலில், “மாஸ்க்காவது சமூக விலகலாவது பசி வந்தா பத்தும்பறக்கும்.பிஜேபியால் இந்தியாவின் ஒட்டு மொத்த சோலி முடிக்கப்படும் நாள் மிக தூரத்தில் இல்லை” என்று குறிப்பிட்டுள்ளனர்.
இந்த வீடியோவை Syed Z என்பவர் மே 20, 2020 அன்று வெளியிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
வீடியோவிலும் நிலைத் தகவலிலும் இது எங்கே, எப்போது எடுக்கப்பட்டது என்று குறிப்பிடவில்லை. எதற்காக இவ்வளவு பேரும் திரண்டிருக்கிறார்கள் என்றும் கூறவில்லை. கொரோனா பாதிப்பு ஊரடங்கு காரணமாக அதிக அளவில் புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர் திரண்டு போராட்டங்களில் ஈடுபடுவதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.
இந்த நிலையில், மாஸ்க், சமூக இடைவெளியின்றி திரண்ட கூட்டம் என்று குறிப்பிட்டிருப்பதன் மூலம் லாக் டவுன் காலத்தில் எடுத்தது என்று குறிப்பிடுவது தெரிகிறது. எனவே, இந்த வீடியோ ஊரடங்கு காலத்தில் எடுக்கப்பட்டதா என்று ஆய்வு மேற்கொண்டோம்.
வீடியோ எங்கே, எப்போது எடுத்தது என்று எந்த ஒரு தகவலும் இல்லாத நிலையில், வீடியோ காட்சிகளை புகைப்படமாக மாற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது 2019ம் ஆண்டு இதே வீடியோவை பலரும் யூடியூப். ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடக பக்கங்களில் பதிவிட்டிருப்பதைக் காண முடிந்தது.
இதன்மூலமாக, இந்த வீடியோ 2020 மார்ச் 24ம் தேதி அறிவிக்கப்பட்ட ஊரங்குக்குப் பிறகு எடுக்கப்பட்டது இல்லை என்பது உறுதியானது.

இந்த வீடியோ எங்கே எடுக்கப்பட்டது, இவர்கள் எல்லோரும் யார் என்று தொடர்ந்து தேடியபோது, சில யூடியூப் வீடியோக்களில் உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியை ஒட்டிய நகரான ஃபைசாபாத்தில் எடுக்கப்பட்டது என்றும், ராணுவ பணியில் சேருவதற்காக இளைஞர்கள் அதிக அளவில் திரண்டதாகவும் குறிப்பிட்டிருந்தனர்.
அதே தேதியில் ஃபைசாபாத்தில் ராணுவ ஆட்கள் தேர்வு நடந்ததா, அது தொடர்பாக செய்தி ஏதும் வெளியாகி உள்ளதா என்று தேடினோம். அப்போது இந்தி ஊடகம் ஒன்றில் அதிக அளவில் இளைஞர்கள் திரண்டதாகவும், அடிப்படை வசதிகள் கூட செய்து தரவில்லை என்று குற்றம்சாட்டிய இளைஞர்கள் வன்முறையில் ஈடுபட்டதாகவும், போலீசார் தலையிட்ட நிலைமையை சீர்படுத்தியதாகவும் செய்தி கிடைத்தது. இதன் மூலம், இந்த வீடியோ ராணுவ வீரர்கள் தேர்வின் போது எடுக்கப்பட்டது என்பது தெளிவாகிறது.

நம்முடைய ஆய்வில்,
இந்த வீடியோவை 2019ம் ஆண்டு முதல் பலரும் ஷேர் செய்து வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் ஃபைசாபாத்தில் நடந்த ராணுவ வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்ற இளைஞர்கள் என்பது உறுதியாகி உள்ளது.
இதன் மூலம் கொரோனா ஊரடங்கு காலத்தில் மாஸ்க், சமூக இடைவெளி இன்றி திரண்ட இளைஞர்கள் என்று பகிரப்படுவது தவறான தகவல் என்பது உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049044263) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:மாஸ்க் இன்றி கூடிய கூட்டம்… லாக் டவுன் காலத்தில் எடுக்கப்பட்ட வீடியோவா?
Fact Check By: Chendur PandianResult: False
