
400 ஆண்டுகளுக்கு ஒரு முலை மலரும் பகோடா மலர் இமயமலை திபெத்தில் பூத்துள்ளது என்று ஒரு படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

Facebook Link | Archived Link |
மிக உயரமான மலர் ஒன்றின் படம் பகிரப்பட்டுள்ளது. படத்தின் மேல் பகுதியில், “400 வருடங்களுக்கு ஒரு முறை மலரும் பகோடா மலர் இமய மலை திபெத்தில்” என்று போட்டோஷாப்பில் டைப் செய்யப்பட்டுள்ளது.
இந்த பதிவை நாட்டு மருந்து சித்த மருத்துவம் என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் Solar என்ற ஃபேஸ்புக் ஐடியைக் கொண்ட நபர் 2019 நவம்பர் 1ம் தேதி வெளியிட்டுள்ளார்.
உண்மை அறிவோம்:
சமூக ஊடகங்களில் அதிசய, ஆச்சர்யமான தகவலைப் பகிர்வதாகக் கூறி பல வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. அதில் ஒன்று 400 ஆண்டுகளுக்கு ஒரு முறை மலரும் அதிசய பூ. மகாமேரு, ஆர்யா என்று அழைக்கப்படும் மலர் 400 ஆண்டுகளுக்கு ஒரு முறை மலரக்கூடியது என்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வந்தது. அது தவறான தகவல் என்று நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் பிரிவில் கட்டுரை வெளியிட்டிருந்தோம்.
தற்போது 400 ஆண்டுகளுக்கு ஒரு முறை மலரக் கூடிய பகோடா மலர் என்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம். மிக அரிதான மலர்கள் என்ன எல்லாம் உள்ளது என்று ஆய்வு மேற்கொண்டோம். அதில், குறிஞ்சி 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மலரக்கூடியது, அதேபோல், Melocanna baciffera என்ற மலர் 44 முதல் 48 ஆண்டுகளுக்கு ஒரு முறை மலரக் கூடியது என்று தெரியவந்தது.
சில தாவரங்கள் தங்கள் வாழ்நாளில் ஒரே ஒரு முறை மட்டுமே பூக்கும் என்றும், அதற்கு சில நூறு வருடங்கள் கூட எடுத்துக்கொள்ளும் என்றும் குறிப்பிட்டிருந்தனர். ஆனால், 400 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே பூக்கும் மலர் என்று எந்த ஒரு மலரையும் அதில் குறிப்பிடவில்லை. இதன் மூலம் 400 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டும் பூக்கும் தாவரம் என்று எதுவும் இல்லை என்பது உறுதியானது.
owlcation.com | Archived Link 1 |
listverse.com | Archived Link 2 |
படத்தில் உள்ள தாவரத்தின் பெயர் என்ன, அது எத்தனை ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் என்று ஆய்வு செய்தோம். படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடியபோது அந்த மலர் பற்றிய தகவல் கிடைத்தது. அமலபரணிஎன்று இதை அழைக்கின்றனர். வடகிழக்கு ஆப்கானிஸ்தான் தொடங்கி மியான்மார் வரையிலான இமயமலைப் பகுதியில் வளரக்கூடிய இதன் தாவரவியல் பெயர் Rheum nobile ஆகும். இதன் பூக்கும் காலம் பற்றித் தேடினோம். அப்போது ஒவ்வொரு ஆண்டும் ஜூன், ஜூலை மாதம் பூக்கக்கூடியது என்று குறிப்பிட்டிருந்தனர்.

flowersofindia.net | Archived Link |
நம்முடைய ஆய்வில்,
400 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் மலர் எதுவும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
படத்தில் இருப்பது Rheum nobile என்று அழைக்கப்படும் தாவரம் ஆகும். இது ஒவ்வொரு ஆண்டும் ஜூன், ஜூலை மாதம் பூக்கிறது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆதாரங்கள் அடிப்படையில், 400 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் பகோடா மலர் பூத்துள்ளது என்று சமூக ஊடகங்களில் பகிரப்படும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:400 ஆண்டுகளுக்கு ஒரு முறை மலரும் பகோடா மலர்: உண்மை என்ன?
Fact Check By: Chendur PandianResult: False
