
டெல்லியில் 40 லட்சம் மக்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணியை காங்கிரஸ் கட்சி நடத்தியதாகவும் ஆனால் அதை ஊடகங்கள் செய்தியாக வெளியிடாமல் மறைத்துவிட்டதாகவும் ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

Facebook Link 1 | Archived Link 1 | Facebook Link 2 | Archived Link 2 |
ராகுல், பிரியங்கா படங்களுடன் மக்கள் கடல் போல இருக்கும் படம் ஒன்று பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “நாற்பது லட்சம் மக்கள் திரண்ட காங்கிரஸின் பேரணி பற்றி எந்த மீடியாவும் வாய் திறக்கவில்லையே… மோடி அரசு போடும் கரித்துண்டுக்காக வாலாட்டும் மீடியாக்களை வன்மையாகக் கண்டிக்கிறோம்” என்று குறிப்பிட்டுள்ளனர்.
மற்றொரு பதிவில், “தலைவி சோனியா காந்தி தலைமையில் நடந்த போராட்டத்தின் ராம்லீலா மைதானத்தின் ஒரு பகுதி” என்று குறிப்பிட்டுள்ளனர். பலரும் இந்த பதிவுகளை ஷேர் செய்து வருகின்றனர்.
முதல் பதிவை, Kadal Tamilvanan என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவரும், இரண்டாவது பதிவை, Indian youth Congress {TN} என்ற பக்கத்தில் Nanjil MØhan என்பவரும் 2019 டிசம்பர் 14ம் தேதி பகிர்ந்துள்ளனர்.
உண்மை அறிவோம்:
டிசம்பர் 14ம் தேதி இந்தியாவைக் காப்போம் என்ற தலைப்பில் டெல்லியில் காங்கிரஸ் கட்சி மிக பிரம்மாண்ட பேரணியை நடத்தியது. மைதானம் நிரம்பி வழியும் அளவுக்கு மிக பிரம்மாண்டமான முறையில் அந்த பேரணி நடந்தது. இது தொடர்பாக தமிழ், ஆங்கில ஊடகங்களில் செய்தி வெளியானது. தமிழ் ஊடகங்களில் பிரம்மாண்ட பேரணி நடக்கப் போகிறது என்றும் நடந்தது என்றும் செய்தி வெளியிட்டிருந்தனர். ஆனால், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவுகளில் ஊடகங்கள் அந்த செய்தியை மறைத்துவிட்டது போல குற்றம்சாட்டியிருந்தனர்.
livemint.com | Archived Link 1 |
firstpost.com | Archived Link 2 |
maalaimalar.com | Archived Link 3 |
thanthitv.com | Archived Link 4 |
minnambalam.com | Archived Link 5 |
மேலும், படமும் பழைய படம் போல இருந்தது. உண்மையில் இந்த புகைப்படம் டெல்லி ராம்லீலா மைதானத்தில் எடுக்கப்பட்டதுதானா என்று ஆய்வு செய்தோம். படத்தை ரிவாஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடியபோது, இதே படத்தை 2019ம் ஆண்டு மார்ச் மாதம் 26ம் தேதி காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த ஒருவர் தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்திருந்தது தெரிந்தது.

Facebook Link | Archived Link |
இதே படத்தை மார்ச் 23ம் தேதி ஒருவர் பதிவேற்றம் செய்திருந்தார். அதே நாளில் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளராக இருந்து சிவசேனாவில் இணைந்த பிரியங்கா சதுர்வேதியும் பதிவேற்றம் செய்திருந்தார். அதில், மால்டா என்று குறிப்பிட்டிருந்தார். பிரியங்காவின் பதிவுக்கு பதில் ட்வீட் செய்த ஒருவர் அது போட்டோஷாப் இமேஜ் என்று ஆதாரத்தோடு கூறியிருந்தார். கூகுளில் தேடியபோது மால்டா என்பது மேற்கு வங்கத்தில் உள்ள நகரம் என்பது தெரிந்தது.
Archived Link |
நம்முடைய ஆய்வில்,
டெல்லியில் நடந்த பேரணி பற்றிய செய்தியை தமிழக ஊடகங்கள் வெளியிட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.
பதிவில் உள்ள படம் பழைய படம் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆதாரங்கள் அடிப்படையில், காங்கிரஸ் கட்சியின் பிரம்மாண்ட பேரணியை தமிழக ஊடகங்கள் இருட்டடிப்பு செய்தன என்ற தகவல் தவறானது என்றும், பதிவில் உள்ள படம், டிசம்பர் மாதம் டெல்லியில் காங்கிரஸ் பேரணியில் எடுக்கப்பட்டது இல்லை என்றும் உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:டெல்லியில் 40 லட்சம் மக்கள் திரண்ட பேரணியை நடத்திய காங்கிரஸ்- ஊடகங்கள் மறைத்ததா?
Fact Check By: Chendur PandianResult: False
