
‘’சீமானுக்கு ராகவா லாரன்ஸ் பகிரங்க சவால்,’’ என்ற தலைப்பில், பாலிமர் நியூஸ் தொலைக்காட்சி வெளியிட்டுள்ள வீடியோவை பலரும் வைரலாக ஷேர் செய்து வருகின்றனர். எனவே, இதன் உண்மைத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:
…ராகவா லாரன்ஸ் சீமானுக்கு பகிரங்க சவால் #RaghavaLawrence #Seeman …
ஏப்ரல் 15ம் தேதி இந்த வீடியோ செய்தியை, பாலிமர் நியூஸ் வெளியிட்டுள்ளது. இதில், சீமான் நடிகர் ராகவா லாரன்ஸ் பற்றி விமர்சித்துப் பேசுகிறார். அதற்கு, ராகவா லாரன்ஸ் பதில் அளித்துள்ளதாகக் கூறி, ஒரு ஃபேஸ்புக் பதிவை உதாரணம் காட்டுகிறார்கள். பின்னர், இதுபற்றி சீமான் வருத்தம் தெரிவிக்கும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.
உண்மை அறிவோம்:
கடந்த 2017ம் ஆண்டில் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி, சென்னை மெரினா கடற்கரையில், மாணவர்கள் போராட்டத்தில் இறங்கினர். இதன்போது, மாணவர்களுக்கு ஆதரவாக, நடிகர் ராகவா லாரன்ஸ் கலந்துகொண்டார். மாணவர்களுக்குத் தேவையான உணவு மற்றும் நிதி உதவிகளையும் அவர் ஏற்பாடு செய்து தந்தார். இதற்காக, அவர் ஏராளமான பணம் செலவு செய்ததாகவும் கூறப்பட்டது. அதேசமயம், அவரது செயலுக்கு, தமிழக மக்களிடையே பரவலான பாராட்டும் கிடைத்துள்ளது.

இதன்பேரில், பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ‘’ரூ.1 கோடி பணம் கொடுத்து, மாணவர் போராட்டத்தில் பங்கேற்ற ராகவா லாரன்ஸ், நீ என்ன மாணவனா? பணம் கொடுத்து தொழில் தொடங்கலாம். பணம் கொடுத்து, புரட்சியில் இடம் பிடிக்கலாமா, அதெப்படி நியாயம், நீ உன் நடிக்கற வேலையை மட்டும் ஒழுங்காகப் பார்,’’ என்றெல்லாம் விமர்சித்துள்ளார். அதைத்தான், பாலிமர் செய்தியும் மேற்கோள் காட்டியுள்ளது.
சீமான் பேசியதை தொடர்ந்து, அவரது ஆதரவாளர்கள் சிலர் சமூக ஊடகங்களிலும், நேரிலும் ராகவா லாரன்ஸ் மற்றும் அவரை சார்ந்தவர்களை தகாத முறையில் பேசுவதும், சீண்டுவதையும் வாடிக்கையாகக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால்தான், ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த ராகவா லாரன்ஸ் ஃபேஸ்புக்கில் காட்டமான அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்.
அதில், ‘’இது தேர்தல் நேரம் என்பதால் உங்களின் பெயரை வெளிப்படையாகக் குறிப்பிடாமல், எனது சொந்த அண்ணன் போல நினைத்து இந்த பதிவை வெளியிட்டுள்ளேன். உங்களின் பேச்சை கேட்டு, உங்களது தொண்டர்கள், என்னையும், எனது ஆதரவாளர்களையும் வம்பிழுப்பது தவறான செயல். அதை நிறுத்திக் கொள்ளுங்கள். இல்லை எனில், நானும் உங்களுக்குப் போட்டியாக, அரசியலில் இறங்க நேரிடும். அது தவிர, உங்களைப் போல அதிகம் எனக்குப் பேசத் தெரியாது, நான் செயல் வீரன். அதிகம் செய்பவர்களையே மக்களுக்கு பிடிக்கும்,’’ என்றெல்லாம் ராகவா லாரன்ஸ் குறிப்பிட்டுள்ளார்.
அவரது அறிக்கையின் ஆதாரம் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
இதைக் குறிப்பிட்டு பாலிமர் உள்பட பல்வேறு தமிழ் ஊடகங்களும் செய்தி வெளியிட்டுள்ளன.

அத்துடன், லாரன்ஸின் அறிக்கை பற்றியும், சீமான் பேசியது பற்றியும், சீமானிடமே நேரடியாக விளக்கம் கேட்டு, அதனையும் இந்த செய்தியில் ஆதாரமாக, பாலிமர் நியூஸ் காட்டியுள்ளது. மேற்கண்ட வீடியோவிலேயே இந்த பேட்டியும் இடம்பெற்றுள்ளது. தனது பேச்சில் உள்ள தவறை ஒப்புக் கொண்ட சீமான், தனது கட்சியினர் யாரேனும் தவறு செய்திருந்தால் அதனை கண்டிப்பேன் என்றும் தெரிவித்துள்ளார். பாலிமர் செய்தியிலேயே இந்த விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டதாக தெரிகிறது.
எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட ஃபேஸ்புக் பதிவு உண்மையான செய்திதான் என உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின்படி, மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு உண்மைதான் என நிரூபிக்கப்பட்டுள்ளது. சமூக ஊடகங்களில், ராகவா லாரன்ஸ் மற்றும் சீமான் ஆதரவாளர்கள் அதிகம் உள்ளதால், இச்செய்தி அதிகளவில் ஷேர் செய்யப்பட்டு வருகிறது எனவும் தெளிவாகிறது.

Title:ராகவா லாரன்ஸ் சீமானுக்கு பகிரங்க சவால்: பாலிமர் செய்தி உண்மையா?
Fact Check By: Parthiban SResult: True
