
“ராகுல்காந்தி சாத்தியமான அனைத்தையும் செய்துவிட்டார். மக்கள் பொய்யுணர்வுக்கும், மத துவேஷத்துக்கும் வீழ்ந்தால் அது அவருடைய தோல்வியில்லை, நாட்டின் தோல்வி” என்று இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் ட்வீட் செய்துள்ளதாக ஒரு தகவல் ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
ரகுராம் ராஜன் ட்வீட்ஸ். ராகுல் காந்தி இந்தத் தேர்தலில் சாத்தியமான எல்லாவற்றையும் செய்து முடித்துவிட்டார், மேலும் அவர் செய்த அனைத்தையும் சரியாகச் செய்தார், மக்கள் பொய்யுணர்வுக்காகவும், மத துவேஷத்திற்க்காகவும் வீழ்ந்தால், அது அவருடைய தோல்வி அல்ல!
அது நாட்டின் தோல்வி எனக்கொள்ளவேண்டும்.
ரகுராம் ராஜன் புகைப்படத்தை வெளியிட்டு, அவருடைய ட்வீட் என்று ஒரு தகவல் பகிரப்பட்டுள்ளது. அதில், “இந்த தேர்தலில் சாத்தியமான அனைத்தையும் ராகுல்காந்தி செய்துவிட்டார். அவர் அனைத்தையும் சரியாக செய்தார். மக்கள் பொய்யுணர்வுக்காவும், மன துவேஷத்திற்காகவும் வீழ்ந்தால் அது அவருடைய தோல்வி இல்லை. நாட்டின் தோல்வி என கொள்ள வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது. இதை, நீதியின் பக்கம் என்ற ஃபேஸ்புக் பக்கம் 2019 மே 25ம் தேதி வெளியிட்டுள்ளது. நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தோல்வியடைந்துள்ள நிலையில் இந்த பதிவு அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.
உண்மை அறிவோம்:
இந்திய ரிசர்வ் வங்கி ஆணையராக இருந்த ரகுராம் ராஜன் இந்திய அரசியல் பற்றியும் ஆட்சியாளர்கள் பற்றியும் அவ்வப்போது கருத்து தெரிவித்ததாக வதந்திகள் பரவுகின்றன. அந்த வகையில், இந்த தேர்தல் முடிவு தொடர்பாக ரகுராம் ராஜன் வெளியிட்டதாக பகிரப்படும் ட்வீட் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.
ரகுராம் ராஜனுக்கு ட்விட்டர் கணக்கு இல்லை. கடந்த ஆண்டில் ஏன் ட்விட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்களை பயன்படுத்துவது இல்லை என்று ரகுராம் ராஜன் பேட்டி அளித்தது நினைவில் இருந்தது. இருப்பினும், ஏதாவது ட்வீட்டர் கணக்கு தொடங்கி பதிவிட்டுள்ளாரா என்று ஆய்வு மேற்கொண்டோம். முதலில் ரகுராம் ராஜன் ட்விட்டர் தொடர்பாக செய்தி ஏதேனும் வெளியாகி உள்ளதா என்று கூகுளில் தேடினோம். ஆனால், அப்படி எந்த ஒரு செய்தியும் நமக்கு கிடைக்கவில்லை.

மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தொடர்பாக வேறு ஏதேனும் பதிவு வெளியாகி உள்ளதா என்று ஃபேஸ்புக் பக்கத்தில் தேடினோம். அப்போது, ரகுராம் ராஜன் ட்விட்டர் பக்கத்தில் வெளியானது போன்று ஒரு பதிவு நமக்கு கிடைத்தது.

Raghuram Rajan Fan@ArunSFan என்ற ட்விட்டர் ஐ.டி-யில் இருந்து ட்வீட் வெளியானதாக படம் கிடைத்து. இதனால், அந்த ட்விட்டர் ஐ.டி-யின் பின்னணியை ஆய்வு செய்தோம். அது வெரிஃபைடு பக்கமாக இல்லை. 2014ம் ஆண்டு தொடங்கப்பட்டுள்ளது.சுய குறிப்பில், ரகுராம் இஃபின் ராஜன் என்று இருந்தது. உண்மையில் அவரது பெயர் ரகுராம் கோவிந்தராஜன். இதன் சுருக்கமாக, ரகுராம் ஜி.ராஜன் என்று குறிப்பிடுவார். மேலும், RajanFan PARODY என்று இருந்தது. இதன்மூலம் அது அவருடைய பக்கம் இல்லை என்பது உறுதியானது.

அதேநேரத்தில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் கூறப்பட்டது போன்று ட்வீட் வெளியானதும் உறுதியானது.
தொடர்ந்து, ரகுராம் ராஜனின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு தொடர்பாக கூகுளில் தேடினோம். அப்போது, அவருக்கு ட்விட்டர் கணக்கு ஏதும் இல்லை என்பது உறுதியானது. கடந்த ஆண்டு கொச்சியில் நடந்த மாநாடு ஒன்றில், சமூக ஊடகங்களை ஏன் பயன்படுத்துவது இல்லை என்று ரகுராம் ராஜனிடம் கேள்வி எழுப்பியுள்ளனர். அதற்கு அவர் “எனக்கு நேரம் இல்லை. மிக விரைவாக சிந்தித்து, 140 எழுத்துக்களில் கருத்துக்களை பகிரும் ஆற்றல் எனக்கு இல்லை” என்று பதில் அளித்துள்ளார். அந்த செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.
நாம் மேற்கொண்ட ஆய்வில்,
மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் கூறப்பட்டுள்ளது போன்று எந்த ஒரு செய்தியும் எந்த ஒரு செய்தி ஊடகங்களிலும் வெளியாகவில்லை.
மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் கூறப்பட்டுள்ள ட்விட்டர் ஐ.டி உண்மையில் ரகுராம் ராஜனின் ட்விட்டர் கணக்கு இல்லை.
ட்விட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்களை பயன்படுத்துவது இல்லை என்று ரகுராம் ராஜன் கூறியுள்ளார்.
இந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:“நாட்டின் தோல்வி” என்று ராகுல்காந்திக்கு ஆதரவாக ட்வீட் செய்த ரகுராம் ராஜன்?
Fact Check By: Praveen KumarResult: False

Thank you I am sorry