சீமான் கையில் ஆமை- புகைப்படம் உண்மையா?

அரசியல் | Politics சமூக ஊடகம் | Social

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆமை ஒன்றை கையில் வைத்திருப்பது போன்ற படம் சமூக ஊடகங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

SEEMAN 2.png
Facebook LinkArchived Link

காரில், ஆமையை கையில் ஏந்தியபடி சீமான் அமர்ந்திருக்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “அனைவருக்கும் அமாவாசையின் ஞாயிற்றுக்கிழமை நல்வாழ்த்துக்கள். எங்கள் வீட்டில் ஆமை கறி உங்க வீட்டில்” என்று குறிப்பிட்டுள்ளனர்.

இந்த பதிவை, அமாவாச – Naga Raja Chozhan MA என்பவர் 2019 நவம்பர் 17ம் தேதி வெளியிட்டுள்ளார். இந்த படத்தை பலரும் தங்கள் பக்கங்களில் ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

சீமானையும் ஆமைக் கறியையும் தொடர்புபடுத்தி சமூக ஊடகங்களில் தொடர்ந்து பல மோசமான பதிவுகள் பகிரப்படுகின்றன. ஏன், எதற்கு, அது சரியா தவறா என்ற ஆய்வுக்குள் நாம் செல்லவில்லை.

சீமான் கையில் ஆமை இருப்பது போன்ற படம் பலராலும் பகிரப்படுகிறது. அது உண்மையா என்ற ஆய்வு மேற்கொண்டோம். படத்தைப் பார்க்கும்போது அது அசல் படம் போலத் தெரியவில்லை. ஆமையை மட்டும் வைத்து மார்பிங் செய்யப்பட்டது போல இருந்தது.

படத்தை fotoforensics என்ற புகைப்படத்தை ஆய்வு செய்யும் தளத்தில் பதிவேற்றம் செய்து ஆய்வு செய்தோம். அப்போது, ஆமை உள்ள பகுதி மட்டும் புகைப்படத்தோடு தொடர்பில் இல்லாமல் தனியாக இருப்பது உறுதியானது.

SEEMAN 4.png

இந்த படத்தின் அசல் படம் கிடைக்கிறதா என்று கண்டறிய கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றம் செய்து தேடினோம். அப்போது, ஆமை கையில் இருக்கும் படத்தை பலரும் தங்கள் முகநூல் உள்ளிட்ட சமூக ஊடக பக்கங்களில் ஷேர் செய்து வருவதை காண முடிந்தது. அவற்றின் நடுவே, நாம் தமிழர் கட்சி ஆதரவு முகநூல் பக்கம் ஒன்று நமக்கு கிடைத்தது. அதில், சீமான் இருக்கும் படமும் இருந்தது. அந்த லிங்கை திறந்து பார்த்தோம்.

Archived LinkSearch Link

அதில், சீமான் கையில் நுங்கு வைத்து சாப்பிடுவது போல இருந்தது. இந்த படத்தை fotoforensics இணையதளத்தில் பதிவேற்றம் செய்து பார்த்தோம். அப்போது படம் தெளிவாக அனைத்து லைன்களும் சரியான விதத்தில் இருப்பதை காண முடிந்தது. இதன் மூலம் இந்த அசல் படத்தை எடிட் செய்து ஆமை படத்தை வைத்து பதிவிட்டு வருவது உறுதியானது.

SEEMAN 3.png

நம்முடைய ஆய்வில்,

ஃபேஸ்புக்கில் பகிரப்படும் படம் fotoforensics ஆய்வில் எடிட் செய்யப்பட்டது என்பதை நிரூபித்துள்ளது.

நாம் தமிழர் கட்சி சார்பில் ஃபேஸ்புக் பக்கத்தில் அசல் படம் கிடைத்துள்ளது.

இந்த அசல் படத்தை fotoforensics இணையதளத்தில் பதிவேற்றம் செய்து ஆய்வு செய்ததில் அது அசல் படம் என்று தெரியவந்துள்ளது.

இந்த ஆதாரங்கள் அடிப்படையில், சீமான் கையில் ஆமை இருப்பது போல பகிரப்படும் படம் போலியானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:சீமான் கையில் ஆமை- புகைப்படம் உண்மையா?

Fact Check By: Chendur Pandian 

Result: False