
ஆவி பிடித்தால் கொரோனா கிருமி அழிந்துவிடும் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

Facebook Link | Archived Link 1 | Archived Link 2 |
கொரோனாவுக்கு ஆவிபிடித்தல் நல்ல தீர்வு என்று ஒரு வீடியோ பகிரப்பட்டுள்ளது. 4.14 நிமிடம் ஓடக்கூடிய இந்த வீடியோவில் ஆவி பிடித்தால் கொரோனா வைரஸ் கிருமி அழிந்துவிடும் என்று கூறி எப்படி ஆவி பிடிக்க வேண்டும் என்றும் விரிவாக பேசியுள்ளனர்.
இந்த வீடியோவை Next Gen TV என்ற ஃபேஸ்புக் பக்கம் ஏப்ரல் 2, 2020 அன்று வெளியிட்டுள்ளது. நிலைத் தகவலில், “Steam Inhalation best cure for COVID 19. ஆவி பிடித்தாலே போதும் குணமாகிவிடும் ஆய்வில் கண்டுபிடிப்பு குஷியில் மக்கள் | Steam Inhalation” என்று குறிப்பிட்டுள்ளனர். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்க உலகம் முழுக்க விஞ்ஞானிகள் திணறிக்கொண்டிருக்கும்போது சமூக ஊடகங்களில் சர்வ சாதாரணமாக மருந்துகள் பரிந்துரைக்கப்படுகின்றன. பூண்டு கஷாயம் சாப்பிட்டால் கொரோனா அழிந்துவிடும், வினிகரை வாயில் ஊற்றி கொப்பளித்தால் கொரோனா அழிந்துவிடும், வெயிலில் நின்றால் கொரோனா அழிந்துவிடும் என்று ஆளாளுக்கு வைத்திய குறிப்புகளை பரப்பி வருகின்றனர். அந்த வகையில் நீராவி பிடித்தால் கொரோனா கிருமி அழிந்துவிடும் என்று வீடியோவில் குறிப்பிட்டுள்ளனர். ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஆனால், எந்த ஆய்வு என்றுதான் குறிப்பிடவே இல்லை.
நீராவி பிடித்தால் கொரோனா கிருமி அழியும் என்று ஏதேனும் ஆய்வு முடிவு தெரிவிக்கிறதா என்று கூகுளில் தேடிப் பார்த்தோம். ராய்ட்டர்ஸ், ஏ.எஃப்.பி உள்ளிட்ட செய்தி நிறுவனங்கள் வெளியிட்ட உண்மை கண்டறியும் ஆய்வுகளே நமக்கு கிடைத்தன. நீராவி பிடித்தால் கொரோனா கிருமி அழியும் என்பது தொடர்பான எந்த ஒரு ஆய்வு முடிவும் நமக்கு கிடைக்கவில்லை.
ஏ.எஃப்.பி வெளியிட்டிருந்த செய்தியில் மருத்துவரின் பேட்டியை கொடுத்திருந்தனர்.
கொரோனா வைரஸ் தொடர்பாக ஆராய்ச்சி செய்து வரும் டாக்டர் பெஞ்சமின் கூறுகையில், “நுரையீரல் மிகவும் மென்மையானது. நீராவி மிகவும் வெப்பமானது. இரண்டும் ஒன்று சேர்வது சரியானது இல்லை. அதிக வெப்பமான நீராவில் நுரையீரல் செல்களில் பாதிப்பை எற்படுத்தலாம். கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்றால் பிரச்னை இல்லை. ஒரு வேளை கொரோனா வைரஸ் தொற்று இருந்து, நுரையீரல் செல்களும் சேதமடைந்தால் அதனால் வரக்கூடிய பாதிப்பு மிகவும் அதிகம்” என்றார் என குறிப்பிட்டிருந்தனர்.

nypost.com | Archived Link |
உலக சுகாதார நிறுவனம் நீராவி பிடித்தால் கொரோனா கிருமி அழியும் என்று செய்தி ஏதும் வெளியிட்டுள்ளதா என்று பார்த்தோம். அதிலும் அப்படி எதுவும் வெளியாகவில்லை.
ஆவி பிடிப்பது புத்துணர்வை அளிக்கும், ரத்த ஓட்டத்தை சீராக்கும், வியர்வையில் உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறும், சருமம் பொலிவுறும் என்று இயற்கை மருத்துவம் கூறுகிறது. ஆனால், கிருமிகள் அழியும் என்று கூறவில்லை. சளி, மூக்கடைப்பு உள்ள நேரத்தில் ஆவி பிடிக்கும்போது அது சளியை மெல்லியதாக மாற்றி வெளியேற்ற உதவலாம். அது தற்காலிக நிவாரணம் மட்டுமே என்று மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன. ஆனால், கொரோனாவை அழிக்கும் என்று எந்த தகவலும் நமக்கு கிடைக்கவில்லை.

asianetnews.com | Archived Link 1 |
webmd.com | Archived Link 2 |
இது தொடர்பாக பொது நல மருத்துவர் கணேசனிடம் கேட்டபோது, “இது வெறும் வதந்திதான். நீராவி பிடித்தால் கொரோனா கிருமி எல்லாம் அழியாது” என்றார்.
மூலிகை ஆராய்ச்சியாளர் பெல்சினிடம் கேட்டபோது, “சாதாரண சோப் போட்டாலே கையில் கொரோனா கிருமி இருந்தால் அழிந்துவிடும் என்கிறார்கள். மஞ்சள், வேப்பிலை, நொச்சி இலை, இஞ்சி என மூலிகைகள் போட்டு ஆவி பிடித்தால் நுரையீல் தொற்று குறைய வாய்ப்புள்ளது. கொரோனா கிருமி அழிந்துவிடும் என்று எந்த ஆய்வும் இல்லை. இதை கூடுதலாக செய்வதால் ஓரளவுக்கு பலன் கிடைக்கலாம். கூடுதலாக மஞ்சளை சுட்டு அந்த புகையையும் நுகரலாம். இதனால் பலன் கிடைத்ததாக சுவாச பிரச்னை உள்ளவர்கள் கூறுகின்றனர்.
எனவே, மூலிகைகள் சேர்த்து நீராவி பிடிப்பதை கூடுதலாக நுரையீரல் தொற்றை நீக்க பயன்படுத்தலாமே தவிர, அது மட்டுமே முற்றிலுமாக சரி செய்யும் என்று கூற முடியாது. நீராவி பிடிப்பதால் கொரோனா அழிந்துவிடும் என்பதற்கும் ஆதாரம் இல்லை” என்றார்.
நம்முடைய ஆய்வில்,
கொரோனா கிருமி நீராவி பிடிப்பதால் அழியும் என்று எந்த ஆய்வும் வெளியாகவில்லை.
நீராவி பிடித்தால் கொரோனா கிருமி அழியும் என்று உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைக்கவில்லை.
நீராவி பிடிப்பது சளி பிரச்னை போக்க உதவலாம் என்று செய்திகள் வெளியாகி உள்ளன. ஆனால் கொரோனா அழியும் என்று யாரும் பரிந்துரைக்கவில்லை.
இதன் அடிப்படையில், மூலிகை நீராவி பிடித்தால் கொரோனா கிருமி அழியும் என்று பகிரப்படும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.
