
ஜப்பான் ரயில் நிலையம் ஒன்றில், தமிழ் மொழியில் அறிவிப்பு செய்யப்படுவதாக, ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
தமிழ் நம் அடையாளம் ??
#அதிகம்_பகிரவும்
வழிகாட்டி அறிவிப்பு பலகை ஒன்றில், ஜப்பான் மற்றும் தமிழ் மொழியில் அறிவிப்பு வைத்திருப்பது போல உள்ளது. தமிழில் உள்ள அறிவிப்பில் ‘படிக்கட்டில் வலது பக்கமாக செல்லவும்’ என்று உள்ளது. Shin-Okubo என்று ஆங்கிலத்திலும் உள்ளது.
இந்த படத்தில், “ஜப்பான் ரயில் நிலையத்தில் தமிழ் மொழியில் அறிவிப்பு… ஜப்பான்காரனுக்கு தெரியுது இந்தியாவின் மொழி எதுவென்று… பிடிச்சா ஷேர் பண்ணுங்க மக்கா…” என்று கூறப்பட்டுள்ளது.
இந்த புகைப்படத்தை ‘தமிழ் நம் அடையாளம், அதிகம் பகிரவும்’ என்று நிலைத்தகவலுடன் குமரி நாடன் என்ற குழு 2019 ஏப்ரல் 26ம் தேதி பகிர்ந்துள்ளது. தமிழின் பெருமையைப் பேசும் பதிவு என்பதால் ஆயிரக் கணக்கானோர் இந்த பதிவைப் பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
தமிழகம், புதுச்சேரி மாநிலத்தின் ஆட்சி மொழியாகத் தமிழ் உள்ளது. இதுதவிர, இலங்கை, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் ஆட்சி மொழியாகவும் மலேசியா உள்ளிட்ட நாடுகளில் முக்கிய மொழியாகவும் உள்ளது. உலகெங்கும் பல நாடுகளில் தமிழர்கள் அதிக அளவில் வசிக்கின்றனர். அவர்களின் வசதிக்காக, உள்ளூர் போக்குவரத்து உள்ளிட்டவற்றில் தமிழில் அறிவிப்பு செய்யப்படுவது வழக்கமாக உள்ளது.
அந்த வகையில், ஜப்பான் நாட்டில் ஷின் ஒகுபோ நகரில் உள்ள ரயில் நிலையத்தில் தமிழில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது என்று இந்த பதிவில் கூறப்பட்டுள்ளது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்ய, படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம்.


நம்முடைய தேடலில், தமிழ் சினிமா இசை அமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ் இதுபோன்ற ஒரு பதிவை ஷேர் செய்திருந்ததாக சமயம் இணையத்தில் வெளியான செய்தி ஒன்று கிடைத்தது. அந்த செய்தியில் ஜி.வி.பிரகாஷ் வெளியிட்ட ட்விட் தகவலும் கிடைத்தது. அதைப் பார்க்க இங்கே கிளிக் செய்யுங்கள்.
அதில், ஜி.வி.பிரகாஷ் “உலகம் போற்றும் எம் தாய் தமிழ், நன்றி ஜப்பான்” என்று குறிப்பிட்டிருந்தார். அது அவர் பதிவு இல்லை. தமிழ் அமிழ்து என்ற குழு வெளியிட்ட படத்தை ஜி.வி.பிரகாஷ் ரீட்வீட் செய்திருந்தது தெரிந்தது.
படத்தின் உண்மைதன்மையை கண்டறிய படத்தை yandex.com-ல் பதிவேற்றி மீண்டும் ஒரு தேடலை மேற்கொண்டோம். அப்போது, ஒலிம்பிஸ் போட்டிக்காக இப்படி அறிவிப்பு வைக்கப்பட்டுள்ளது என்று பல ட்வீட்களும், இந்த தகவல் உண்மைதானா என்று இணையம் ஒன்று உண்மை கண்டறியும் சோதனை நடத்திய விஷயமும் கிடைத்தது.

சுபாஷினி என்பவர் 2018 ஏப்ரல் 23ம் தேதி ஒரு ட்வீட்டை வெளியிட்டிருந்தார். அதில், ஜப்பானில் 2020ம் ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியை காண வர உள்ள தமிழர்களை ஊக்குவிக்கும் வகையில் தமிழில் அறிவிப்பு வெளியிட ஆரம்பித்துள்ள ஜப்பான் என்று பொருள்படும் வகையில் ட்வீட் செய்திருந்தார்.
ஒலிம்பிக் போட்டிக்காக அறிவிப்பு பலகை தமிழில் வைக்கப்பட்டுள்ளதா, என்று யூடர்ன் என்ற இணையதளம் கண்டறியும் சோதனை நடத்தியிருந்தது. அந்த செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள். அதில், ஜப்பானில் வெளியாகும் செய்தி ஒன்றை ஆதாரமாக அளித்திருந்தனர். அந்த லிங்கை ஓப்பன் செய்து பார்த்தோம்.
ஜப்பானின் தலைநகரான டோக்கியோவில் உள்ள குறிப்பிட்ட அந்த ஒரு ரயில் நிலையத்தில் மட்டும் 20க்கும் மேற்பட்ட வெளிநாட்டு மொழிகளில் அறிவிப்பு வெளியிடப்படுவது தெரிந்தது.
அந்த ரயில் நிலையத்துக்குப் பல வெளிநாட்டினர் தினமும் வந்து செல்கின்றனர். பல மாணவர்கள் அந்த ரயில் நிலையத்தை பயன்படுத்துகின்றனர். இவர்கள் மொழி தெரியாமல் அவதியுறும் நிலையைக் கண்டு, அந்த ரயில் நிலையத்தின் மேலாளராக பணியாற்றி ஓய்வு பெற்ற ஒருவர் பல மொழிகளில் அறிவிப்பு வெளியிடும் யோசனையை அளித்திருக்கிறார். அதைத் தொடர்ந்து 20க்கும் மேற்பட்ட மொழிகளில் அறிவிப்பு வெளியிடப்பட்டு வருகிறது என்று கூறப்பட்டு இருந்தது. ஆனால், தமிழில் வைக்கப்பட்டுள்ளது என்று அதில் குறிப்பிடவில்லை. அந்த செய்தியைப் பார்க்க இங்கே கிளிக் செய்யுங்கள்.
இதனால், படத்தின் நம்பகத் தன்மையை ஆய்வு செய்தோம். படத்தில், தமிழில் உள்ள பகுதி மட்டும் மார்ஃபிங் செய்யப்பட்டுள்ளதா என்று கண்டறிய படத்தை ஆய்வுக்கு உட்படுத்தினோம். ஆனால், எந்த திருத்தமும் செய்யப்பட்ட படம் போல அது இல்லை. நிறப் புள்ளிகள் எல்லாம் சீராக, ஒரே மாதிரியாக இருந்தன. குறிப்பாக, தமிழ் உள்ள பகுதியும் ஜப்பானிய மொழி உள்ள பகுதியும் ஒரே மாதிரியாக இருந்தன. எடிட் செய்து தமிழ் வார்த்தைகளை வைத்தது போன்று எந்த ஒரு அறிகுறியும் அதில் இல்லை. இதன் மூலம், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் உள்ள படம் எடிட் செய்யப்பட்டது இல்லை என்று முடிவுக்கு வந்தோம். ஆதார படம் கீழே…

முடிவு:
நமக்குக் கிடைத்த ஆதாரங்கள் அடிப்படையில் ஜப்பானின் டோக்கியோவில் உள்ள ஒரு ரயில்நிலையத்தில் தமிழில் அறிவிப்பு வெளியிடப்பட்டது உண்மைதான். தமிழ் ஆர்வலர்களால் இது அதிகம் பகிரப்பட்டு வருவதாக, உணர முடிகிறது.

Title:ஜப்பான் ரயில் நிலையத்தில் தமிழ் மொழியில் அறிவிப்பு உண்மையா?
Fact Check By: Praveen KumarResult: True
