
தமிழகத்தில் பா.ஜ.க-வை தோல்வியடைய செய்ததால்தான் தமிழகத்தில் வறட்சி ஏற்பட்டுள்ளது என்று தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

தந்தி தொலைக்காட்சியின் நியூஸ் கார்டில் தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாக ஒரு பதிவு பகிரப்பட்டுள்ளது. அதில், “பா.ஜ.க-வை தோல்வியடைய செய்த பாவத்தின் வினைப்பயனைதான் வறட்சியாக தமிழகம் அனுபவிக்கிறது – தமிழிசை சவுந்தரராஜன்” என்று உள்ளது.
இந்த தந்தி டி.வி-யின் நியூஸ் கார்டில் ஜூன் 16, 2019 என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நியூஸ் கார்டை சமுத்திரக்கனி☑ என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் John Britto என்பவர் 2019 ஜூன் 18ம் தேதி வெளியிட்டுள்ளார். இது உண்மை என்று நம்பி பலரும் தமிழிசைக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
செய்தி தொலைக்காட்சிகளின் நியூஸ் கார்டுகளைப் பயன்படுத்தி அதிக அளவில் போலி செய்திகள் பரப்பப்படுகின்றன. தங்கள் தொலைக்காட்சியின் பெயர் எப்படியாவது போய் சேர்ந்தால் போதும் என்ற எண்ணத்தில் தொலைக்காட்சிகளும் இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முயல்வது இல்லை. அந்த வகையில், இந்த கார்டு போட்டோஷாப் செய்யப்பட்டு பகிரப்பட்டது போல இருந்தது.
முதலில் தண்ணீர் பஞ்சம் தொடர்பாக தமிழிசை சவுந்தராஜன் பேட்டி ஏதும் அளித்துள்ளாரா என்று தேடினோம். அப்போது, “தொலைநோக்கு பார்வையில் திமுக, காங்கிரஸ் திட்டமிட்டிருந்தால் குடிநீர் பிரச்னை வந்திருக்காது” என்று தமிழிசை அளித்த பேட்டி நமக்குக் கிடைத்தது. இந்த பேட்டியை தமிழிசை ஜூன் 16ம் தேதி அளித்திருந்தார். எனவே, இந்த செய்தியை மாற்றி வெளியிட்டிருக்கலாம் என்று தெரிந்தது.
இந்த நியூஸ் கார்டின் உண்மைத்தன்மையை கண்டறிய, அதில் தந்தி டி.வி டிசைன், லோகோ எல்லாம் தெளிவாக தெரிகிறதா என்று பார்த்தோம். ஆனால், “பா.ஜ.க-வை தோல்வியடைய செய்த பாவத்தின் வினைப்பயனைதான் வறட்சியாக தமிழகம் அனுபவிக்கிறது” என்ற இடம் மட்டும் தனியாக சேர்க்கப்பட்டது போல இருந்தது. பின்னணி டிசைன் அந்த இடத்தில் இல்லை. ஃபான்டும் வித்தியாசமாக இருந்தது.

ஜூன் 16ம் தேதி தந்தி டி.வி வெளியிட்ட நியூஸ் கார்டுகளை ஆய்வு செய்தோம். அதில், தமிழிசை பேச்சு தொடர்பான ஒரு நியூஸ் கார்டு நமக்கு கிடைத்தது. அதில், “தொலைநோக்கு திட்டத்துடன் காங்கிரஸ் – தி.மு.க செயல்பட்டிருந்தாலே குடிநீர் பஞ்சம் வந்திருக்காது – தமிழிசை சவுந்தரராஜன்” என்று இருந்தது.

இந்த நியூஸ் கார்டை எடுத்து போட்டோஷாப் மார்ஃபிங் செய்து, தவறான தகவலை வைத்து வெளியிட்டுள்ளது உறுதியானது. இதன் மூலம், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:“பா.ஜ.க.,வை தோல்வியடைய செய்ததால்தான் தமிழகத்தில் வறட்சி” – தமிழிசை பற்றி பரவும் வதந்தி
Fact Check By: Praveen KumarResult: False
