
கொரோனா காலத்தில் இஸ்லாமிய பண்டிகைகளுக்கு மட்டும் கட்டுப்பாடுகள் விதித்துவிட்டு, இந்து மத ஊர்வலம் நடந்ததாகக் கூறி ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
காவிக் கொடியோடு செல்லும் ஊர்வலத்தில் வீடியோ ஒன்று பகிரப்பட்டுள்ளது. ஊர்வலத்தில் செல்பவர்கள் உற்சாகமாக நடனமாடிக்கொண்டு செல்கின்றனர். நிலைத் தகவலில் “ரம்ஜான்,பக்ரீத்க்கு மூன்று பேருக்கு மேல கூடி தொழுக கூடாதுனு ஒவ்வொரு பள்ளிவாசல்ளையும் போலீசை போட்டு நோட்டம் பாத்திங்க. ஆனா இங்க இவனுக கூத்து கட்டி அடிகிராணுக இதெல்லாம் உங்க கண்ணுக்கு தெரியாதா mr kedi… Jai corona….” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வீடியோ பதிவை Kathar Hussain என்பவர் 2020 ஆகஸ்ட் 6ம் தேதி பகிர்ந்துள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
கொரோனா காலத்தில் அனைத்து மத வழிபாடுகளுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. குறிப்பிட்ட ஒரு பிரிவினருக்கு மட்டும் சலுகை வழங்கப்படுவது போல பதிவு உள்ளது. மேலும், இந்த ஊர்வலம் எங்கே, எப்போது, எதற்காக நடந்தது என்று எதுவும் இல்லை.
கொரோனா விதிமுறைகள் நாடு முழுவதும் அமலில் இருக்கும் நிலையில் இப்படி ஒரு ஊர்வலம் நடத்தப்பட்டிருந்தால் அது மிகப்பெரிய செய்தியாகி இருக்கும். எனவே, இந்த வீடியோ எப்போது, எங்கே எடுக்கப்பட்டது என்று ஆய்வு செய்தோம்.
வீடியோ காட்சிகளை புகைப்படமாக மாற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அயோத்தி ராமர் கோவில் அடிக்கல்நாட்டு விழா என்று பலரும் இந்த வீடியோவை யூடியூபில் வெளியிட்டிருப்பதை காண முடிந்தது. ராம நவமி என்று இந்த வீடியோவை 2020 ஏப்ரல் 1ம் தேதி யூடியூபில் பதிவேற்றியிருந்தனர்.
தொடர்ந்து தேடியபோது இந்த வீடியோ 2019 நவம்பர் மாதம் பதிவேற்றம் செய்யப்பட்டிருப்பது தெரிந்தது. ராமநவமி என்று குறிப்பிடப்பட்டு இருந்ததே தவிர, எங்கு இந்த வீடியோ எடுக்கப்பட்டது என்ற தகவல் கிடைக்கவில்லை.
வீடியோவில் உள்ள சில காட்சிகளைப் பார்த்தபோது அதில் கன்னடத்தில் ஹோட்டல் ஒன்றின் பெயர் பலகை இருப்பதைக் காண முடிந்தது. ஹோட்டல் பிரிஜ்வால் என்று கர்நாடகாவில் ஏதாவது ஹோட்டல் உள்ளதா என்று தேடியபோது, சித்ரதுர்காவில் அப்படி ஒரு ஹோட்டல் இருப்பது தெரிந்தது.
வீடியோவின் தென்பட்ட காட்சியும், சித்ரதுர்காவில் உள்ள ஹோட்டல் பிரிஜ்வால் காட்சியும் ஒன்றாக இருந்தது. எனவே, இந்த வீடியோ சித்ரதுர்காவில் எடுக்கப்பட்டது என்பது உறுதியானது.
இந்த வீடியோ கிடைக்கிறதா என்று தேடியபோது, சித்ரதுர்காவில் விநாயகர் சதுர்த்தி, ராமநவமி என்று ஏராளமான நிகழ்ச்சிகளில் இதுபோன்று மிக பிரம்மாண்ட ஊர்லங்கள் நடந்திருப்பதைக் காண முடிந்தது.
பலரும் மொபைலில் வீடியோ எடுத்து அதை யூடியூபில் பதிவேற்றம் செய்து வந்திருப்பதையும் காண முடிந்தது. ஒரு வீடியோ கிட்டத்தட்ட நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட வீடியோவில் வரும் டிஜே வாகனம் போல இருந்தது. அதனால் உறுதியாக 2019 விநாயகர் சதுர்த்தியின் போது எடுக்கப்பட்டது என்று உறுதியாக கூற முடியவில்லை. அதே நேரத்தில் 2019 நவம்பரில் இருந்து இந்த வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவதைக் காண முடிந்தது.
வீடியோவில் கொரோனாவைப் பரப்புகிறார்கள் என்று குறிப்பிட்டுள்ளனர். கொரோனா பரவல் சீனாவில் 2019ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் ஏற்பட்டு, 2020 ஜனவரி முதல் வாரத்தில் தான் கண்டறியப்பட்டது. இந்தியாவில் மார்ச் மாதம் 24ம் தேதிதான் முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது. ஆனால், அதற்கு முன்னதாகவே இந்த வீடியோ வெளியாகி உள்ளது உறுதியாகி உள்ளது. இதன் அடிப்படையில் கொரோனா காலத்தில் இந்துக்கள் ஊர்வலம் நடத்தினார்கள் என்று பகிரப்படும் வீடியோ தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
