மஹா ராணா பிரதாப் பயன்படுத்திய போர் வாளா இது? – ஃபேஸ்புக் வதந்தி

இந்தியா | India சமூக ஊடகம் | Social சமூகம்

மஹா ராணா பிரதாப் என்ற மன்னர் பயன்படுத்திய வாள் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Facebook LinkArchived Link

பழங்கால வாள் ஒன்றின் படத்தைப் பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், “நம் பூர்வ மண்ணின் மைந்தர் சக்கரவர்த்தி  மஹாராணா பிரதாப் போர்க்களத்தில் பயன்படுத்திய 50 கிலோ எடைகொண்ட  போர் வாள். நம்மால் வாளை தூக்கக்கூட முடியாது வாளை சுழற்றி சண்டையிடுவது என்பது நினைத்து கூட பார்க்க முடியாது. இவர் யுத்தகளத்தில் நினைத்துப் பார்க்க முடியாத அசாத்தியமான வலிமை வாய்ந்த போர் வீரர். ஆனால் துரதிஷ்டவசமாக இவருடைய வரலாறுகளை கடந்தகால அரசு நமக்கு கொடுக்க தவறிவிட்டது. நமக்கு படிக்க கொடுக்கப்பட்டது எதிரிகளின் சரித்திரங்கள் மட்டும்தான்” என்று கூறப்பட்டுள்ளது.

இந்த பதிவை, Muthu Rajan என்பவர் ‎சித்தர்கள் Siththarkal சித்தர் அறிவியல் MurugarYugam SiddharYugam என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் 2020 மே 27ம் தேதி வெளியிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

ஒன்று பட்ட இந்தியாவாக ஆவதற்கு முன்பு நாடு முழுக்க நூற்றுக் கணக்கில் மன்னர்கள் இருந்தனர். கி.பி.1500களில் அக்பர் ஆட்சிக் காலத்தில் உதய்பூர் ராஜ்யத்தின் அரசராக இருந்தவர் மஹா ராணா பிரதாப். இவர் தமிழ் மன்னர் இல்லை. இவருடைய வரலாற்றை முந்தைய அரசுகள் மறைத்ததா, தற்போது உள்ள அரசு பிரபலப்படுத்தியதா என்ற அரசியலுக்குள் நாம் செல்லவில்லை. இந்த போர் வாள் மஹாராணா பிரதாப்புடையதா என்று மட்டுமே ஆய்வு செய்தோம்.

இந்த வாளில் கைப்பிடி பகுதியில் அரபியில் உள்ளது போன்ற எழுத்துக்கள் இருந்தன. இதனால் உண்மையில் இந்த படம் மஹா ராணா பிரதாப் வாள்தானா என்ற சந்தேகம் வந்தது. எனவே, முதலில், மஹாரானா பிரதாப் வாள் எப்படி இருக்கும், அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளதா என்று கண்டறிய கூகுளில் தேடினோம்.

அப்போது ராணா பிரதாப் அருங்காட்சியக வீடியோ ஒன்று கிடைத்தது. அதில் ராணா பிரதாப் ஓவியம் மற்றும் போர்க்கருவிகள் இருந்தன. ராணா பிரதாப்பின் வாள் சற்று வளைந்தபடி இருந்தது. ஆனால், நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட படத்தில் உள்ள வாளே நேராக உள்ளது. 

தொடர்ந்து தேடியபோது எக்கனாமிக் டைம்ஸ் இணையதள பக்கத்தில் செய்தி ஒன்று கிடைத்தது. அதில், ராணா பிரதாப் எப்போதும் இரண்டு வாள்களை வைத்திருப்பார். ஒவ்வொன்றும் 25 கிலோ எடை கொண்டது என்று குறிப்பிட்டிருந்தனர். மேலும், ராணா பிரதாப் அருங்காட்சியகத்தில் உள்ள அவரது படத்தை அதில் பயன்படுத்தியிருந்தனர். இதன் மூலம் இந்த வாள் ராணா பிரதாப்புடையது இல்லை என்பது தெளிவானது.

economictimesArchived Link

இது யாருடைய வாள் என்று அறிய, படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். நீண்ட தேடலுக்குப் பிறகு நமக்கு 2013ம் ஆண்டு இந்த புகைப்படத்தை வெளிநாட்டு நிறுவனம் ஒன்று பதிவேற்றம் செய்திருந்ததைக் காண முடிந்தது. அதில் ஐரோப்பாவின் ஸ்பெயின் மற்றும் வடக்கு ஆப்ரிக்க கண்டத்தில் ஐபீரின் கடல் பகுதியில் ஆட்சி செய்த நஸ்ரீத் அரசின் வாள் என்று குறிப்பிட்டிருந்தனர்.

மேலும் ஸ்பெயினின் கடைசி இஸ்லாமிய மன்னரான கிரனடாவின் 12வது முகம்மது என்பவரின் வாள் என்றும் அதில் குறிப்பிட்டிருந்தனர். அதனுடன் விக்கிப்பீடியா இணைப்பையும் அளித்திருந்தனர். அந்த பதிவில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வாளின் புகைப்படம் இடம் பெற்றிருந்தது. மேலும் இந்த வாள் பிரான்சில் மியூசி டி குளுனி என்ற அருங்காட்சியகத்தில் உள்ளதாக குறிப்பிட்டிருந்தனர்.

sword-site.comArchived Link 1
spainisculture.comArchived Link 2

நம்முடைய ஆய்வில்,

மஹாராணா பிரதாப்பின் போர் வாள் சற்று வளைந்தபடி இருப்பது உறுதியாகி உள்ளது.

மஹா ராணா இரண்டு வாள்களை சேர்த்தபடி வைத்திருப்பார், ஒவ்வொன்றின் எடை முறையே 25 கிலோ என்ற செய்தி கிடைத்துள்ளது.

இந்த வாள் புகைப்படம் ஸ்பெயினின் கடைசி இஸ்லாமிய மன்னருடையது என்பது தெரியவந்துள்ளது.

இந்த வாள் தற்போது பிரான்சில் உள்ள அருங்காட்சியகத்தில் இருப்பது தெரியவந்துள்ளது.

இதன் அடிப்படையில், மஹாராணா பிரதாப்பின் வாள் என்று பகிரப்படும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049044263) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:மஹா ராணா பிரதாப் பயன்படுத்திய போர் வாளா இது? – ஃபேஸ்புக் வதந்தி

Fact Check By: Chendur Pandian 

Result: False