மும்பையில் சாலையின் நடுவே மசூதி கட்டப்பட்டுள்ளது என்று ஒரு படம் சமூக ஊடகங்களில் ஒரு படம் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Facebook LinkArchived Link

சாலையின் குறுக்கே மசூதி இருக்கும் படத்தை பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், "மும்பையில் சாலையின் குறுக்கே கட்டப்பட்ட மசூதி. இதுதான் இந்திய சிறுபான்மையினர் சுதந்திரம். எங்கே நடு நிலை ஹிந்துக்கள் ?" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பதிவை Chandran Palanimalai என்பவர் 2020 செப்டம்பர் 10ம் தேதி பகிர்ந்துள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

மும்பையில் நடிகை ஒருவர் அனுமதியின்றி கட்டிய கட்டிடத்தை மும்பை மாநகராட்சி இடித்ததைத் தொடர்ந்து இந்த புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இந்த மசூதி மும்பையில் உள்ளதா என்று ஆய்வு செய்தோம்.

படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடிய போது, இந்த படத்தை சமூக ஊடகங்களில் பலரும் பதிவிட்டு வருவதைக் காண முடிந்தது. bhaskar.com என்ற இணையதளம் இந்த படத்தை கடந்த மாதம் வெளியிட்டிருந்தது தெரியவந்தது. இந்தியிலிருந்த அந்த செய்தியை மொழிமாற்றம் செய்து பார்த்தோம்.

Archived Link

அப்போது மத்தியப் பிரதேச மாநிலம் சாகர் நகரில் ரக்‌ஷா பந்தனுக்கு ஒரு நாளைக்கு முன்பு ஊரடங்கு தளர்வு வழங்கப்பட்டதால் மக்கள் கூட்டமாக பொருட்களை வாங்க தெருக்களில் குவிந்தனர் என்று செய்தி வெளியிட்டிருந்தனர்.

Google Map Link

இந்த மசூதியின் பெயரைக் குறிப்பிடவில்லை. எனவே, கூகுள் மேப்பில் மத்தியப் பிரதேசம், சாகர், மசூதி என்று டைப் செய்து தேடினோம். அப்போது ஜூம்மா மசூதி என்ற பெயரில் உள்ள ஒரு மசூதி நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவில் உள்ள புகைப்படத்தோடு ஒத்துப் போனதைக் காண முடிந்தது.

வரைபடத்தின் அடிப்படையில் பார்க்கும் போது அந்த மசூதி சாலையின் நடுவே கட்டப்பட்டது போல இல்லாமல், மசூதியை மையமாக வைத்து நான்கு பக்கமும் சாலை உருவாக்கப்பட்டது போல இருந்ததைக் காண முடிந்தது. அந்த மசூதி பற்றிய வரலாறு எதுவும் கிடைக்கவில்லை.

இதன் மூலம் மத்தியப் பிரதேச மாநிலம் சாகர் என்ற இடத்தில் உள்ள மசூதி படத்தை எடுத்துவந்து மும்பையில் உள்ள மசூதி என்று தவறான தகவல் பகிரப்பட்டு வருவது உறுதியாகிறது. இதன் அடிப்படையில் இந்த பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:மும்பையில் சாலை நடுவே கட்டப்பட்ட மசூதி என்று பகிரப்படும் வதந்தி!

Fact Check By: Chendur Pandian

Result: False