
‘’நோயாளி முன்னே புகை பிடிக்கும் குஜராத் அரசு மருத்துவர்,’’ என்ற தலைப்பில் ஷேர் செய்யப்படும் ஒரு பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
மேற்குறிப்பிட்ட தகவலை நமது வாசகர் ஒருவர் வாட்ஸ்ஆப் வழியே நமக்கு அனுப்பி வைத்தார். இந்த தகவல் வாட்ஸ்ஆப்பில் அதிகம் பகிரப்படுவதாகவும், இதன் நம்பகத்தன்மை பற்றி பரிசோதிக்கும்படியும் அவர் கேட்டுக் கொண்டார்.
இதே தகவலை ஃபேஸ்புக்கில் யாரேனும் பகிர்ந்துள்ளனரா என விவரம் தேடியபோது, சிலர் இதனை பகிர்ந்திருந்ததைக் கண்டோம்.
இதில், நோயாளிகள் சிலர் காத்திருக்க, மருத்துவர் அல்லது அரசு அதிகாரி போல தோற்றமளிக்கும் நபர் ஒரு கையில் சிகரெட் பிடித்தபடி, அலட்சியமாக தனது பணியை செய்வதைக் காண முடிகிறது. இருந்தாலும், அவர் குஜராத் மாநில அரசு மருத்துவரா என்பதில் சந்தேகமே உள்ளது.
உண்மை அறிவோம்:
மேற்கண்ட புகைப்படத்தில் கூறியுள்ளது போல குஜராத்தில் ஏதேனும் சம்பவம் நிகழ்ந்ததா என வித விதமான கீவேர்ட் பயன்படுத்தி தகவல் தேடினோம். ஆனால், இதுபோன்ற புகைப்படத்துடன் கூடிய செய்தி ஆதாரம் எதுவும் கிடைக்கவில்லை.
இதற்கடுத்தப்படியாக, குறிப்பிட்ட புகைப்படத்தை மட்டும் ஃபிரேம் முறையில் பிரித்தெடுத்து, அதனை கூகுளில் பதிவேற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடல் செய்தோம். அப்போது இதுபற்றிய சில செய்தி இணைப்புகள் கிடைத்தன.
இதன்படி, மேலே உள்ள புகைப்படத்தில் இருப்பவரின் பெயர் ஹைதர் நவாஸ். ஜாங்கிபூர் அரசு மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவராக பணிபுரியும்போது இவர் சிகரெட் பிடித்தபடி பெண் ஒருவருக்கு சிகிச்சை அளித்திருக்கிறார். இந்த விவகாரம் 2018ம் ஆண்டில் வெளிச்சத்திற்கு வந்து, பெரும் சர்ச்சையை ஏற்படுத்த, சம்பந்தப்பட்ட மருத்துவர் மீது ஜாங்கிபூர் ஹாஸ்பிடல் நிர்வாகம் நடவடிக்கை எடுத்திருக்கிறது.
இதுதொடர்பாக, பெங்காலி ஊடகங்களில் செய்தியும் வெளியாகியுள்ளது.
பெங்காலி மொழியில் இருந்த மேற்கண்ட செய்தியை நமது புரிதலுக்காக ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து முழு விவரத்தையும் ஆர்கிவ் செய்திருக்கிறோம்.
எனவே, கடந்த 2018ம் ஆண்டு மேற்கு வங்கத்தில் நிகழ்ந்த ஒரு சம்பவத்தை, அதுவும் குறிப்பிட்ட டாக்டர் மீது நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ள நிலையில், அதனை குஜராத்தில் தற்போது நிகழ்ந்ததாகக் கூறி, புதிய வதந்தியை சிலர் பரப்பி வருகின்றனர் என்று தெளிவாகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின்படி மேற்கண்ட செய்தியில் தவறான தகவல் உள்ளதாக நிரூபித்துள்ளோம். நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:இந்த சம்பவம் குஜராத்தில் நிகழவில்லை; முழு விவரம் இதோ!
Fact Check By: Pankaj IyerResult: False
