
‘’மோடியின் செயல்பாடுகளால் ரயில் பெட்டிகள் இணைப்பு கம்பிகள் மீது கைக்குழந்தையுடன் பெண் ஒருவர் அமர்ந்து செல்கிறார்,’’ என்று சமூக ஊடகங்களில் தகவல் பரவி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
ரயில் பெட்டிகள் இணைப்புப் பகுதி மீது கைக்குழந்தையுடன் அமர்ந்து பயணிக்கும் பெண்மணியின் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இந்தியாவின் செயல்பாடுகள் உலகத்தையே திரும்பப் பார்க்க வைத்துள்ளது. மோடியின் செயல்பாடுகளை உலகமே பாராட்டுகிறது – மோடி. (காணொலி : Sankar Narayanan என்பவர் பக்கத்திலிருந்து)” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வீடியோவை லெனின்பாபு காத்தவராயன் என்பவர் 2020 மே 13ம் தேதி பகிர்ந்துள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவில் நேரடியாக ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்ட பெண் என்று குறிப்பிடவில்லை. ஆனால், மோடியின் செயல்பாடு காரணமாக என்று குறிப்பிட்டுள்ளனர். தற்போது ஊரடங்கு காரணமாக புலம்பெயர் தொழிலாளர்கள் அதிக அளவில் இடம் பெயர்ந்து வரும் நிலையில் இந்த தகவல் தற்போது நடந்தது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது. அதே நேரத்தில் இந்த வீடியோ எங்கே, எப்போது எடுக்கப்பட்டது என்று எதையும் குறிப்பிடவில்லை.
இந்த வீடியோவில் உள்ள ரயில் பாதையைப் பார்க்கும்போது மீட்டர் கேஜ் போல உள்ளது. இந்தியாவில் ஒரு சில இடங்களில் மட்டுமே பாரம்பரிய ரயில் என்ற அடிப்படையில் மீட்டர் கேஜ் ரயில்கள் இயக்கப்படுகின்றன. அதுவும் ஒரு சில கி.மீ தொலைவுக்கே இயக்கப்படுகின்றன.
எனவே, இது வங்கதேசத்தில் எடுக்கப்பட்டதாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. அங்குதான் கூட்ட நெரிசல் காரணமாக ரயில் இன்ஜின், பெட்டி என கிடைக்கும் இடத்தில் எல்லாம் தொங்கிக் கொண்டு செல்வது அதிக அளவில் நடக்கிறது. வீடியோவின் 31வது விநாடியில் ரயில் பெட்டி வெளிப்புறப் பகுதியைக் காட்டுகின்றனர். அந்த டிசைன் வங்க தேசத்தின் இன்டர்சிட்டி ரயில் பெட்டியின் டிசைன் போலவே இருந்தது.
மேலும், இந்த காட்சியைத் தொடர்ந்து தண்டவாளத்தை படம்பிடித்து காட்டுகின்றனர். அப்போது வங்கதேசத்தில் உள்ளது போன்றே தண்டவாளம் மீட்டர் மற்றும் பிராட் கேஜ் ரயில் போக்குவரத்துக்கு ஏற்ற வகையில் மூன்று தண்டவாளமாக இருப்பதைக் காண முடிகிறது. எனவே, இது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டோம்.
இந்த வீடியோ காட்சிகளை புகைப்படங்களாக மாற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது பலரும் இந்த புகைப்படத்தை சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருவதைக் காண முடிந்தது. அதே நேரத்தில், இந்தியாவில் இந்த அவல நிலை என்று பலரும் பகிர்ந்து வருவதைக் காண முடிந்தது. தொடர்ந்து தேடியபோது 2016ம் ஆண்டு செப்டம்பர் 1ம் தேதி இந்த வீடியோ யூடியூபில் பதிவேற்றம் செய்யப்பட்டிருப்பதைக் காண முடிந்தது.
ஆனால், அதில் இந்த வீடியோ பற்றிய எந்த குறிப்பையும் வெளியிடவில்லை. அரபி மொழியில் இருந்ததால் அது என்ன என்று கண்டறிய முடியவில்லை.
செப்டம்பர் 13, 2016ம் ஆண்டு Prothom Alo என்ற யூடியூப் சேனல் இந்த வீடியோவை தன்னுடைய யூடியூப் பக்கத்தில் வெளியிட்டிருந்தது. அதில், வங்க மொழியில் குறிப்பிட்டிருந்ததை மொழி பெயர்ப்பு செய்து பார்த்தோம். “ஈத் பண்டிகை என்றாலே உடல் அளவில் அல்லது மனதளவில் சொந்த வீட்டுக்குத் திரும்புவதுதானே” என்ற வகையில் அர்த்தம் வந்தது.
வங்க தேசத்தில் ஈத் பண்டிகையையொட்டி லட்சக் கணக்கில் மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல ரயிலில் இப்படி ஏறிச் செல்வதை புலம்பெயர் தொழிலாளர்களுக்காக இயக்கப்பட்ட ரயில் என்று ஒரு வதந்தி பரவியது. அந்த தகவல் தவறானது என்று நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் கட்டுரை வெளியிட்டிருந்தது. அந்தக் கட்டுரையைக் காண இங்கே கிளிக் செய்யுங்கள்.
Prothom Alo பற்றி ஆய்வு செய்தபோது வங்கதேசத்தின் முன்னணி செய்தி ஊடகம் என்பது தெரியவந்தது. இதன் மூலம் வங்கதேசத்தில் எடுக்கப்பட்ட வீடியோவை, இந்தியாவில் புலம் பெயர் தொழிலாளர்கள் பற்றி செய்தி வெளியாகிக்கொண்டிருக்கும் நேரத்தில் பகிர்ந்திருப்பது தெரியவந்துள்ளது.
நம்முடைய ஆய்வில்,
கைக்குழந்தையுடன் பயணம் செய்யும் பெண் அமர்ந்திருக்கும் ரயில் பெட்டியின் டிசைனும், வங்கதேசத்தின் இன்டர்சிட்டி ரயில் பெட்டியின் டிசைனும் ஒன்றாக இருப்பதை உறுதி செய்துள்ளோம்.
தண்டவாளமும் வங்கதேசத்தில் உள்ளது போலவே, பிராட்கேஜ் மற்றும் மீட்டர் கேஜ் இணைந்ததாக உள்ளது.
வங்கதேச ஊடகம் ஒன்று 2016ம் ஆண்டு இந்த வீடியோவை தன்னுடைய யூடியூப் பக்கத்தில் வெளியிட்டிருப்பது நமக்கு கிடைத்துள்ளது.
ஈத் பண்டிகைக்காக சொந்த ஊருக்கு செல்லும் பெண் என்று அந்த தகவலில் குறிப்பிடப்பட்டிருந்தது.
வங்கதேசத்தில் ஈத் பண்டிகையையொட்டி சொந்த ஊர் செல்ல ஆபத்தான வகையில் வங்கதேச மக்கள் பயணம் மேற்கொள்ளும் செய்தி நமக்கு கிடைத்துள்ளது.
இந்த ஆதாரங்கள் அடிப்படையில் வங்கதேசத்தில் எடுக்கப்பட்ட வீடியோவை, இந்தியாவில் எடுத்ததாக குறிப்பிட்டு, “இந்தியாவின் செயல்பாடுகள் உலகத்தையே திரும்பப் பார்க்க வைத்துள்ளது. மோடியின் செயல்பாடுகளை உலகமே பாராட்டுகிறது” என்று தவறான தகவலுடன் வீடியோ பகிரப்பட்டுள்ளது என்பது உறுதியாகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை, எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049044263) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுவோம்.

Title:கைக்குழந்தை உடன் ரயில் பெட்டிகள் இடையே பயணிக்கும் பெண்– வீடியோ உண்மையா?
Fact Check By: Chendur PandianResult: False
