
‘’மக்களவை தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதால் விரக்தியடைந்து மிக மோசமாக நடந்துகொண்ட மம்தா பானர்ஜி‘’, என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் வீடியோ பதிவை காண நேரிட்டது. இதன்பேரில், உண்மை கண்டறியும் ஆய்வு நடத்தினோம்.
தகவலின் விவரம்:
PN செய்திகள் என்ற ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை, மே 28ம் தேதி வெளியிட்டுள்ளது. இதில், மம்தா பானர்ஜி ஆக்ரோஷமாக, வங்க மொழியில் கோஷம் போடுகிறார். அவரை ஊடகத்தினர் சுற்றி வளைத்து பேட்டி எடுக்கின்றனர். அந்த இடத்தை பார்ப்பதற்கு, மேற்கு வங்க சட்டப்பேரவை போன்று தோற்றமளிக்கிறது. இந்த வீடியோவின் உண்மைத்தன்மை தெரியாமல் பலரும் வைரலாக பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
மேற்கண்ட வீடியோவில் மம்தா பானர்ஜி பார்ப்பதற்கு மிக இளமையாக தோன்றுகிறார். தற்போது அவருக்கு 64 வயதாகும் நிலையில், மிகவும் வயதான தோற்றத்தில் மெலிந்து போய் காணப்படும் மம்தா, இந்த வீடியோவில் குண்டாக இளமையுடன் இருப்பதால், இது தற்போது எடுக்கப்பட்ட வீடியோ இல்லை என்று நமக்கு சந்தேகம் ஏற்பட்டது.

எனவே, இதன் பேரில் கூகுள், Yandex உள்ளிட்ட இணையதளங்களில் ரிவர்ஸ் இமேஜ் தேடல் செய்தோம். நீண்ட நேரம் தேடியும் எந்த விவரமும் கிடைக்கவில்லை. மீண்டும் குறிப்பிட்ட வீடியோ பதிவை ஆய்வு செய்தோம். அதில், கமெண்ட் பிரிவில் ஒருவர், இது மிகவும் பழைய வீடியோ என்றும், அப்போது மம்தா பானர்ஜி மேற்கு வங்க முதல்வர் பதவியில் இல்லை என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இந்த கமெண்டை பார்த்தபின், நமது சந்தேகம் மேலும் வலுவடைந்தது. இதன் அடிப்படையில், மேற்கு வங்கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி நடத்திய காலக்கட்டத்தில் மம்தா பானர்ஜி எதுவும் போராட்டத்தில் ஈடுபட்டாரா என்று கூகுளில் தேடல் செய்தோம். அப்போது, ஒரு வீடியோ ஆதாரம் சிக்கியது.

மேற்குறிப்பிட்ட வீடியோவை கிளிக் செய்து பார்த்தோம். அதில் நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட வீடியோவில் இருக்கும் காட்சிகள் அப்படியே இருந்தன.
இந்த வீடியோ 2013ம் ஆண்டில் பதிவிடப்பட்டது என்றும், மம்தா பானர்ஜியும், அவரது திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினரும் மேற்கு வங்க சட்டமன்றத்தில் அமளியில் ஈடுபட்டபோது எடுத்த விடியோ இது என்றும் தெரியவந்தது.

இதன்பேரில் 2013ம் ஆண்டில் மம்தா பானர்ஜி, மேற்கு வங்க சட்டமன்றத்தில் ஏதேனும் போராட்டத்தில் ஈடுபட்டாரா என கூகுளில் மீண்டும் வெவ்வேறு கீ வேர்ட் பயன்படுத்தி தேடிப் பார்த்தோம். அப்போது The Quint இதுபற்றி நடத்திய உண்மை கண்றியும் சோதனை முடிவுகள் கிடைத்தன. ஆனால், இதே வீடியோ பற்றி பரவிய வேறொரு வதந்தி பற்றி அவர்கள் உண்மை கண்டறிந்துள்ளனர். அதுவும் இதே வீடியோ தொடர்பானதுதான். அந்த செய்தியை படித்தபோது, மேலே குறிப்பிடப்படும் வீடியோ 2006ம் ஆண்டில் எடுக்கப்பட்ட ஒன்று என தெரியவந்தது.
அப்போதைய ஆளுங்கட்சியாக இருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டை கண்டித்தும், சிங்கூர் பகுதியில் அமையவிருந்த டாடா தொழிற்சாலையை கண்டித்தும் மம்தா பானர்ஜி போராட்டத்தில் ஈடுபட்டார். இதன்போது, சிங்கூர் பகுதிக்குள் அவரை நுழையவிடாமல் போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். பின்னர் விடுதலை செய்யப்பட்ட அவர், தனது கட்சியினருடன் நேராக மேற்கு வங்க சட்டமன்றம் வந்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது எடுக்கப்பட்டதுதான், நாம் ஆய்வு செய்வு செய்யும் ஃபேஸ்புக் பதிவில் ப்கிரப்பட்டுள்ள வீடியோ. இதுபற்றி The Quint வெளியிட்ட செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
இதன்படி, மேலும் ஒருமுறை கூகுளில் தகவல் தேடினோம். அப்போது, இதுதொடர்பாக DNA வெளியிட்ட செய்தி ஆதாரம் கிடைத்தது. அந்த செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
தற்போது உள்ளது போல 2006ம் ஆண்டில் ஆன்லைன் வசதிகள் அதிகம் கிடையாது. எனவே, இதுபற்றிய செய்திகள் அப்போதே வெளியாகியிருந்தாலும், வீடியோ ஆதாரம் சற்று தாமதமாக, சமூக ஊடகங்களில் பரவ தொடங்கியிருக்கிறது. அதாவது, 2010க்குப் பிறகுதான் இந்த வீடியோ அதிகம் பகிரப்பட்டு வருவதாக, நமது ஆய்வில் தெரியவருகிறது.

சிங்கூர் போராட்டத்தின் மூலமாக, பெரும் மக்கள் செல்வாக்கு பெற்ற மம்தா பானர்ஜி 2011ம் ஆண்டு இடதுசாரிகள் தலைமையிலான ஆட்சியை தோற்கடித்து, முதல்வராக பதவியேற்றுக் கொண்டார். இதனையடுத்து, அவர் எதிர்க்கட்சியாக இருந்தபோது செய்த விசயங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன. அதில் ஒன்றுதான், நாம் ஆய்வு செய்யும் வீடியோ பதிவும்.
எனவே, இது 2006ம் ஆண்டில் மம்தா பானர்ஜி எதிர்க்கட்சியாக இருந்தபோது நடத்திய போராட்ட வீடியோ என்று தெளிவாகிறது. மோடி வெற்றி பெற்றதால் விரக்தியில் அவர் இப்படி கூச்சலிட்டு, அழுது புலம்பினார் என்று கூறுவது தவறான செய்தியாகும்.
முடிவு:
உரிய ஆதாரங்களின்படி, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் யாரும் இத்தகைய தவறான செய்தி, புகைப்பட மற்றும் வீடியோ பதிவுகளை மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:பாஜக வெற்றி பெற்ற விரக்தியில் புலம்பிய மம்தா பானர்ஜி: வைரல் வீடியோவால் குழப்பம்
Fact Check By: Parthiban SResult: False
