
‘’கோலாப்பூர் விமான நிலையத்தை கொளுத்திய பாஜகவினர்,’’ என்ற தலைப்பில் பகிரப்பட்ட ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
இதில், மகாராஷ்டிரா மாநிலம், கோலாப்பூர் விமான நிலையத்தை பாஜகவினர் தீயிட்டு கொளுத்தியதாகக் கூறியுள்ளனர். ஆதாரத்திற்காக இணையதளம் ஒன்றில் வெளியான செய்தியை இணைத்துள்ளனர்.
இந்த செய்தியில், பிரதமர் மோடிக்கு ஆதரவாக சோலாப்பூர் விமான நிலையத்தை தீயிட்டு கொளுத்தியதாகக் குறிப்பிட்டுள்ளனர்.
முதல் ஃபேஸ்புக் பதிவில் இதனை கோலாப்பூர் விமான நிலையம் எனக் கூற, இந்த செய்தியிலோ சோலாப்பூர் விமான நிலையம் எனக் கூறி அதற்கு ஆதாரமாக ஒரு ட்விட்டர் பதிவையும் இணைத்துள்ளனர். அந்த ட்விட்டர் பதிவை கிளிக் செய்து பார்த்தபோது, அது டெலிட் செய்யப்பட்டதாக தகவல் கிடைத்தது.
உண்மை அறிவோம்:
முதலில், கோலாப்பூர் விமான நிலையம் என்றும், பிறகு சோலாப்பூர் விமான நிலையம் என்றும் குறிப்பிட்டுள்ளனர். எனவே, இது எங்குதான் நிகழ்ந்தது என்றே இவர்களுக்கு தெளிவில்லை. ஆனாலும், பிரதமர் மோடிக்கு ஆதரவாக பாஜகவினர் இதனைச் செய்ததாக சந்தேகமின்றி குறிப்பிடுகின்றனர்.
இவர்கள் சொல்வது போல முதலில், கோலாப்பூரில் விமான நிலையம் உள்ளதா, அதனை பாஜகவினர் தீயிட்டு கொளுத்தினார்களா என்று தகவல் தேடினோம். அப்படி எந்த சம்பவமும் நிகழ்ந்ததாக செய்தி எதுவும் கிடைக்கவில்லை.
இதற்கடுத்தப்படியாக, இந்தியாவில் வேறு எங்கேனும் உள்ள விமான நிலையத்தில் கடந்த வாரத்தில் தீ விபத்து நிகழ்ந்ததாக செய்தி வெளியானதா என தேடினோம். அப்போது, சோலாப்பூர் விமான நிலையத்தில் தீ விபத்து நிகழ்ந்ததாகச் சில செய்திகள் கிடைத்தன. ஆனால், இவர்கள் ஆதாரத்திற்காக இணைத்திருந்த ட்விட்டர் பதிவு, வீடியோ லிங்க் போன்றவை error என்றே காட்டியது.
இதுவும் தவறான தகவல்தான். ஒரு முன்னணி ஊடகங்கள் கூட உண்மையை சரிபார்க்காமல் எந்தளவுக்கு வதந்தியை பரப்புகின்றன என்பதற்கு இது சிறு உதாரணம்.
காங்கிரஸ் ஆதரவு பத்திரிகையாளர்கள், ஃபேக்ட் செக்கர்கள், ஊடகங்கள் பலவும் பழைய வீடியோ ஒன்றை எடுத்து, ஏப்ரல் 5ம் தேதி நிகழ்வுடன் தொடர்புபடுத்தி வதந்தியை பரப்பியுள்ளனர். உண்மையில், சோலாப்பூர் விமான நிலையத்தில் பிப்ரவரி 3, 2020 அன்று நிகழ்ந்த தீ விபத்து பற்றிய வீடியோ இதுவாகும். அந்த பழைய வீடியோ கீழே ஆதாரத்திற்காக தரப்பட்டுள்ளது.
இதுகுறித்து டைம்ஸ் ஆஃப் இந்தியா ஊடகம் உண்மை கண்டறியும் சோதனை நடத்தி அதன் முடிவுகளை ஏற்கனவே சமர்ப்பித்துள்ளது.
இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் நமக்கு தெரியவந்த உண்மையின் விவரம் பின்வருமாறு:-
1) பிரதமர் மோடி ஏப்ரல் 5, 2020 அன்று நாட்டு மக்களை விளக்கேற்றும்படி கேட்டுக்கொண்டார். இதையொட்டி, சில இடங்களில் பட்டாசு வெடித்தனர். இதில், தீ விபத்துகளும் நிகழ்ந்தன.
2) இந்த பரபரப்பை பயன்படுத்தி, சில அரசியல் கட்சிகளின் ஆதரவாளர்கள், முன்னணி ஊடகங்கள் மற்றும் பத்திரிகையாளர்களும் சேர்ந்து சோலாப்பூர் விமான நிலையத்தை பாஜக ஆதரவாளர்கள் கொளுத்திவிட்டதாக, திட்டமிட்டு வதந்தி பரப்பியுள்ளனர்.
3) இவர்கள் ஆதாரத்திற்காக பகிர்ந்த வீடியோ, சோலாப்பூர் விமான நிலையத்தில் கடந்த பிப்ரவரி 3, 2020ல் நிகழ்ந்ததாகும். உண்மைச்சாயம் வெளுத்ததும் பலர் தங்களது ட்விட்டர், ஃபேஸ்புக் பதிவுகளை அழித்துவிட்டனர்.
4) இந்த உண்மை தெரியாமல் தமிழ், இந்தி உள்ளிட்ட மொழிகளில் பலர் மேற்கண்ட செய்தியை ஷேர் செய்து வருகிறார்கள். இதில், நாம் ஆய்வு செய்யும் ஃபேஸ்புக் பதிவில் கோலாப்பூர் விமான நிலையம் என்று குறிப்பிட்டு, ஒரு வதந்தியை மேலும் ஒரு வதந்தியாக திரித்துவிட்டுள்ளனர்.
முடிவு:
உரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வு செய்த ஃபேஸ்புக் பதிவில் தவறான தகவல் உள்ளதாக நிரூபித்துள்ளோம். நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:கோலாப்பூர் விமான நிலையத்தை பாஜகவினர் கொளுத்தினார்களா?
Fact Check By: Pankaj IyerResult: False
