
உத்தரப் பிரதேசத்தில் தண்ணீர் எடுத்தார் என்பதற்காக பட்டியலினத்தைச் சேர்ந்த பெண் ஒருவரை சாதி வெறியர்கள் சவுக்கால் அடித்ததாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு மேற்கொண்டோம்.
தகவலின் விவரம்:
இந்த வீடியோ பதிவில், ஒரு பெண்ணை சிலர் சேர்ந்து மிகக் கொடூரமான முறையில் தாக்குகின்றனர். இதை ஊரோ சுற்றி நின்று வேடிக்கை பார்க்கிறது. யாரும் தடுக்க முயலவில்லை. இந்தியில் பேசுவது போல் உள்ளது. அது என்ன மொழி என்று சரியாகத் தெரியவில்லை. அடிவாங்கும் பெண்ணின் அலறல் சத்தம் கேட்கிறது.
நிலைத் தகவலில், “உத்திரபிரதேசத்தில், காட்டுமிராண்டி ஜாதி வெறிநாய்ங்களுக்கு சொந்தமான கிணற்றில் தண்ணீர் எடுத்தார் என்பதற்காக பட்டியலினத்தை சார்ந்த பெண் ஒருவரை சவுக்கால் அடித்து சாதி வெறியர்கள் துன்புறுத்தும் கொடுமை. ஆதியோகிநாத்… இந்துத்துவ வெறியன்கள் மாட்டு மூத்திரம் குடிக்கும் மிருகங்கள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வீடியோ பதிவை Anitha Manirathinam S A என்பவர் 2020 ஜூன் 4ம் தேதி பதிவிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
வட இந்தியாவில் சாதி ரீதியான தாக்குதல் அதிக அளவில் நடைபெறுவதாக அவ்வப்போது சமூக ஊடகங்களில் வதந்தி பரப்பப்பட்டு வருகிறது. அது தொடர்பான உண்மை நிலவரத்தை அவ்வப்போது ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் பிரிவு கண்டறிந்து செய்தி வெளியிட்டு வருகிறது.
சமீபத்தில் கூட உத்தரப் பிரதேசத்தில் தண்ணீர் எடுத்ததற்காக தலித் பெண் ஒருவரை தாக்கியதாக வதந்தி பரவியது. அது தொடர்பாக ஆய்வு நடத்தியபோது அந்த புகைப்படம் பாகிஸ்தானில் எடுக்கப்பட்டது என்றும், இரு சமூகத்தினருக்கு இடையேயான பிரச்னையில் அந்த பெண் தாக்கப்பட்டார் என்றும் தெரியவந்தது.
அந்த பதிவில் உள்ளது போலவே, தண்ணீர் எடுத்த பட்டியலினப் பெண் தாக்கப்பட்டார் என்று கூறப்படவே, இது உண்மையா என்று ஆய்வு நடத்தினோம். வீடியோவை புகைப்படமாக மாற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம்.
அப்போது, இந்த சம்பவம் குஜராத் மாநிலத்தில் நடந்ததாக செய்தி நமக்கு கிடைத்தது. இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூட தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டிருப்பது தெரிந்தது.
அந்த செய்திகள் ஒவ்வொன்றாக பார்த்தோம். என்டிடிவி வெளியிட்டிருந்த செய்தியில், இந்த சம்பவம் குஜராத் மாநிலம் சோட்டா உதய்பூர் மாவட்டத்தில் உள்ள குக்கிராமம் ஒன்றில் மே 21ம் தேதி நடந்தாக குறிப்பிட்டிருந்தனர். 16 வயதான பழங்குடியின பெண்ணை அவருடைய தந்தையின் கண் முன்பாகவே தாக்கியதாக கூறப்பட்டிருந்தது.
அந்த சிறுமி வாலிபர் ஒருவருடன் காதல் வயப்பட்டு ஊரைவிட்டு வெளியேறியிருக்கிறார். அவர்கள் மத்திய பிரதேசத்தில் தங்கியிருந்துள்ளனர். சம்பவம் நடப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு அந்த சிறுமி சொந்த ஊர் திரும்பியுள்ளார். அப்போது தங்கள் சமுதாயத்துக்கு அவமானம் செய்துவிட்டதாகக் கூறி அந்த சிறுமியை மூன்று பேர் தாக்கியுள்ளனர்.
சிறுமியை தாக்கிய மூன்று பேர் மற்றும் தாக்குதலை வேடிக்கை பார்த்த 13 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று சம்பந்தப்பட்ட போலீஸ் நிலைய அதிகாரி கூறியதாக குறிப்பிட்டிருந்தனர். மேலும் அந்த 16 பேர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டிருந்தனர்.
இந்தியா டிவி வெளியிட்டிருந்த செய்தியில், வேறு ஒரு ஆணுடன் சேர்ந்து ஊரைவிட்டு வெளியேறினார் என்பதற்காக இந்த தாக்குதல் சம்பவம் நடந்தது. பெண்ணை தாக்கிய அனைவரும் அவருடைய உறவினர்கள் என்று குறிப்பிட்டிருந்தனர்.
டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்டிருந்த செய்தியில், அந்த பெண் தன்னுடைய உறவினர்களால் தாக்கப்பட்டது மட்டுமின்றி, தன்னுடைய காதல் கணவனை தன்னுடைய தோளில் சுமந்து கிராமத்தைச் சுற்றி வர வற்புறுத்தப்பட்டார் என்று குறிப்பிட்டிருந்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக இரண்டு பேரை போலீசார் கைது செய்திருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தனர்.
நியூஸ் 18 வெளியிட்டிருந்த செய்தியில், 16 வயது சிறுமியின் தந்தையிடமிருந்து புகார் பெறப்பட்டு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த சிறுமி வேறு ஒரு ஆணுடன் வீட்டைவிட்டு வெளியேறி மத்தியப் பிரதேசத்தில் வசித்து வந்துள்ளார். அவர் ஊர் திரும்பிய சில நாட்களில் தண்டனை என்ற பெயரில் இந்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது என்று குறிப்பிட்டிருந்தனர்.
குஜராத்தி மொழியில் வெளியான செய்திகளையும் ஆய்வு செய்தோம். மொழி மாற்றம் செய்து பார்த்தபோது அவை அனைத்திலும் மேலே குறிப்பிட்டது போன்றே குறிப்பிட்டிருந்தனர். எனவே, இது இரு சாதியினருக்கு இடையேயான பிரச்னை இல்லை, காதல் திருமண பிரச்னை என்பது உறுதியானது.
நம்முடைய ஆய்வில்,
தண்ணீர் எடுத்ததற்காக பெண் தாக்கப்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த பெண் தாக்கப்பட்ட நிகழ்வு உத்தரப்பிரதேசத்தில் நடைபெறவில்லை, குஜராத் மாநிலத்தில் சோட்டா உதய்பூர் மாவட்டத்தில் நடந்துள்ளது உறுதியாகி உள்ளது.
காதல் திருமணம் செய்து ஊரைவிட்டு வெளியேறிய காரணமாக தங்கள் கிராமத்தின் கௌரவம் பாதிக்கப்பட்டதாகக் கூறி சிறுமியின் உறவினர்கள் இந்த தாக்குதல் சம்பவத்தை நடத்தியது உறுதியாகி உள்ளது.
சாதிக் கொடுமை காரணமாக இந்த சம்பவம் நடைபெறவில்லை என்பது உறுதியாகி உள்ளது.
இதன் அடிப்படையில், உத்தரப்பிரதேசத்தில் குடிதண்ணீர் எடுத்தற்காக பட்டியலினப் பெண்ணை தாக்குகிறார்கள் என்று பகிரப்படும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049044263) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:உ.பி-யில் தண்ணீர் எடுத்ததற்காக பட்டியலினப் பெண்ணை சவுக்கால் அடித்தார்களா?
Fact Check By: Chendur PandianResult: False
