ஒரே பிரசவத்தில் 19 குழந்தைகள்: ஃபேஸ்புக் வைரல் பதிவு உண்மையா?

சமூகம் சர்வதேசம் | International

பெண் ஒருவருக்கு ஒரே பிரசவத்தில் 19 குழந்தைகள் பிறந்துள்ளதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. இது உண்மையா என்று கண்டறிந்து சொல்ல வேண்டும் என்று நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் பிரிவின் வாசகர் ஒருவர் கேட்டுக்கொண்டார். அதன் அடிப்படையில் இந்த தகவல் தொடர்பாக நாம் ஆய்வு மேற்கொண்டோம்.

தகவலின் விவரம்:

SIngle Delivery 2.png
Facebook LinkArchived Link

மிகப்பெரிய வயிற்றுடன் கர்ப்பிணி ஒருவர் செல்ஃபி எடுத்துக்கொள்ளும் படம், ஆண் ஒருவர் ஏராளமான குழந்தைகளுடன் இருக்கும் படம் மற்றும் அறை முழுக்க குழந்தைகள் நிறைந்திருக்கும் படம் ஆகியவற்றை கொலாஜ் செய்து பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், ‘ஒரே பிரசவத்தில் பத்தொன்பது குழந்தை எவ்ளோ பெரிய ஆச்சர்யம்’ என்று குறிப்பிட்டிருந்தனர்.

இந்த பதிவை, Time pass என்ற ஃபேஸ்புக் பக்கம் 2019 அக்டோபர் 23ம் தேதி வெளியிட்டுள்ளது. பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

ஆச்சரியமான தகவலைப் பகிர்வதாக கூறி 101 வயதில் குழந்தை பெற்ற பாட்டி, ஒரே பிரசவத்தில் 17 குழந்தைகள் பெற்ற பெண் என்று சமூக ஊடகங்களில் தொடர்ந்து வதந்தி பரப்பப்பட்டு வருகிறது. தற்போது ஒரே பிரசவத்தில் 19 குழந்தை பிறந்துள்ளதாக கர்ப்பிணி ஒருவரின் படத்தை பகிர்ந்துள்ளனர். ஒரே பிரசவத்தில் பெண் ஒருவருக்கு 17 ஆண் குழந்தை பிறந்ததாக பரவிய தகவல் வதந்தி என்று நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ தமிழில் கட்டுரை வெளியிட்டிருந்தோம்.

அதில், கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் பதிவான தகவல் அடிப்படையில், ஒரே பிரசவத்தில் எட்டு குழந்தைகள் பிறந்ததுதான் இதுவரை சாதனையாக உள்ளது என்று ஆதாரத்துடன் தெரிவித்திருந்தோம்.

SIngle Delivery 3.png
guinnessworldrecords.comArchived Link

இந்த நிலையில், புதிய படங்களுடன் 19 குழந்தை பிறந்ததாக புதிதாக தகவல் பரப்பப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

படத்தில் உள்ள கர்ப்பிணியின் படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, இதே படங்களுடன் ஒரே பிரசவத்தில் 17 குழந்தைகள் பெற்ற பெண் என்று சமூக ஊடகங்களில் வதந்தி பரவி வருவதும், இந்தியா டுடே உள்ளிட்ட ஊடகங்கள் இது தொடர்பாக உண்மை கண்டறியும் கட்டுரைகள் வெளியிட்டதும் தெரியவந்தது.

SIngle Delivery 4.png
Search Linkdeviantart.comArchived Link

அதே நேரத்தில், படத்தில் உள்ள பெண்மணியின் அசல் புகைப்படமும் நமக்கு கிடைத்தது.  இணையதளம் ஒன்று அந்த புகைப்படத்தை வெளியிட்டிருந்தது. அதில், அந்த பெண்மணியின் வயிறு சிறியதாக உள்ளது. போட்டோஷாப் மூலம் இந்த பெண்மணியின் வயிறு பெரிதாக்கப்பட்டுள்ளது உறுதியானது.

SIngle Delivery 4A.gif

அடுத்தது குழந்தைகளுடன் இருக்கும் நபரின் படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். நம்முடைய தேடலில், படத்தில் உள்ளவர் குழந்தைப்பேறு மற்றும் மகளிர் நல மருத்துவர் என்பது தெரிந்தது. தன்னிடம் சிகிச்சைக்கு வந்து சுகப்பிரசவம் மூலம் பிறந்த குழந்தைகளை எல்லாம் ஒன்று சேர்த்து அவர் புகைப்படம் எடுத்திருந்தது தெரிந்தது. இந்த புகைப்படம் 2010ம் ஆண்டு ஒரு இணையதளத்தில் வெளியாகி இருந்தது நமக்கு தெரியவந்தது.

SIngle Delivery 5.png
Search Linkhuffpost.comArchived Link

குழந்தைகளுடன் பெண்மணி ஒருவர் படுத்திருக்கும் புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது அந்த செய்தியை world news daily report என்ற ஊடகம் வெளியிட்டிருந்தது தெரிந்தது. அந்த ஊடகம் பொய்யான மற்றும் கேலி கிண்டலான செய்திகளை வெளியிடும் ஊடகம் ஆகும். தன்னுடைய லோகோவுக்கு கீழ் இதை வெளிப்படையாகவே அந்த ஊடகம் அறிவித்துள்ளது. பொய்யான செய்தியை வெளியிடும் இணையதளத்திலிருந்து படம் மற்றும் செய்தியை எடுத்து, கூடுதலாக இரண்டு படங்களை சேர்த்து இந்த பதிவை உருவாக்கியுள்ளது உறுதியாகிறது.

SIngle Delivery 6.png
worldnewsdailyreport.comArchived Link

நம்முடைய ஆய்வில்,

வயிறு பெரிதாக இருக்கும் கர்ப்பிணியின் படம் போட்டோ மார்ஃபிங் செய்யப்பட்டது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

குழந்தைகளுடன் இருக்கும் ஆண் படமானது, மருத்துவர் ஒருவருடைய புகைப்படம் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

குழந்தைகளுடன் இருக்கும் பெண்ணின் படம் மற்றும் ஒரே பிரசவத்தில் 17 குழந்தைகள் பிறந்தது என்ற தகவல் பொய்யான செய்திகளை வெளியிடும் இணையதளத்திலிருந்து எடுக்கப்பட்டது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது போன்ற வதந்தி தொடர்ந்து சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஒரே பிரசவத்தில் எட்டு குழந்தைகள் பிறந்ததுதான் இதுவரையில் உலக சாதனையாக உள்ளது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த ஆதாரங்கள் அடிப்படையில், ஒரே பிரசவத்தில் கர்ப்பிணி ஒருவருக்கு 19 குழந்தைகள் பிறந்தது என்ற தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:ஒரே பிரசவத்தில் 19 குழந்தைகள்: ஃபேஸ்புக் வைரல் பதிவு உண்மையா?

Fact Check By: Chendur Pandian 

Result: False