
20 நிமிட மின் தடைக்காக, 20 நிமிடங்கள் தலைவணங்கி மன்னிப்பு கேட்டார் ஜப்பான் மின்சாரத் துறை அமைச்சர் என்று ஒரு படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
சீனா, ஜப்பானியர் முறைப்படி ஒருவர் தலைவணங்கி வணக்கம் சொல்லும் புகைப்படத்துடன் பதிவு உருவாக்கப்பட்டுள்ளது. அதில், “மின்தடை – ஜப்பான் அமைச்சர். இருபது நிமிடங்கள் மின்தடை ஏற்பட்டதற்காக மக்கள் முன் இருபது நிமிடங்கள் தலை குனிந்து நின்றார் ஜப்பான் மின்சாரத்துறை அமைச்சர்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், “ஜப்பான்ல அணில் கடிச்சிட்டுன்னு சொல்லி தப்பிக்க முடியாது ஏன்னா அவன் 200 ஓவாய்க்கு ஓட்டு போட்டவன் இல்ல” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை Reeghans என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்ட நபர் 2022 ஆகஸ்ட் 1ம் தேதி பதிவிட்டுள்ளார். இதைப் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:
ஜப்பானில் மின்சாரத் துறை அமைச்சர் மின்சார வெட்டுக்கு மன்னிப்பு கேட்டார் என்று பகிரப்படும் தகவல் ஆச்சரியத்தை அளித்தது. மின் வெட்டு தவிர்க்க முடியாதது. அதுவும் அடிக்கடி பூகம்பம், சுனாமி, புயல் மழையால் பாதிப்பு ஏற்படும் ஜப்பானில் மின்சாரத்தை துண்டிக்காமல் மீட்புப் பணிகளை செய்ய முடியாது. எனவே, இந்த தகவல் உண்மையா என்று ஆய்வு செய்தோம்.
இந்த புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, இந்த புகைப்படத்தில் இருக்கும் நபர் ஜப்பானின் மின்சாரத் துறை அமைச்சர் இல்லை, ஹோண்டா நிறுவனத்தின் தலைவர் என்று தெரிந்தது.

உண்மைப் பதிவைக் காண: alamy.com I Archive
alamy.com என்ற இணையதளத்தில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவில் இடம் பெற்ற புகைப்படம் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது. அதில், 2015 ஜூலை 6ம் தேதி ஹோண்டா நிறுவனத்தின் புதிய தலைவராக பொறுப்பேற்றுக்கொண்ட Takahiro Hachigo முதல் பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது தலைவணங்கி வணக்கம் தெரிவித்தார் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த படத்தில் ஹோண்டா நிறுவனத்தின் தலைவருக்கு பின்புறம் உள்ள சுவரில் ஹோண்டா என எழுதப்பட்டிருப்பது சற்று மங்கலாகத் தெரிந்தது.
gettyimages.in இணையதளம் விற்பனைக்கு வைத்துள்ள படத்தில், ஹோண்டா நிறுவனத்தின் தலைவர் அமர்ந்திருக்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. அதில் ஹோண்டா என மிகத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.

உண்மைப் பதிவைக் காண: gettyimages.in I Archive
ஹோண்டா நிறுவனத்தின் தலைவர் தலை வணங்கி வணக்கம் கூறிய படத்தை எடுத்து, ஜப்பானில் 20 நிமிடம் மின்சாரம் துண்டிக்கப்பட்டதற்கு மின்சாரத் துறை அமைச்சர் 20 நிமிடம் தலை வணங்கி மன்னிப்பு கேட்டார் என்று விஷமத்தனமான தகவல் சேர்த்துப் பகிர்ந்திருப்பது உறுதியாகிறது.
முடிவு:
எனவே, ஜப்பான் மின்சாரத் துறை அமைச்சர் மின் வெட்டுக்காக மன்னிப்பு கேட்டார் என்று சமூக ஊடகங்களில் பகிரப்படும் தவறான தகவலை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:20 நிமிட மின் தடைக்காக தலை வணங்கி மன்னிப்பு கேட்டாரா ஜப்பான் அமைச்சர்?
Fact Check By: Chendur PandianResult: False
