மருத்துவக் கல்லூரிகளில் ஒ.பி.சி-க்கு இட ஒதுக்கீடு வழங்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது முக்கியத்துவம் வாய்ந்தது என்றும், சமஸ்கிருதம் கற்றவர்கள் மட்டுமே மருத்துவராக முடியும் என்கிற சட்டத்தை பா.ஜ.க அரசு இயற்ற வேண்டும் என்றும் ஆடிட்டர் குருமூர்த்தி கூறியதாக ஒரு நியூஸ் கார்டு வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive

துக்ளக் ஆசிரியர் ஆடிட்டர் எஸ்.குருமூர்த்தி புகைப்படத்துடன் நாரதர் மீடியா என்ற இணைய ஊடகம் ஒன்றின் நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில் "மருத்துவக் கல்லூரிகளில் .பி.சி இடஒதுக்கீட்டை வழங்கமுடியாது என்கிற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. திராவிட நோய் பரவுவதற்கு முன்பு இருந்தது போல் சமஸ்கிருதம் கற்றவர்கள் மட்டுமே மருத்துவராக முடியும் என்கிற சட்டத்தையும் பா.. அரசு இயற்றி சமூகநீதியை நிலைநாட்ட வேண்டும். - ஆடிட்டர் எஸ் குருமூர்த்தி" என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

இந்த பதிவை பெ பழநி என்பவர் 2021 மார்ச் 10 அன்று ஃபேஸ்புக்கில் பகிர்ந்துள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு மருத்துவ உயர் படிப்பில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று தமிழக அரசு மற்றும் தி.மு.க, அ.தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் சார்பில் கடந்த 2020ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதில், 2020ம் ஆண்டு இட ஒதுக்கீடு வழங்க முடியாது, 2021ம் ஆண்டு முதல் வழங்கலாம் என்று தீர்ப்பளிக்கப்பட்டது. 2020ம் ஆண்டே வழங்க உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதிலும் நிர்வாக காரணங்களுக்காக 2020ம் ஆண்டே வழங்க முடியாது என்று தீர்ப்பளிக்கப்பட்டது.

இதற்கிடையே இதர பிற்படுத்தப்பட்ட குழுவினருக்கு இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக குழு அமைக்கப்பட்டு அதன் பரிந்துரை மத்திய சட்டம் மற்றும் சுகாதாரத் துறை அமைச்சகத்திடம் வழங்கப்பட்டது என்று எல்லாம் செய்தி வெளியானது. இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்க முடியாது என்று எந்த ஒரு தீர்ப்பும் வந்தது போல நினைவில் இல்லை. எனவே, இது தொடர்பாக முதலில் தேடினோம்.

2020 அக்டோபர் 26ம் தேதி நடப்பாண்டில் மருத்துவப் படிப்பில் ஓ.பி.சி இட ஒதுக்கீடு வழங்க உத்தரவிட முடியாது என்று கூறியதாக செய்திகள் கிடைத்தன. அதே போல் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 25ம் தேதி டாக்டர் ராமதாஸ் வெளியிட்டிருந்த அறிக்கையில், "எந்த வழக்கிலும் 2021-ம் ஆண்டு முதல் ஓபிசி இட ஒதுக்கீட்டை வழங்கலாம் என்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் தடை விதிக்கவில்லை. அத்தகைய சூழலில் வரும் ஆண்டில் 27 சதவீத ஓபிசி இட ஒதுக்கீடு வழங்க மத்திய அரசு மறுத்திருப்பது சமூகநீதி சூறையாடல் ஆகும்" என்று குறிப்பிட்டிருந்தார்.

அசல் பதிவைக் காண: news18.com I Archive 1 I dailythanthi.com I Archive 2

இதன் மூலம் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்க முடியாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு எதையும் வழங்கவில்லை என்பதை புரிந்துகொள்ள முடிகிறது. அப்படி இருக்கும்போது ஆடிட்டர் எஸ்.குருமூர்த்தி இப்படி கூறியிருப்பாரா என்ற சந்தேகம் எழுந்தது.

இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க முடியாது என்று உச்சநீதிமன்றம் கூறியது என ஆடிட்டர் குருமூர்த்தி எங்காவது கூறியுள்ளாரா, வரவேற்றுள்ளாரா என்று தேடினோம். அப்படி எந்த ஒரு செய்தியும் நமக்குக் கிடைக்கவில்லை. நாரதர் மீடியா ஊடகத்தில் இந்த நியூஸ் கார்டு வெளியாகி உள்ளதா என்று அதன் ஃபேஸ்புக் பக்கத்தைத் தேடிக் கண்டுபிடித்தோம். அதில், இந்த நியூஸ் கார்டு போலியானது என்று குறிப்பிட்டிருந்தனர்.

நாரதர் மீடியா வெளியிட்டிருந்த பதிவில், "#fakenews இது சமூக விரோதிகளால் திட்டமிட்டு உருவாக்கப்பட்டு பரப்பப்பட்டுள்ள போலி செய்தி என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். இந்த செய்திக்கும், நாரதர் மீடியாவுக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை. நாரதர் மீடியா பெயரில் போலியாக தயாரித்து பரப்பப்பட்ட இந்த செய்தி தொடர்பாக சட்டப்பூர்வ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்" என்று குறிப்பிட்டிருந்தனர்.

அசல் பதிவைக் காண: Facebook I Archive

இதன் மூலம் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் கூறவில்லை என்பதும், அதை வரவேற்று இனி சமஸ்கிருதம் படித்தால் மட்டும் மருத்துவம் படிக்க முடியும் என்ற சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று குருமூர்த்தி கூறியதாக பரவும் பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

சமஸ்கிருதம் படித்தால்தான் மருத்துவராக முடியும் என்ற சட்டத்தை இயற்ற வேண்டும் என்று ஆடிட்டர் குருமூர்த்தி கூறியதாக பரவும் நியூஸ் கார்டு போலியானது என்பதை ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:சமஸ்கிருதம் கற்றவர்கள் மட்டும் மருத்துவராக சட்டம் இயற்ற வேண்டும்!- ஆடிட்டர் குருமூர்த்தி பெயரில் போலிச் செய்தி

Fact Check By: Chendur Pandian

Result: False