
‘’ கேரளாவில் ஆர்எஸ்எஸ் ஆதரவாளரை முஸ்லிம் மத வெறியர்கள் சுட்டுக் கொன்றனர்’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ செய்தி பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.
Facebook Claim Link l Archived Link
உண்மை அறிவோம்:
சமீபத்தில் நடைபெற்ற கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்ற நிலையில், தென்னிந்திய மாநிலங்களில் இந்து மக்களுக்கு அநீதி இழைக்கப்படுவது போன்ற வதந்தி தொடர்ச்சியாக, சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
இதுபற்றி நாமும் அவ்வப்போது ஃபேக்ட்செக் செய்து வருகிறோம். இந்த சூழலில்தான் மேற்கண்ட வகையில் சிலர் கேரளாவில் ஆர்எஸ்எஸ் ஆதரவாளர் என்ற காரணத்திற்காகக் காரில் சென்ற பெண் ஒருவரை சாலையில் வழிமறித்து முஸ்லிம் மத வெறியர்கள் சுட்டுக் கொன்றனர் என்று குறிப்பிட்டு தகவல் பரப்புகின்றனர்.
ஆனால், இந்த வீடியோ பார்க்கும்போதே, இதில் இருப்பவர் பெண் போல வேடமிட்டுள்ளார் என்று தெளிவாக உணரலாம். அவரது தலையில் செயற்கையாக முடி வைத்திருப்பதையும் பார்க்க முடிகிறது.


இந்த வீடியோவில் ஒரு ஃபிரேமை பிரித்தெடுத்து, கூகுள் ரிவர்ஸ் இமேஜ் முறையில் நாம் தகவல் தேடியபோது, இந்த வீடியோ 2017ம் ஆண்டே CPIM Cyber Commune என்ற கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஃபேஸ்புக் ஐடி வெளியிட்டிருப்பதைக் கண்டோம்.
இதன்படி, 2017ம் ஆண்டு செப்டம்பர் 5ம் தேதியன்று நிகழ்ந்த Gauri Lankesh படுகொலை பற்றி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கேரளாவைச் சேர்ந்த DYFI (kalikavu) இயக்கத்தினர் செப்டம்பர் 8, 2017 அன்று நடத்திய தெரு நாடகக் காட்சி இதுவாகும். இந்த வீடியோவை எடுத்துத்தான் மேற்கண்ட வகையில் சிலர் வதந்தி பரப்புகிறார்கள்.
இதுதொடர்பாக, முழு ஆதாரத்தையும் கீழே இணைத்துள்ளோம்.
இறுதியாக, நாம் DYFI கேரள மாநில தலைவர் S Satheesh என்பவரை தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டோம். இதுபற்றி பேசிய அவர், ‘’இந்த வீடியோ பற்றி பரவும் தகவல் தவறானது. உண்மையில், இது சில ஆண்டுகளுக்கு முன்பாக நிகழ்ந்த கவுரி லங்கேஷ் படுகொலைக்கு எதிராக நடத்தப்பட்ட தெரு நாடகம். இதுபற்றி Malappuram Kalikav கிளை நிர்வாகியை உங்களிடம் பேசச் சொல்கிறேன்,’’ என்றார்.
இதன்பேரில் நம்மை தொடர்பு கொண்ட DYFI Malappuram Kalikav கிளை நிர்வாகி ஒருவர், ‘’இந்த வீடியோ கவுரி லங்கேஷ் படுகொலைக்கு எதிராக நடத்தப்பட்ட தெரு நாடகக் காட்சி மட்டுமே. உண்மையானதல்ல. யாரையும் இவ்வாறு நாங்கள் கொல்லவில்லை,’’ என்றார்.
எனவே, தெரு நாடகம் தொடர்பான பழைய வீடியோவை எடுத்து, ‘கேரளாவில் ஆர்எஸ்எஸ் ஆதரவாளர் சுட்டுக் கொலை’ என வதந்தி பரப்பியுள்ளதாகச் சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Title: கேரளாவில் ஆர்எஸ்எஸ் ஆதரவாளரை முஸ்லிம் மத வெறியர்கள் சுட்டுக் கொன்றதாகப் பரவும் வதந்தி…
Written By: Fact Crescendo TeamResult: False
