இந்தியாவின் முதல் பெண் போர்ட்டர் என்று பரவும் தகவல் உண்மையா?

இந்தியா | India சமூக ஊடகம் | Social

கணவன் உயிரிழந்த நிலையில் குடும்பத்தைக் காக்க, கேரள பெண் ரயிலில் சுமை தூக்கும் தொழிலாளியாக மாறினார் என்றும் அவர் தான் இந்தியாவின் முதல் பெண் போர்ட்டர் என்றும் ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

பெண் ஒருவர் ரயில் நிலையத்தில் பயணிகளின் உடைமை சுமைகளை சுமந்து வரும் புகைப்படம் ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “கணவர் இறந்த பிறகு தன் மூன்று குழந்தைகளுக்கு உணவு அளிக்க வேண்டி இந்திய ரயில்வேயில் முதல் பெண் போர்ட்டர் ஆக அவதாரம் எடுத்த கேரளப் பெண்மணி!” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை பலரும் சமூக ஊடக பக்கங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

கணவன் இறந்த நிலையில் குடும்பத்தைக் காப்பாற்ற ரயில் நிலையத்தில் சுமை தூக்கும் கூலித் தொழிலாளியாக பெண் ஒருவர் பணியாற்றி வருகிறார் என்று பகிர்ந்துள்ளனர். கேரளாவைச் சார்ந்தவர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவராகவே பெண்கள் வந்துவிட்ட நிலையில், சுமைதூக்கும் தொழிலாளியாக மாறியதை அதிசயமாக பகிர்ந்திருப்பது ஆச்சரியத்தை அளித்தது.

இந்த பெண் கேரளாவைச் சார்ந்தவரா, இவர்தான் இந்தியாவின் முதல் பெண் போர்ட்டரா என்று அறிய ஆய்வு செய்தோம். இந்த புகைப்படத்தைக் கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடினோம். அப்போது இந்த புகைப்படம் 2019ம் ஆண்டில் shutterstock.com என்ற புகைப்படம் விற்பனை செய்யும் தளத்திலிருந்து எடுக்கப்பட்டிருப்பது தெரிந்தது. அதில் மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூர் ரயில் நிலையத்தில் போர்ட்டராக வேலை செய்து வரும் சந்தியா மராவி (Sandhya Marawi) என்று குறிப்பிடப்பட்டிருந்தது. 

உண்மைப் பதிவைக் காண: shutterstock.com I Archive I yourstory.com I Archive

தொடர்ந்து தேடிய போது இந்த பெண் ஜபல்பூர் மாவட்டத்தில் உள்ள காட்னி ரயில் நிலையத்தில் வேலை செய்து வருகிறார் என்றும், 2016ம் ஆண்டு கணவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து அவரது வேலையை இவர் ஏற்றுச் செய்வதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் இவர் ஜபல்பூர் மாவட்டத்தின் குந்தம் என்ற கிராமத்தைச் சார்ந்தவர் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. இவர் இந்தியாவின் முதல் பெண் போர்ட்டர் என்றோ, கேரளாவைச் சார்ந்தவர் என்றோ அதில் குறிப்பிடப்படவில்லை.

முதல் பெண் போர்ட்டர் என்று யாராவது உள்ளார்களா என்று அறிய தொடர்ந்து தேடினோம். ராஜஸ்தானில் சந்திர கலா என்ற பெண் ரயில்வே போர்ட்டராக இருந்துள்ளார் என்று செய்திகள் கிடைத்தன. வடமேற்கு ரயில்வேயின் ஜெய்ப்பூர் ரயில் நிலையத்தில் முதல் பெண் போர்ட்டர் மஞ்சு தேவி என்று மற்றொரு செய்தியும் கிடைத்தது. 2013ம் ஆண்டிலேயே அவரைப் பற்றிய செய்தி ஊடகங்களில் வெளியாகி இருந்ததைக் காண முடிந்தது. ஆனால் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவில் உள்ள பெண்ணே, 2017ம் ஆண்டில் இருந்துதான் போர்ட்டராக பணியாற்றி வருகிறார் என்று செய்திகள் கூறுகின்றன.

இதன் மூலம் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவில் உள்ள பெண் கேரளாவைச் சார்ந்தவரும் இல்லை, அவர் இந்தியாவின் முதலாவது பெண் ரயில்நிலைய சுமை தூக்கும் தொழிலாளியும் இல்லை என்பது உறுதியாகிறது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

மத்திய பிரதேசத்தில் 2017ம் ஆண்டில் இருந்து போர்ட்டராக பணியாற்றி வரும் பெண்ணின் புகைப்படத்தை கேரளாவைச் சார்ந்த இந்தியாவின் முதல் பெண் போர்ட்டர் என்று தவறாக சமூக ஊடகங்களில் பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I X Post I Google News Channel I Instagram

Avatar

Title:இந்தியாவின் முதல் பெண் போர்ட்டர் என்று பரவும் தகவல் உண்மையா?

Written By: Chendur Pandian  

Result: False