
சபரிமலை ஐயப்பன் கோவில் பிரசாதமான அரவண பாயாசம் தயாரிப்பு மற்றும் விற்பனை உரிமத்தைத் துபாயைச் சேர்ந்த இஸ்லாமிய நிறுவனத்துக்கு கேரள அரசு வழங்கிவிட்டது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive
Al Zahaa என்ற நிறுவனம் தயாரித்த அரவண பாயாச பாட்டில் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இது சபரிமலைல விற்கப்படும் அரவண பாயாசம் நெய்வேத்யம். உருதுல எழுதிருக்கு. யாரு டெண்டர் எடுத்து இருக்கிறது. பினராயி விஜயனின் மகளோட இரண்டாவது கணவர் ஜெயிலுக்கு போயிட்டு வந்த இஸ்லாமியரா இல்லை அவருக்கு வேண்டபட்ட உறவினரா நண்பர்கள்? ஏன்டா இந்த அக்கப்போர் பண்றீங்க. இனிமே இருமுடி கட்டி சபரிமலைக்கு போற ஐயப்ப சாமிகள் அரவண பாயாசம் வாங்காமல் உண்டியலில் காசு பணம் போடாமல் வாங்க” என்று நீண்ட பதிவிடப்பட்டுள்ளது. இந்த பதிவை Suresh Krishna என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்ட நபர் 2021 நவம்பர் 13ம் தேதி பதிவிட்டுள்ளார்.

அசல் பதிவைக் காண: Facebook
இதே போன்று விஜய பாரதம் என்ற இணைய ஊடகம் வெளியிட்டதாக ஒரு செய்தியை Guru Krishna என்ற ஃபேஸ்புக் ஐடி-யைக் கொண்ட நபர் 2021 நவம்பர் 19ம் தேதி பதிவிட்டுள்ளார். அதில், “அரேபியர் தயாரிப்பில் அரவண பிரசாதம்? சபரிமலையின் புனிதத்தன்மையை சிதைக்கும் வகையில் ஹிந்து விரோத போக்குடன் நடந்துகொள்கிறது அக்கோயிலை நிர்வகிக்கும் திருவிதாங்கூர் தேவசம் போர்டு. அரவானை பாயசத்தை தயாரித்து அளிக்கும் உரிமையை ஐக்கிய அரசு அமீரகத்தைச் சேர்ந்த அஜ்மான் அன்ட் கோ நிறுவனத்தின் துணை நிறுவனமான அல் ஜஹாவுக்கு அளித்துள்ளது திருவிதாங்கூர் தேவசம் போர்டு” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
திருவிதாங்கூர் தேவசம் போர்டு அனுமதி அளித்து தயாரிக்கப்பட்ட அரவண பாயாசம் என்று படத்தை வெளியிட்டுள்ளனர். ஆனால், அதில் எந்த இடத்திலும் சபரி மலை ஐயப்பன் கோவில் என்றோ, திருவிதாங்கூர் தேவசம் போர்டு என்றோ, முக்கியமாக ஐயப்பன் படமோ இல்லை. சபரி மலை தேவஸ்தானம் வழங்கும் அரவண பிரசாதத்தில் கோவில் பெயர் கூடவா இல்லாமல் இருக்கும் என்ற சந்தேகம் எழுந்தது.
அரவண பாயாசம் என்பது சபரி மலை ஐயப்பன் கோவிலில் மட்டும் தயாரிக்கப்படும் இனிப்பு என்று கூற முடியாது. திருப்பதியில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுகிறது. எல்லா இனிப்பகங்களிலும் லட்டு விற்பனை செய்யப்படுகிறது. அதற்காக தமிழ்நாட்டில் உள்ள கடைகளில் விற்பனையாகும் எல்லா லட்டும், திருப்பதி லட்டுதான் என்று கூறினால் எப்படி இருக்குமோ அது போன்ற குற்றச்சாட்டு போல தெரிந்தது. பலரும் இதை பகிர்ந்து வரவே, இந்த தகவல் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டோம்.

முதலில் Al Zahaa நிறுவனம் தயாரிக்கும் அரவண பாயாசம் பற்றி ஆய்வு செய்தோம். கூகுளில் Al Zahaa என்று டைப் செய்து தேடினோம். அந்த நிறுவனத்தின் இணையதளம் செயல்பாட்டில் இல்லாமல் இருந்தது. எனவே, நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ மலையாளம் பிரிவைத் தொடர்புகொண்டு விசாரித்தோம். துபாயைச் சேர்ந்த இஸ்லாமிய நிறுவனம் சபரிமலைக்கு அரவண பாயாசத்தைத் தயாரித்துக் கொடுக்கிறது என்று பகிரப்படும் தகவல் தவறானது என்று கூறிய அவர்கள், இது தொடர்பாக திருவிதாங்கூர் தேவசம் போர்டு மற்றும் Al Zahaa நிறுவனத்தைத் தொடர்புகொண்டு பேசி இந்த தகவல் தவறானது என்று உறுதி செய்துள்ளதாக நம்மிடம் தெரிவித்தனர். மேலும், இது தொடர்பாக மலையாளம் ஃபேக்ட் கிரஸண்டோவில் வெளியான கட்டுரையையும் நமக்கு அளித்தனர்.
திருவிதாங்கூர் தேவசம் போர்டு மக்கள் தொடர்பு அதிகாரி டி.கே.ரமேஷ்குமாரிடம் இது தொடர்பாக கேட்டகப்பட்டது. அதற்கு அவர், “இந்த தகவல் முற்றிலும் தவறானது. சபரி மலையில் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படும் அரவண பாயாசம் டின் டிசைன் வேறு. சபரிமலையில் விற்பனை செய்யப்படும் அரவண பாயாசத்தின் தயாரிப்பு மற்றும் விநியோகத்தை சபரி மலைக் கோவிலே மேற்கொள்கிறது. வேறு எந்த ஒரு தனியார் நிறுவனத்துக்கும் தயாரிப்பு உரிமம் வழங்கப்பபடவில்லை. தயாரித்து வழங்கும் அவுட் சோர்ஸ் பணியும் வழங்கப்படவில்லை. பலரும் அரவண பாயாசத்தைத் தயாரிக்கின்றனர், விற்பனை செய்கின்றனர். ஆனால் உண்மையான அரவண பாயாசம் சபரிமலையில்தான் தயாரிக்கப்படுகிறது. அரவண பாயாசம் தயாரிப்பது எப்படி என்று பல வீடியோக்கள் யூடியூபிலேயே இருக்கிறது” என்றார்.

Al Zahaa Sweets LLC நிறுவனத்தைத் தொடர்புகொண்டு விசாரித்த போது, “ஐக்கிய அரபு எமிரேட்சை சேர்ந்த எங்கள் நிறுவனம் பல்வேறு வகையான இனிப்புகள், காரம், டெசர்ட், அரேபிய இனிப்பு வகைகளைத் தயாரித்து விற்பனை செய்கிறது. எங்கள் தயாரிப்புகள் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் முழுக்க விற்பனையாகிறது. நாங்கள் மிகவும் மிகவும் சுத்தமாகவும் சுகாதாரமான முறையிலும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசு வழிகாட்டுதல் தரத்தின் அடிப்படையில் உணவுப் பொருட்களை தயார் செய்கிறோம். எங்களின் பிரபலமான அரவண பாயாசம் எந்த ஒரு மதம், சாதி, நம்பிக்கையுடன் தொடர்புடையது இல்லை. சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கும் இந்த அரவண பாயாசத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை. அரவண என்பதற்கு “கூழ்” என்று அர்த்தம். அரிசி சாதம், வெல்லம் கொண்டு தயாரிக்கப்படும் கூழ் என்று அர்த்தம் கொள்ளலாம். நாங்கள் அரவண பாயாசத்தை மட்டுமே தயாரிக்கிறோம், அரவண பிரசாதத்தைத் தயாரிக்கவில்லை. மேலும், இது ஹலால் செய்யப்பட்ட உணவும் இல்லை” என்று தெளிவுபடுத்தினர்.
இதன் மூலம் கேரளாவில் ஆட்சியில் உள்ள கம்யூஸ்ட் அரசு சபரிமலை ஐயப்பன் கோவில் அரவண பாயாசம் தயாரிக்கும் டெண்டரை இஸ்லாமிய நிறுவனத்துக்கு வழங்கிவிட்டது… இஸ்லாமிய நிறுவனம் ஹலால் முறையில் சபரிமலை ஐயப்பன் கோவில் அரவண பிரசாதத்தை தயாரிக்கிறது என்று பரவும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
சபரிமலை ஐயப்பன் கோவிலின் பிரசாதமான அரவண பாயாசம் தயாரிப்பு உரிமத்தை ஐக்கிய அரபு நாட்டைச் சேர்ந்த இஸ்லாமிய நிறுவனத்திடம் கேரள அரசு வழங்கிவிட்டது என்று பகிரப்படும் தகவல் தவறானது என்பதை ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:சபரிமலை அரவண பாயாசம் தயாரிப்பதை இஸ்லாமியர்களிடம் ஒப்படைத்ததா கேரள அரசு?
Fact Check By: Chendur PandianResult: False
