
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, பிராமணர்களுக்கு எதிரானவர் என்று காயத்ரி ரகுராம் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
காயத்ரி ரகுராம் புகைப்படத்துடன் கூடிய தந்தி டிவி வெளியிட்டது போன்ற நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “பிராமணர்களுக்கு எதிரானவர் அண்ணாமலை! பாஜகவில் பிராமணர்கள் யாரும் முக்கியப் பொறுப்புக்கு வரக்கூடாது என நினைக்கிறார் அண்ணாமலை. எந்த தவறும் செய்யாத ராகவனைப் போலவே என்னையும் திட்டமிட்டு வெளியேற்றியுள்ளனர். தேச பக்தி கொண்ட பிராமணர்களால் மட்டும் தான் பாஜகவிற்கு வாக்களிக்கவும் – உழைக்கவும் முடியும். நடிகை காயத்ரி ரகுராம் பேட்டி!” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த பதிவை சு. செங்குட்டுவன் என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்ட நபர் 2022 நவம்பர் 22ம் தேதி பதிவிட்டுள்ளார். இவரைப் போல பலரும் இந்த நியூஸ் கார்டை பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:
பாஜக வெளிநாடு, அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவு தலைவர் பொறுப்பில் இருந்து ஆறு மாதங்களுக்கு காயத்ரி ரகுராம் நீக்கப்படுவதாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்தார். அதைத் தொடர்ந்து அண்ணாமலையை காயத்ரி ரகுராம் கடுமையாக விமர்சித்த்து வருவதாக போலியான நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. தற்போது, எந்த தவறும் செய்யாத ராகவன் போல தன்னையும் வெளியேற்றியுள்ளனர் என்று காயத்ரி கூறியதாக புதிய நியூஸ் கார்டு பகிரப்பட்டு வருகிறது. காயத்ரி ரகுராம் பற்றிப் பல போலியான நியூஸ் கார்டுகள் வைரலாக பகிரப்பட்டு வரும் நிலையில் இந்த நியூஸ் கார்டு பற்றி ஆய்வுக்கு எடுத்துக்கொண்டோம்.
நியூஸ் கார்டின் பின்னணி டிசைன், தமிழ் ஃபாண்ட் போன்றவை வழக்கமாகத் தந்தி டிவி வெளியிடும் நியூஸ் கார்டில் உள்ளது போல இல்லை. இந்த நியூஸ் கார்டை தந்தி டிவி வெளியிட்டதா என்று அறிய 2022 நவம்பர் 22ம் தேதி தந்தி டிவி வெளியிட்ட நியூஸ் கார்டுகளை அதன் ஃபேஸ்புக் பக்கத்தில் பார்த்தோம். அதில், நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டது போன்று நியூஸ் கார்டு ஒன்று இருந்தது. ஆனால் அதில் பிராமணர்களுக்கு எதிரானவர் அண்ணாமலை என்று இல்லை.

உண்மைப் பதிவைக் காண: Facebook
அதில், “கட்சி பொறுப்பு இல்லையென்றாலும் நான் பாஜக தொண்டர் தான். பாஜக மேலிடம் அழைத்தால் நிச்சயம் விளக்கம் அளிப்பேன். மேலிடம் அழைக்கும்போது, தமிழக பாஜகவில் நடப்பதைத் தெளிவாக தெரிவிப்பேன் – காயத்ரி ரகுராம்” என்று இருந்தது. இந்த நியூஸ் கார்டை எடிட் செய்து பகிர்ந்திருப்பது தெளிவானது.
இதை உறுதி செய்ய தந்தி டிவி டிஜிட்டல் பிரிவு பொறுப்பாளருக்கு இந்த நியூஸ் கார்டை அனுப்பி, இது உண்மையானதுதானா என்று கேட்டோம். அதற்கு அவர், இது போலியான நியூஸ் கார்டு என்று உறுதி செய்தார். அதே நேரத்தில் இந்த நியூஸ் கார்டு போலியானது என்று குறிப்பிட்டு காயத்ரி ரகுராம் ட்விட்டரில் பதிவிட்டிருந்ததும் தெரிந்தது.
இந்த ஆதாரங்கள் அடிப்படையில், பிராமணர்களுக்கு எதிரானவர் அண்ணாமலை என்று காயத்ரி ரகுராம் கூறியதாகப் பரவும் தந்தி டிவி நியூஸ் கார்டு போலியானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, பிராமணர்களுக்கு எதிரானவர் என்று காயத்ரி ரகுராம் கூறியதாக பரவும் நியூஸ் கார்டு போலியானது என்பதை ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…Facebook I Twitter I Google News Channel

Title:பிராமணர்களுக்கு எதிரானவர் அண்ணாமலை என்று காயத்ரி ரகுராம் கூறினாரா?
Fact Check By: Chendur PandianResult: False
