மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் காலணியை டைம்ஸ் நவ் நெட்வொர்க் குழுமத் தலைமை ஆசிரியர் நவிகா குமார் துடைப்பது போன்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
பிரபல ஆங்கில தொலைக்காட்சியின் ஆசிரியர் நவிகா என்பது கூட தெரியாமல் யாரோ ஒரு பெண்மணி அமித்ஷாவின் காலணியைத் துடைத்தார் என்று வீடியோவை ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளனர். நிலைத் தகவலில், “தேர்தல். பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்ட உள்துறை அமைச்சர் அமித்ஷா பிரசாரத்திற்காண.! வாகன பயணத்தின்போது ஒரு பெண்ணிடம் தனது
காலணிகளை காட்டி துடைக்க செல்கிறார், நாட்டிலுள்ள வாக்காளர்கள் அனைவரும், இம்மாதிரியான பாஜக தலைவர்களுக்கு பாடம் புகட்டுங்கள் இந்த வீடியோ நாட்டுமக்கள் அனைவருக்கும் சமர்ப்பணம்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
இந்தியாவின் பிரபலமான ஆங்கில ஊடகத்தின் குழும தலைமை ஆசிரியராக இருப்பவர் நவிகா குமார். இவர் பாஜக-வுக்கு ஆதரவாக செயல்படக் கூடியவர் என்ற கருத்து சமூக ஊடகங்களில் உள்ளது. இந்த நிலையில் வீடியோவில் இருப்பவர் நவிகா குமார் என்பது கூட தெரியாமல் பெண் ஒருவர் அமித்ஷாவின் காலணியைத் துடைத்துவிட்டார் என்று பதிவிட்டுள்ளனர்.

அமித்ஷாவின் முக பாவனை, நவிகா குமாரின் கை கடிகாரம் திடீரென்று வளையலாக மாறுவது, அமித்ஷாவின் மூக்கு கண்ணாடி திடீரென்று மறைவது என்று பல காட்சிகள் இது ஏஐ மூலம் உருவாக்கப்பட்டது என்பதை உறுதி செய்தன. மேலும் ஏஎன்ஐ செய்தி நிறுவத்தின் லோகோவும் தவறாக இருந்தது. உண்மையில் நவிகா குமார் அமித்ஷாவின் காலணியைத் துடைத்திருந்தால் அதை ஊடகம் வெளியிட்டிருக்க வாய்ப்பில்லை. இவை எல்லாம் இந்த வீடியோ போலியானது என்பதை உறுதி செய்கின்றன.
ஆதாரங்கள் அடிப்படையில் இதை உறுதி செய்ய, வீடியோ காட்சியை புகைப்படங்களாக மாற்றி கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடினோம். அப்போது நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவில் உள்ளது போன்று அமித்ஷா அருகிலிருந்து நவிகா குமார் எடுத்திருந்த செல்ஃபி புகைப்படம் எக்ஸ் தளத்தில் வெளியாகி இருந்ததைக் காண முடிந்தது. அந்த புகைப்படத்தை நவிகா குமார் வெளியிட்டிருந்தார். அந்த புகைப்படத்தை எடுத்து ஏஐ மூலம் வீடியோவாக வெளியிட்டிருக்கலாம் என்று தெரிந்தது.

இந்த வீடியோ காட்சியை ஏஐ புகைப்படங்களைக் கண்டறிய உதவும் இணையதளத்தில் பதிவேற்றித் தேடினோம். decopy.ai என்ற இணையதளத்தில் இந்த புகைப்படத்தை பதிவேற்றி ஆய்வு செய்த போது 100 சதவிகிதம் இது ஏஐ புகைப்படம் என்று கூறியது. இதற்கு முகத்தின் பாவனை வெளிப்பாடு, உடைகளை நிற மாற்றம் என்று பல்வேறு காரணங்களைச் சுட்டிக்காட்டி ஏஐ காட்சிதான் என்று உறுதி செய்தது. தொடர்ந்து தேடிய போது நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ மலையாளத்திலும் கூட இந்த வீடியோ தொடர்பான கட்டுரை வெளியாகி இருந்தது. அந்த கட்டுரையைக் காண இங்கே கிளிக் செய்யுங்கள். இவை எல்லாம் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோ போலியானது என்பதை உறுதி செய்தன.
முடிவு:
அமித்ஷா காலணியை துடைத்த டிவி ஊடக ஆசிரியர் நவிகா என்று பரவும் வீடியோ ஏஐ மூலம் உருவாக்கப்பட்டது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I X Post I Google News Channel I Instagram
Title:அமித்ஷாவின் காலணியை துடைத்த நவிகா என்று பரவும் வீடியோ உண்மையா?
Fact Check By: Chendur PandianResult: Altered


